இலங்கை பொருளாதார நெருக்கடி - அவதிப்படும் இந்திய வம்சாவளி தமிழர்கள் - கள நிலவரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
உலக பெருந்தொற்றான கோவிட் வைரஸ் தொற்று உள்ளிட்ட காரணங்களினால் பாரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை நாளுக்கு நாள் சந்தித்து வருகின்றது.
இலங்கையில் இதுவரை நிலையாக பேணப்பட்டு வந்த அமெரிக்க டொலர், கடந்த வாரம் முதல் நெகிழ்வு போக்குடன் தீர்மானிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருந்தது.
டொலருக்கான தட்டுப்பாடு அதிவுயர் மட்டத்தை அடைந்த பின்னணியிலேயே, இலங்கை மத்திய வங்கி இந்த தீர்மானத்தை எட்டியது.
இலங்கை மத்திய வங்கியின் இந்த தீர்மானம் அமலாக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் எண்ணி பார்க்க முடியாதளவு திடீரென அதிகரித்திருந்தது.
குறிப்பாக ஒரு லீட்டர் பெற்றோலின் விலை ஒரே தடவையில் சுமார் 77 ரூபாவினால் அதிகரித்ததுடன், ஒரு லீட்டர் டீசலின் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து, உள்நாட்டில் பஸ் கட்டணம் முதல் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் விலைகள் மற்றும் கட்டணங்கள் சடுதியாக கட்டுப்பாட்டை மீறி அதிகரித்தது.
இதனால், மக்கள் இன்று பெரும்பாலும் வறுமையின் உச்சத்தை தொட்டுள்ளனர்.

இந்த நிலையில், தேயிலை தொழில்துறையின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தின் பாரிய பங்களிப்பை வழங்கிய, உலகிற்கு சிலோன் டீ என்ற அடையாளத்தை பெற்றுக்கொடுத்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் குறித்து, பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
இலங்கையில் கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர என்ற இடத்தில் 1867ஆம் ஆண்டு முதல் முதலில் ஜேம்ஸ் டெய்லரினால் தேயிலை நடப்பட்டுள்ளது.
இலங்கையில் தேயிலை செய்கைக்கு முன்னரான காலத்தில் கோப்பி செய்கையே காணப்பட்டதுடன், அந்த காலப் பகுதியில் கோப்பி செய்கைக்கு ப்லையிட் என்ற நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாற்று செய்கையை நோக்கி நகர சிந்தித்த ஜேம்ஸ் டெய்லர், தேயிலை செய்கையை ஆரம்பித்திருந்தார்.
லூல்கந்துர என்ற இடத்தில் 19 ஏக்கர் நிலப் பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேயிலை தொழில், இறுதியில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் துறையாக மாற்றம் பெற்றது.
இவ்வாறு இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்ற, இந்திய வம்சாவளித் தமிழர்கள், அன்று முதல் இன்று வரை வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
எனினும், இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி அந்த மக்களை வறுமையின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
இலங்கையில் தேயிலை துறை ஆரம்பிக்கப்பட்ட லூல்கந்துர பிரதேசத்தில் வாழும், இந்திய வம்சாவளித் தமிழர்களை பிபிசி தமிழ் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை கேட்டறிந்து கொண்டது.

லயின் வீடுகளில் வாழும் இந்த மக்கள், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இன்று ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவை மாத்திரமே உட்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
லூல்கந்துர பகுதியைச் சேர்ந்த பரிமளா பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
''இன்னைக்கு மா 140 ரூபா. எங்களுக்கு கஷ்டம் தான். சாப்பாடுக்கும் கஷ்டம் தான். நான் வேலைக்கு போனா தான். இல்லாட்டி இல்ல. வீடு வசதியும் இல்ல. வேல செய்றவங்களுக்கு மட்டும் தான் வீடு. ஒரு நாளைக்கு வேல செய்தா 600 ரூபா தான் கிடைக்கும். வருமானம் பத்தாது. வேலை செய்ற இடத்துல சம்பளத்த கூட்டி கேட்டா, எங்களுக்கு இவ்வளவு தான் கொளுந்து, இவ்வளவு தான் கொடுக்க முடியும் என்பாங்க. வேலய செய்துட்டு, பேசாம வீட்டுல வந்து இருப்பேன்" என பரிமளா தெரிவித்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த பூபதி இவ்வாறு தனது கஷ்டத்தை பகிர்ந்து கொண்டார்.

''ஒரு காணியும் கொடுக்குறாங்க இல்ல. வேறு ஒன்னும் கொடுக்குறாங்க இல்ல. அரிசி மா இந்த விலையா இருக்கு. நாங்க எப்படி சாப்பிடுறது. அரிசி இந்த விலை. மா இந்த விலை. மரக்கறி இந்த விலை. சீனி இந்த விலை. எப்படி இந்த பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து வளக்குறது. காப்பாத்துறது. எங்களுக்கு கால சாப்பாடுக்கு ஒன்றரை சிண்டு அரிசி வைக்கனும். பகல் சாப்பாடு. ஒரு நேரம் சாப்பிடுறோம். ஒரு நேரம் சாப்பிடாமலும் இருக்கிறோம். நாங்க மூன்று நேரமும் கணக்கு பன்னி சாப்பிட போனோமுனா, எங்க நிலைமை என்னாகும்? ஒரு நேரம் சாப்பாடு இல்லாம, ரெண்டு நேரம் சாப்பாடு சாப்பிட்டு தான் குடும்பம் கொண்டு போறோம். இப்ப கிட்டத்துல அரிசி மாவு எல்லாம் விலை கூடினதுக்கு பிறகு தான்" என பூபதி தனது கவலையை தெரிவித்தார்.
வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க செல்லவே பயமா இருக்கு என லூல்கந்துர பகுதியைச் சேர்ந்த யோக லெட்சுமி தெரிவிக்கின்றார்.
''வார வருமானம் பத்தாது. வேல செய்றோம். தோட்டத்துல தான் வேல. காலயில சாப்பிட மாட்டோம். தேதனி ஒன்னு குடிச்சிட்டு போவோம். 10, 11 மணிக்கு தான் சாப்பிடுவோம். பகலைக்கு 2 மணிக்கு சாப்பிடுவோம். கொளுந்து எடுக்கனும் பெயருக்கு. இல்லனா அரை பெயரு. கொளுந்து எடுத்தா தான் பெயரு. ஆனால் கொடுக்குற சம்பளம் பத்தாது. 20,000தை கொண்டு போனாலும், 10,000 ரூபா பெறுமதியான சாமானை தான் வாங்க முடியுது இன்னைக்கு. தேத்தனி குடிக்கயில. மாவு அரவே இல்ல. நான் ஒரு ஆள் தான் வீட்டு வேல செய்றேன். மாசம் 12,000 ரூபா சம்பளம் வாங்கினாலும், பத்தாது. விலைவாசிக்கு சாமான் எடுக்க போகவே பயமா இருக்கு" என யோக லெட்சுமி தெரிவிக்கின்றார்.
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மலையக மக்கள், அன்று முதல் வாழ்வதற்கு கூட முடியாத நிலையில் தமது வாழ்நாட்களை கடத்தி வந்த பின்னணியில், வாழ்க்கை செலவு பல மடங்காக அதிகரித்துள்ளமை, அவர்களை மேலும் வறுமை கோட்டின் அடி மட்டத்திற்கே கொண்டு சென்றுள்ளமையை அவர்களை சந்தித்த எம்மால் காண கூடியதாக இருந்தது.

தேயிலை செய்கை உருவான இந்த லூல்கந்துர பகுதிக்கு செல்வதற்கு கூட ஒரு சரியான பாதை இல்லாமை, போக்குவரத்து வசதிகள் இல்லாமை, மருத்துவமனை வசதிகள் இல்லாமை, தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வர்த்தக நிலையங்கள் இல்லாமை, அந்த மக்களை மேலும் பின்னடைவை நோக்கி கொண்டு செல்கின்றது.
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், மலையக பகுதிகளில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்கள் மாத்திரமன்றி, நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற இந்த தருணத்தில், அந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் இன்றும் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
அதேபோன்று, பால் மா உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
மேலும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்றும் நாடு முழுவதும் பல மணிநேர மின்சார வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமது எதிர்காலத்தை எண்ணி அச்சம் நிலவி வருவதாகவே மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், எரிபொருள் கொள்வனவுக்கான இந்தியாவினால் முதல்கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி எதிர்வரும் ஓரிரு வாரங்களில் கிடைக்கவுள்ள நிலையில், அந்த கடனுதவி கிடைத்ததை அடுத்தே ஓரளவேனும் எரிபொருள் பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கையுடன் அரசாங்கம் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












