கச்சத்தீவில் கூடிய இந்தியா, இலங்கை மீனவர்கள் - மனம் விட்டுப் பேச்சு நடத்த ஒப்புதல்

இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் கச்சத்தீவில் இன்று (11) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய உற்சவத்தில் பங்குப்பற்றுவதற்காக வருகைத் தந்துள்ள மீனவர்களுக்கு இடையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, இரண்டு நாட்டு மீனவர்களும், தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்திய மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழிலினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து, இலங்கை மீனவர்கள் இதன்போது கருத்துரைத்திருந்தனர்.

வட மாகாண கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் அன்னராசா இதன்போது கருத்து தெரிவித்தார்.

''தொப்புள் கொடி உறவிற்கு தடையாக இருக்கின்ற இழுவைமடி வலைத் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். கடல் வளங்களை பாதிக்காத நாட்டுப் படகு போன்ற தொழில் முறைகளில் இந்திய கடற்றொழிலாளர்கள் ஈடுபடும் பட்சத்தில், நிபந்தனைகளுடன் வளங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் தயாராக இருக்கின்றனர்" என அன்னராசா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்திய மீனவர்களும் இந்த சந்திப்பில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

''இழுவைமடித் தொழிலால் வளங்கள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்கின்றோம். மாற்றுத் தொழில் முறைக்கு தயார்ப்படுத்த காலவகாசம் தேவைப்படுகின்றது" என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், 2004ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்ற போதிலும், இந்திய - இலங்கை மீனவப் பிரச்சினை தீர்க்கப்படாது உள்ளதாகவும் இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் குறுகிய காலத்தினை நிர்ணயம் செய்து, அந்த காலப் பகுதிக்குள் இழுவைமடிப் படகுத் தொழிலிலிருந்து மாற்று தொழிலுக்கு செல்ல தம்மை தயார்ப்படுத்திக் கொள்ளும் பொறிமுறையொன்றை உருவாக்குவது சிறந்ததாக இருக்கும் என இந்திய மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும், தமது படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதானது, தமக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதற்கு இலங்கை மீனவர்கள் பதிலளித்துள்ளனர்.

இந்திய மீனவர்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, படகுகளை ஏலத்தில் விற்பனை செய்வதில் கிடைக்கும் பணத்தை வழங்குமாறு, தாம் கடற்றொழில் அமைச்சரிடம் தொடர்ச்சியாக விடுத்த அழுத்தங்கள் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.

''இன்றைய தினம் நடைபெற்ற சிநேகப்பூர்வ சந்திப்பில் இரண்டு தரப்பினருக்கும் தங்களது எதிர்பார்ப்புக்களையும், ஆதங்கங்களையும் வெளியிட்டமை, ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகின்றேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரை சந்தித்து, கடற்றொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு, உறவுகளை பாதிக்காத வகையில் தீர்வொன்றை எட்டுவது தொடர்பாக கலந்துரையாடப்படும்" என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா, "பாரம்பர்ய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதோடு, மீனவர்களை நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யும் இலங்கை அரசு, விசைப்படகை அரசுடைமையாக்கி உத்தரவிடுவதால் படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக படகுகளை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.

இதற்கு இலங்கை மீனவர்கள் இழுவை மடி மீன்பிடி முறையைக் கைவிட்டுவிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய, இலங்கை அரசுகளிடம் பேசி வருகின்ற மே மாதத்தில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்துவது குறித்து ஆலோசித்துள்ளோம்," என்றார்.

முன்னதாக, கச்சத்தீவில் அந்தோணியார் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் இந்தியாவில் இருந்து 76 பேரும் இலங்கையில் இருந்து 88 பேரும் கலந்து கொண்டனர். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்று நிகழ்வில் நெடுந்தீவு பங்குதந்தை வசந்தம் மற்றும் வேர்கோடு பங்குதந்தை தேவசகாயம் இருவரும் கலந்துகொண்டு அந்தோணியார் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: