You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையின் 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி - மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர் விலகல்
- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் மூன்று முஸ்லிம் உறுப்பினர்களில், இருவர் ஏற்கெனவே பதவி விலகியுள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு நபரும் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்தச் செயலணியின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் முடிந்துள்ள நிலையில், இதன் அறிக்கை இன்னும் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் இந்த மூன்று முஸ்லிம் உறுப்பினர்களின் கையொப்பம் இன்றியே அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் சூழல் உண்டாகியுள்ளது.
முஸ்லிம் உறுப்பினர்கள் மூவர் பதவி விலகியது குறித்து இப்போதைக்கு கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று அதன் தலைவரும் பௌத்த துறவியுமான லகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினரான கலீலுர் ரஹ்மான் என்பவரே, 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக, மே 26ஆம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அறிவித்துள்ளார்.
மேற்படி செயலணியிலிருந்து ஏற்கெனவே முஸ்லிம் உறுப்பினர்களான அஸீஸ் நிஸாருத்தீன், இந்திகாஃப் சூஃபர் ஆகியோர் விலகியுள்ளனர்.
'ஒருபாலுறவை குற்றமாகக் கருதக்கூடாது என்பது அநாகரிகம்' - கலீலுர் ரஹ்மான்
"ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியானது, முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தம் செய்து அவற்றை பாதுகாப்பதற்கு பதிலாக, அந்த சட்டத்தை பறித்தெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், அதனாலேயே அந்த செயலணியிலிருந்து தான் விலகத் தீர்மானித்ததாகவும் பதவி விலகியுள்ள கலீலுர் ரஹ்மான், பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.
"ஒருபாலுறவைக் குற்றமாகக் கருதக் கூடாது என, அநாகரிகமான ஒரு செயற்பாட்டை, 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், முஸ்லிம்களின் நாகரிகமான ஆடை விடயங்கள், முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் மற்றும் சொத்துச் சட்டங்களை 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி எவ்வாறு நிராகரிக்க முடியும் என, ஜனாதிபதிக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் கேள்வியெழுப்பியுள்ளேன்" எனவும் அவர் கூறினார்.
அதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சிங்கள நபர்கள், அவர்களின் குற்றத்தின் தராதரம் பாராது விடுவிக்கப்பட வேண்டுமென, 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் உத்தேச அறிக்கை வரைவில் குறிப்பிடப்பட்டமை போன்று, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான நபரான சஹ்ரானுடன் பழகினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என, ஜனாதிபதிக்கு தான் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் கலீலுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஏற்கெனவே ரம்புக்கண பிரதேசத்தில் போலீஸ் அராஜகமாக நடந்து கொண்டமைக்கு எதிர்ப்பினை வெளியிடும் வகையிலும், நாட்டில் எழுச்சி பெற்றுள்ள மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, அந்த செயலணியின் முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவரான அஸீஸ் நிஸாருத்தீன் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி விலகினார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியானது, நான்கு முஸ்லிம்கள், மூன்று தமிழர்கள் மற்றும் ஆறு சிங்களவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
இந்த செயலணிக்கு சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக உள்ளார்.
எதற்காக இந்தச் செயலணி?
'இலங்கைக்குள் ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்' எனும் நடவடிக்கைக்காக இந்த செயலணி உருவாக்கப்பட்டது.
"இலங்கைக்குள் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்பதைச் செயற்படுத்துவதற்கான ஆய்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டமூலம் ஒன்றைத் தயாரிப்பதற்கான பொறுப்பு, 'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று, இந்த செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் சுமேத சிறிவர்தன ஒரு தடவை தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, "சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் இந்தச் செயலணிக்கு வழங்கப்படவில்லை" என்றும் "அது, அரசியலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படும்" எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
எந்த இனம், மதம் அல்லது அரசியல் கட்சியாக இருந்தாலும், அவை எல்லாவற்றுக்கும் மேலாக - முதலிடத்தில் நாட்டை முதன்மைப்படுத்திச் செயற்படுத்துவதாயின், அத்தகைய ஒரு நாட்டின் சட்டக் கட்டமைப்புக்கான அனைத்துக் கருத்துகளையும் செவிமடுக்க வேண்டுமென்றும், அதற்கு 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி தயாராக இருப்பதாகவும், அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், செயலணி பற்றி ஊடகங்களுக்கு முதன்முதலாக தெளிவுபடுத்தியபோது தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.
இதன் அடிப்படையில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று வந்த 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி, அதன் இறுதி அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளிக்கும்.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த செயலணியின் பதவிக் காலம் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து, மேலும் மூன்று மாதங்களுக்கு செயலணியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், மே 28ஆம் தேதி 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும், இந்த செயலணியின் இறுதி அறிக்கையில் சகல உறுப்பினர்களும் கையொப்பமிட வேண்டியுள்ளதாகவும், ஆனால், முஸ்லிம் உறுப்பினர்கள் மூவர் விலகியுள்ளமையினால் அவர்களின் கையொப்பங்களின்றியே 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் கலீலுர் ரஹ்மான் பிபிசி தமிழுக்கு மேலும் தெரிவித்தார்.
செயலணியின் தலைவர் என்ன சொல்கிறார்?
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் மூன்றாவது முஸ்லிம் உறுப்பினர் பதவி விலகியமை தொடர்பில், அந்த செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் கருத்துக் கேட்டபோது, "மூன்று முஸ்லிம் உறுப்பினர்களும் பதவி விலகியுள்ளனர். அதில் அவர்களின் அபிப்ராயங்களையும் கூறியுள்ளனர். அது தொடர்பில் இப்போதைக்கு கருத்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஒரு வாரத்திற்குள் அதுபற்றி கூறுவேன்" என்றார்.
"செயலணியின் இறுதி அறிக்கையை அச்சிடும் பணிகள் நடந்து வருகின்றன. நாட்டிலுள்ள பொருளாதார நெருடிக்கடி காரணமாக அந்தப் பணி தாமதமடைந்து விட்டது. ஆனாலும் 10 நாட்களுக்குள் அச்சுப் பணிகள் முடிந்து விடும். அதன் பிறகு ஜனாதிபதியிடம் அதனை கையளிப்போம்" எனவும் ஞானசர தேரர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்