You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் இஸ்லாமியரின் நிலத்துக்குள் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு
- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் ஒருவரின் காணியொன்றினுள் அடாத்தாக விகாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியமைக்கு - அப்பகுதி முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றிலேயே இவ்வாறு பௌத்த விகாரை கட்டுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தீகவாபி ரஜமகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் வந்த குழுவினரே இவ்வாறு பௌத்த விகாரையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பௌத்த பிக்குகள் அடங்கிய அந்தக் குழுவினருக்கு, சிவில் உடையில் வந்த பொலிஸார் உள்ளிட்ட படையினர் பாதுகாப்பு வழங்கினர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
மேற்படி பௌத்த விகாரை அமைப்பதற்கான வேலைகள் நடைபெறும் இடம், அலியார் றூக்கியா உம்மா என்பவருக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணத்தை - அங்கு வந்திருந்த பௌத்த பிக்குகளிடம் காண்பித்த பொதுமக்கள்; அங்கு பௌத்த விகாரை அமைப்பதற்கு மேள்கொள்ளப்படும் முயற்சிக்கு தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதோடு, அங்கு போராட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.
குறித்த இடத்துக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோரும் சமூகமளித்திருந்ததோடு, பொதுமக்களுடன் இணைந்து, அவர்களும் பௌத்த விகாரை நிர்மாணிக்கும் நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
அனுமதி பெறப்படவில்லை
இங்கு ஊடகங்களிடம் பேசிய அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்'; "கட்டுமான வேலையொன்றை ஆரம்பிப்பதாயின் பிரதேச சபையிடம் முறையான அனுமதியொன்றைப் பெறவேண்டும். ஆனால், இந்த விகாரையினை அமைக்கும் பொருட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையிடம் எந்தவித அனுமதிகளும் பெறப்படவில்லை" என்றார்.
இந்த பௌத்த பிக்குகளின் இவ்வாறான நடவடிக்கை இனங்களுக்கிடையில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனவும் தவிசாளர் கூறினார்.
"நாட்டில் ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் எனும் அடிப்படையில் மதவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். நடக்கும் விடயம் சட்ட விரோதமானது. பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டமும், சிறுபான்மையினருக்கு இன்னொரு சட்டமும் இருக்க முடியாது" எனவும் தவிசாளர் அமானுல்லா தெரிவித்தார்.
"இது அரச பயங்கரவாதம்"
நாட்டில் மேலும் ஒரு இனமுறுலை உருவாக்கி, அரசியல் லாபம் தேடுவதற்கான ஒரு செயற்பாடாகவே தான் இதனைப் பார்ப்பதாக, குறித்த இடத்தில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த - அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில் பிபிசி தமிழிடம் கூறினார்.
"இந்தப் பகுதியிலுள்ள காணிகள் அனைத்தும் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. பௌத்தர்கள் எவரும் இல்லாத இந்த இடத்தில்தான் விகாரையொன்றை அமைப்பதற்கு முயற்சிக்கின்றனர். இது அடாத்தான ஆக்கிரமிப்பாகும்" என்றார்.
"ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறுகின்றார்கள். ஆனால் நாட்டிலுள்ள பௌத்த துறவிகளுக்கு மட்டும் வேறொரு சட்டம் இருப்பது போல் தெரிகிறது. இங்கு ஒரு விகாரை அமைக்கப்படுவது பற்றி பிரதேச சபைத் தவிசாளருக்குத் தெரியாது, பிரதேச செயலாளருக்குத் தெரியாது. எந்தவொரு அதிகாரிக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இங்கு ஒரு கட்டுமான வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது"..
"தொடர்ச்சியாக இவ்வாறான ஆக்கிரமிப்புகள் நடந்து வருகின்றமை எமக்குத் தெரியும். கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான அஷ்ரப் நகரிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தீகவாபி பௌத்த விகாரைக்கென காவுகொள்ளப்பட்டது. இப்போது மீண்டும் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளுக்குள் வந்து, இவ்வாறானதொரு வேலையைச் செய்கின்றார்கள்".
"இந்த நாட்டில் நடக்கின்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மிகவும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், சிறுபான்மையினரை அடக்குகின்ற வேலையாகவும், அரச பயங்கரவாதமாகவும் இச் செயற்பாடு அமைந்துள்ளது" என்றும் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில் தெரிவித்தார்.
பேசுவதற்கு மறுப்பு
இதேவேளை அங்கு பௌத்த விகாரை அமைக்கும் வேலைகளில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவினரிடம் அவர்களின் தரப்பு நியாயங்களை முன்வைத்துப் பேசுமாறு பிபிசி தமிழ் கேட்டபோது, அவர்கள் பேசுவதற்கு மறுப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விகாரை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடம் தனியாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான ஆவணங்களை அங்கு வந்திருந்த பௌத்த பிக்குகளிடம் காட்டி, குறித்த இடத்தில் பௌத்த விகாரை அமைக்க முடியாது என்பதை அங்கு வந்திருந்த முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி, தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தமையை அடுத்து, அங்கு வந்த பௌத்த பிக்குகளும் அவர்களின் குழுவினரும் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.
இதன்போது அந்த இடத்தில் விகாரை அமைக்கும் பொருட்டு வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றுமாறு பொதுமக்ள் கூறியபோதும், அதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்தனர். ஆயினும் பின்னர் அவற்றை எடுத்துச் செல்வதாகக் கூறினர்.
புதிய விடயமல்ல
சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களிலும் பௌத்தர்கள் எவருமற்ற பகுதிகளிலும் இவ்வாறு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதும், புத்தர் சிலைகள் வைக்கப்படுவதும் புதிய விடயமல்ல. இலங்கையில் மிக நீண்ட காலமாக இது நடந்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதியும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மட்டுமே வாழுகின்ற சங்கமன் கண்டி பிரதேசத்தில் இரவோடு இரவாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டமைக்கு அப் பிரதேச மக்கள் கடுமையாக எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
அதனையடுத்து குறித்த புத்தர் சிலையை மறுதினம் - அதனை வைத்தவர்களே அங்கிருந்து அகற்றிச் சென்றிருந்தனர். இது குறித்து பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்