You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் இன்றும் தமிழர்களை பழி வாங்கும் சட்டத்தில் திருத்தம் - தமிழர் தரப்பு கூறுவது என்ன?
- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் கடந்த 43 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அதற்கு உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இம்முறை ஜெனீவா அமர்வுகளில் இலங்கைக்கு சாதகமான பதிலொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்த முயற்சிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். எனினும், 18 மாதங்களாக இருந்த தடுத்து வைக்கும் காலத்தை 12 மாதங்களாக குறைப்பதை தவிர, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என தமிழர் தரப்பு கூறுகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலும், தமிழர்கள் இன்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு கீழ் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு வருகின்றனர்.
இன்றும் தொடரும் விசாரணைகள்
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை கிருபாநந்தன் அண்மையில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். மலேசியாவில் 2014ம் ஆண்டு கிருபாநந்தன் சர்வதேச போலீஸாரினால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான பொட்டம்மானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாகவும், விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்ததாகவும், சர்வதேசத்துடன் தொடர்புகளை பேணியதாகவும், மலேசியா பிரதமருடன் தொடர்புகளை பேணி அவருடாக மலேசியா கடவூச்சீட்டை பெற்று வெளிநாடுகளுக்கு சென்றதாகவும், விடுதலைப் புலி உறுப்பினர்களை சந்தித்ததாகவும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியே கிருபாநந்தன் மலேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு சர்வதேச போலீஸாரினால் கைது செய்யப்பட்ட இவர், 2014ம் ஆண்டு இலங்கை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த கிருபாநந்தன், நீதிமன்றத்தின் ஊடாக, அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.
2016ம் ஆண்டு விடுதலை பெற்ற தான், அன்று முதல் இன்று வரை குடும்ப வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்து வருவதாக கூறுகிறார். ''2016ம் ஆண்டு விடுதலை பெற்று குடும்ப வாழ்க்கையில் இணைந்திருந்தேன். எனக்கு மூன்று குழந்தைகள். கடந்த 6 வருடங்களாக எனது சுயவாழ்வை வாழ்ந்து வருகின்றேன்.
நான் சிறையிலிருந்து இலகுவாக வெளியில் வரவில்லை. பல போராட்டங்களை நடத்தியே வெளியில் வந்தேன். இன்றும் தமிழ் அரசியல் கைதிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களாகின்ற நிலையில், இன்று வரை தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கோ , இலங்கை அரசாங்கத்திற்கோ எதிராக எந்தவித பயங்கரவாத செயல்களையும் செய்யவில்லை" என அவர் குறிப்பிடுகின்றார்.
நீதிமன்றத்தினால் முழுமையாக விடுதலை பெற்ற கிருபாநந்தன், இந்த மாத ஆரம்பத்தில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிந்தார்.
''பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் மூன்று மணித்தியாலமாக என்மீது விசாரணை நடத்தியது. நீங்கள் வெளிநாடுகளுடன் தொடர்பு வைச்சிருக்கின்றீர்கள். இப்படி பல தொடர்கள் எங்களுக்கு கிடைச்சிருக்கு. முகநூல் ஒன்று பயன்படுத்துகின்றீர்கள். விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை போட்டு, நியூஸ்களை போட்டு முகநூல் ஒன்று பயன்படுத்துகின்றீர்கள் என்ற ரீதியில் முதற்கட்ட விசாரணையாக இருந்தது.
மூன்று மணித்தியாலங்களாக பல விதமான விசாரணைகளை நடத்தினார்கள். அவர்களுடைய விசாரணை உண்மையிலேயே போலித்தனமான விசாரணை" என அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தான் பல்வேறு சித்திவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கிருபாநந்தன் தெரிவிக்கின்றார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் 40 வருடங்களுக்கு மேலாக கஷ்டங்களை அனுபவித்த தமிழர்களின் வலிகள் தொடர்பில், தற்போதே சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் புரிந்துக்கொள்கின்றார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.ஏனெனில், இன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முஸ்லிகளும், ஒரு சில சிங்களவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றமையினால், இன்று தான் அதன் வலி அவர்களுக்கு தெரிவிக்கின்றது என செல்லத்துரை கிருபாநந்தன் கூறுகின்றார்.
அரசியல்வாதிகள் எதிர்ப்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பெரியளவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இந்த சட்டம் முற்று முழுதாகவே நீக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை தமிழரவு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
18 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த முடியும் என்ற சரத்து, 12 மாதங்களாக மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதுவே இந்த சட்டத்தில் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள திருத்தம் எனவும் அவர் கூறுகின்றார்.
''எங்களை பொருத்த வரையில் திருத்தம் என்பது அல்ல. இந்த சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும். சாதாரண தண்டனைச் சட்டங்களில் மூலம், நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் 18 மாதங்களுக்கு அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உரித்தை கொண்டிருக்கின்றார்கள். அதனை தற்போது 12 மாதங்களாக குறைத்திருக்கின்றார்கள்.
அதைதவிர, அங்கு வேறு திருத்தம் அல்லது மாற்றம் இடம்பெறவில்லை. ஆனப்படியால், எங்களுடைய நிலைப்பாடு, இன்று ஏகோபித்த மக்களுடைய கோரிக்கை.
ஆளும் கட்சியிலிருந்து அந்த சட்டத்திற்காக யாரும் வாதடிக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவர்களுக்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்திருந்தாலும், இன்று பெருமளவு மக்கள், பல மொழிகளை கொண்ட மக்கள், மதங்களை கொண்ட மக்கள், சர்வதேச ரீதியாகவும், வெளிநாடுகளில் உள்ளவர்களும், இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று தான் கூறுகின்றார்கள். எங்களுடைய திட்டவட்டமான நிலைப்பாடும் அதுவே என மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.
இலங்கை அரசாங்கம் பலி வாங்கும் வகையில் பயன்படுத்தி வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நூறு வீதமும் நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்படுகின்றார்கள், யார் யார் எப்போது கைது செய்யப்படுகின்றார்கள். எங்கே கைது செய்யப்படுகின்றார்கள். எங்கே வைத்திருக்கப்படுகின்றார்கள் என்பது கூட தெரியாது. அப்பாவிகள் பலர் இதற்குள் உள்வாங்கப்படுகின்றார்கள். இதனைவிட இலங்கை அரசாங்கம், குறிப்பாக இதை ஒரு பலிவாங்குகின்ற சட்டமாக பயன்படுத்துகின்றது.
யார் தங்களுக்கு பிடிக்கவில்லையோ, யாரை பலிவாங்க வேண்டுமோ அவருக்கு ஒரு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பாச்சுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றது. இலங்கையிலே எங்களை பொருத்த வரை நூற்றுக்கு நூறு வீதம் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் எடுக்கப்பட வேண்டும். நூறு வீதமும் நீக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான சட்டங்கள் என்பது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறக்கூடியதும், மனிதகுலத்திற்கு எதிரானதும், சித்திரவதைகளை செய்வதற்கு அனுமதிப்பது போன்று பல விடயங்கள் இந்த சட்டத்தில் இருக்கின்றது.
ஆகவே இது இல்லாது செய்யப்பட வேண்டும் என்பது, தமிழ் மக்களின் கோரிக்கை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சித்திரவதை இல்லை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக கூறப்படும் கருத்தை முழுமையாக நிராகரிப்பதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.18 மாத தடுப்பு காவல் 12 மாதங்கள் வரை மாத்திரம் குறைக்கப்பட்டுள்ள சரத்;தில் மட்டுமே மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை அரசாங்கம் மறுகின்றது.
12 மாத காலம் வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்தும் சரத்து உள்வாங்கப்பட்டுள்ளதுடன், ஒரு வருடத்திற்கு மேல் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடராத பட்சத்தில், நீதிமன்றின் ஊடாக பிணை உத்தரவை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார். அத்துடன், தற்போது விசாரணை செய்யப்படும் வழக்குகளை துரிதகதில் விசாரணை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
''பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இல்லாது செய்ய முடியாது, அந்த நோக்கத்தில் தான் 2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த மாதிரி கொஞ்சம் சவால்கள் இருக்குது" என அவர் கூறுகின்றார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடு முழுவதும் கையெழுத்து திரட்டல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி, நாடு முழுவதும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையொன்றை இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பித்துள்ளது. இவ்வாறு கையெழுத்தும் திரட்டும் நடவடிக்கைகளுக்கு தமிழர்கள் மிகப் பாரிய ஆதரவை வழங்கி வரும் அதேவேளை, சிங்கள மக்களும் அதிகளவில் ஆதரவை வழங்கி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்