இலங்கை பொருளாதார நெருக்கடி: "நான் பதவி விலக மாட்டேன்" - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

Sri Lanka - PMO

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டேன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் சங்கம் ஆகியோருடன் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்றுவது அத்தியாவசியமானது என அவர்கள் கூறியுள்ளனர்;.

69 லட்சம் பெரும்பான்மை மக்கள் இன்னமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாகவும், அவர்களது மௌனம் காரணமாக சிறு குழுவின் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களினாலும் விளம்பரம் கிடைத்தமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள், எதிர்கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான பல அரசியல் அமைப்புக்களினால் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை தூண்டிவிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தீவிரவாத சக்திகள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டை சீர்குலைக்க எதிர்பார்க்கும் வெளிநாட்டு சக்திகள் செயற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாட்டை வழிநடத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாவிட்டால், இன்று இவ்வாறான போராட்டங்களை நடத்துவதற்கான சூழல் உருவாகியிருக்காது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் கூறியதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இவ்வாறான நிலையில், இந்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை நிகழ்த்தினார். அவரின் உரையிலிருந்து,

''நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை, நாம் ஒவ்வொன்றாக தீர்த்து வருவதை நீங்கள் அறிவீர்கள். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அமைப்புக்கள் மாத்திரமன்றி, நட்பு நாடுகள் நமக்கு இந்த சந்தர்ப்பத்தில் உதவிகளை வழங்க முன் வந்துள்ளன.

இலங்கை மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன பிரதமருடன் நான் உரையாடினேன். ஏனைய நாடுகளின் பிரதமர்களுடன் கலந்துரையாடினேன். தமது ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அவர்கள் உறுதி வழங்கியுள்ளனர்.இந்த பிரச்னைகளை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர முடியும் என நான் நம்புகின்றேன்.

இந்த நிலைமையிலிருந்து மீண்டெழ முடியும் என நம்புகின்றேன். மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதற்கான ஒத்துழைப்புக்களை நீங்கள் தர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன். என்னை பதவி விலக வேண்டாம் என கூறுகின்றீர்கள். நான் பதவி விலக மாட்டேன். பயப்பட வேண்டாம். பதவியிலிருந்து நீக்க முடியும். ஆனால் பதவி விலக மாட்டேன். யாரையும் கண்டு அச்சம் கொண்டு, கைவிட்டு செல்ல மாட்டேன் என்பதை நினைவுப்படுத்திக் கொள்கின்றேன்."

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒட்டு மொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என கோரி, இலங்கை முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்ற பின்னணியிலேயே, பிரதமர் இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: