இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா வருகை - நோக்கம் என்ன?

Prof. G L Peiris

பட மூலாதாரம், Prof. G L Peiris/FACEBOOK

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இன்று இந்தியாவிற்கு மூன்று நாள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருவது, மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.

சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்;.

வெளியுறவுத்துறை அமைச்சர், பல்வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி, இந்தப் பயணத்தில் ஈடுபடுவதாக வெளியுறவுத்துறை அமைச்சரின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்துவதற்கும், பௌத்த மதம் தொடர்பிலான பல்வேறு திட்டங்களை ஆரம்பிப்பதற்கும், இந்திய - இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவினால் இலங்கைக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இந்தியாவிடமிருந்து கிடைக்கும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்துவதற்காகவே வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவிற்கான வருகையை மேற்கொள்கிறார்.

Prof. G L Peiris

பட மூலாதாரம், Prof. G L Peiris/FACEBOOK

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் இந்த விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட மேலும் சிலரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளரின் பார்வை

இலங்கை பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த தருணத்தில், இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவித் திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கிலேயே வெளிவிவகார அமைச்சர் இந்தியப் பயணத்தை மேற்கொள்வதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

R.SIVARAJA

பட மூலாதாரம், R.SIVARAJA

அதேபோன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான முன் ஏற்பாடுகளை செய்வதற்காகவுமே, வெளிவிவகார அமைச்சர், இந்தியப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட நிதி உதவிகளினாலேயே, இலங்கை பொருளாதார ரீதியில் எதிர்கொண்ட பாதிப்புக்களிலிருந்து மீண்டெழ முடிந்ததாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினை குறித்து, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.

இலங்கை மின்சார சபைக்கு, எரிபொருளை இந்தியாவிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த கலந்துரையாடல் தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளதார நெருக்கடியை தணிப்பதற்காக, இந்தியாவின் உதவிகளை மேலும் எதிர்பார்ப்பதே, இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்தியப் பயணத்துக்கான முக்கிய நோக்கமாகத் தெரிகிறது என்றும் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: