இலங்கை பொருளாதார நெருக்கடி: மத்திய வங்கி முன்னாள் ஆளுநருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்?

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிற்கு வெளிநாடு செல்ல, கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் (07) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவியல் நம்பிக்கை மீறல், வங்கியாளரினால் முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் குற்றவியல் சட்டம் மற்றும் பத்திரங்கள், பரிவர்த்தனைகள் கட்டளை சட்டத்தின் கீழ் நிதி மோசடி மற்றும் முறைகேடு இடம்பெற்றுள்ளமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் ஆளுநர் ரஞ்ஜித் கீர்த்தி தென்னக்கோன் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் என்ன?

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக 2006ம் ஆண்டு ஜுலை மாதம் 01ம் தேதி முதல் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் தேதி வரை இவர் பதவி வகித்துள்ளார். இந்த காலப் பகுதியில் அவரது நெருங்கிய உறவினர்கள் பலர் இலங்கையின் முதன்மை சந்தையில் மத்திய வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களாக இருந்துள்ளனர்.

  • இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பத்திரங்களை (நிதிசார்ந்த பத்திரங்களை) முதன்மை சந்தையில் விற்றதன் மூலம் இலங்கை குடியரசிற்கு சொந்தமான 10.04 பில்லியன் முதல் 10.06 பில்லியன் ரூபாய் வரை நஷ்டத்தை ஏற்படுத்தி குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களை செய்தல்.
  • இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பத்திரங்கள் தொடர்பான உள்ளக இரகசிய தகவல்களை ஊழல் மற்றும் மோசடியாக பயன்படுத்தியது இலங்கை தண்டனைச் சட்டத்தின்படி, தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரிப் பத்திரங்களை விற்பனை செய்து, அதன் மூலம் இலங்கைக்கு 10.04 முதல் 10.06 பில்லியன் வரை நஷ்டத்தை ஏற்படுத்துதலானது, பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை கட்டளை சட்டத்தின் கீழ் குற்றம்.
  • தன் பதவிக்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் இமாத் ஷா சுபேரி என்ற நபருக்கு அமைச்சரவை அங்கீகாரம் அல்லது நிதி சபையின் அனுமதி இன்றி இலங்கைக்கு சொந்தமான 6.5 மில்லியன் டாலர் பணத்தை வழங்கியது, வங்கியாளரினால் குற்றவியல் நம்பிக்கை சீர்குலைத்துள்ளமையின் ஊடாக குற்றம் செய்தல்.
  • அமைச்சரவை அங்கீகாரம் அல்லது நிதி சபையின் அனுமதி இன்றி இலங்கைக்கு சொந்தமான 6.5 மில்லியன் டாலர் பணத்தை வழங்கியதமையானது, அந்த பணத்தை மோசடியாகவும், ஊழலுடனும் பயன்படுத்திது குற்றவியல் தண்டனை சட்டக் கோவையில் தண்டனை பெறக்கூடிய குற்றம்.
  • 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதியளவில் காலாவதியாகும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திரங்கள் இலங்கை பொருளாதாரத்திற்கு சீர்செய்ய முடியாத மற்றும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அடையாளம் தெரியாத தரப்பினரின் நலனுக்காக 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதியளவில் பணத்தை செலுத்தியதன் ஊடாக, இலங்கை தண்டனை சட்டக் கோவையின் 388வது சரத்தின்படி, குற்றவியல் நம்பிக்கையை சீர்குலைத்தது அந்த சட்டத்தின் ஊடாக தண்டனை கிடைக்கக்கூடிய குற்றம் என கூறப்பட்டுள்ளது.

அவசரமாக வெளிநாடு செல்லல்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் இடம்பெற்று வரும் இந்த சூழ்நிலையில், அரசாங்கத்துடன் தொடர்புடைய பிரமுகர்கள், நெருங்கியவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடு செல்வது குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

இதன்படி, நாமல் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் குழந்தை, முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சமூக வலைதளங்களில் பதிவிடப்படுவதைப் போன்று இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமான நிலையத்தின் சிசிடிவி கேமரா கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டது அல்லது செயலிழக்கச்; செய்யப்பட்டது அல்லது நபர்களின் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைக்கப்பட்டமை ஆகிய முன்னெடுக்கப்படவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை (இலங்கை) (தனியார்) நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவிக்கின்றார்.

பயணிகள், பிரமுகர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது விமான நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வெளியான செய்திகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த 48 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிகள் மற்றும் பிரமுகர்கள் வெளியேறியமை தொடர்பில், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையிலான பல்வேறு உண்மைக்கு புறம்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: