இலங்கை நெருக்கடி விடுதலைப்புலி பயங்கரவாத காலத்தை விட மோசம் - இலங்கை அமைச்சர் ஒப்பீடுக்கு என்ன காரணம்?

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்னை காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்கு நாட்டில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன்படி, இலங்கையில் தற்போது முக்கிய நெருக்கடியாக எரிபொருள் பிரச்னை உருவெடுத்துள்ளதை காண முடிகின்றது.

வாகன ஓட்டிகள், அன்றாடம் நீண்ட வரிசைகளில் காத்திருந்து, எரிபொருளை கொள்வனவு செய்கின்றனர். இலங்கையில் பிரதானமாக இரண்டு நிறுவனங்களின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் மற்றும் இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் ஆகியவற்றின் ஊடாகவே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதத்தில் மாத்திரம், ஐ.ஓ.சி நிறுவனம் இருவேறு சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது. எனினும், இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் இதுவரை பழைய விலைகளிலேயே எரிபொருள்களை விநியோகித்து வருகின்றது.

இலங்கை பெட்ரோலியகூட்டுதாபனத்துடன், ஒப்பிடுகையில், ஐ.ஓ.சி நிறுவனத்திடம் எரிபொருள் விலை அதிகம் என்பதனால், மக்கள் வரிசைகளில் காத்திருந்து, பெட்ரோலியகூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதனால், பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான மற்றும் அதனுடன் தொடர்புடைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து வாகனங்கள் வரிசைகளில் காத்திருக்கின்றன.

இந்நிலையில், இலங்கையில் எதிர்வரும் நான்கு தினங்களுக்கு தேவையான டீசல் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

டீசலை ஏற்றிய கப்பல் நாளை (02) மாலை நாட்டை வந்தடையும் என அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், நாட்டில் காணப்படுகின்ற அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக, வங்கி கடன் பத்திரத்தை விநியோகிப்பதில் காலதாமதம் ஏற்படுமாக இருந்தால், நாளைய தினம் கொண்டு வரப்படும் எரிபொருளை நாட்டிற்குள் இறக்குவதில் சிரமம் ஏற்படும் என அவர் கூறுகின்றார்.

குறிப்பாக கப்பல் நாட்டிற்கு வந்தடைந்த நாள் முதல் மூன்று தினங்களுக்குள் எரிபொருளை இறக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும், மூன்று நாட்களின் பின்னர் கப்பலுக்கான தாமத கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

தாமத கட்டணமாக நாளொன்றிற்கு சுமார் 8000 - 10000 டொலர் வரையான தொகையை செலுத்த வேண்டி ஏற்படும் என அவர் கூறுகின்றார்.

உலக சந்தையில் இலங்கை கொள்வனவு செய்யும் எரிபொருள் விலை

உலக சந்தையில் எரிபொருளின் விலை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இலங்கை பெட்ரோலியகூட்டுதாபனம் எரிபொருளை கொள்வனவு செய்யும் விலைகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 22ம் தேதி தரவுகளுக்கு அமைய, உலக சந்தையில் ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 100 டொலரை தாண்டி விற்பனை செய்யப்படுகின்றது.

பெட்ரோல் 92 (ஒரு பீப்பாய்) - 109 அமெரிக்க டொலர்

பெட்ரோல் 95 (ஒரு பீப்பாய்) - 112 அமெரிக்க டொலர்

டீசல் (ஒரு பீப்பாய்) - 114 அமெரிக்க டொலர்

உலக சந்தையில் டீசலின் விலை அதிகம் என்ற போதிலும், இலங்கை உள்நாட்டு சந்தையில் டீசலின் விலை மிகவும் குறைவாக இன்று வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

எனினும், பெற்றோலின் விலை, டீசலின் விலையை விடவும் அதிகளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

டீசலின் ஏற்படும் நட்டத்தை, பெற்றோலின் ஊடாக ஈடு செய்து வருவதாக இலங்கை பெட்ரோலியகூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு ஒரு லீற்றர் பெற்றோலை கொண்டு வருவதற்காக, 140 ரூபா செலவிடப்படும் அதேவேளை, விநியோகத்தரின் வட்டி, கடன் பத்திரத்திற்கான கட்டணம், குழாய் கட்டணம், களஞ்சியப்படுத்தல் கட்டணம், போக்குவரத்து செலவீனம் உள்ளிட்ட பல்வேறு செலவீனங்கள் மற்றும் வரிகள் அடங்களாக ஒரு லீற்றர் பெற்றோலுக்கு பெட்ரோலியகூட்டுதாபனம் 196.32 ரூபா செலவிடுகின்றது.

எனினும், ஒரு லீற்றர் பெற்றோலை 19.32 ரூபா நட்டத்தில், 177 ரூபாவிற்கே பெட்ரோலியகூட்டுதாபனம் தற்போது விற்பனை செய்து வருகின்றது.

எவ்வாறாயினும், ஐ.ஓ.சி நிறுவனம் ஒரு லீற்றர் பெற்றோலை சந்தையில் 204 ரூபாவிற்கு விற்பனை செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

எரிபொருளுக்கு இலங்கையில் அறவிடப்படும் வரி நடைமுறைகள்

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் - 42.48 ரூபா

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் - 63.82 ரூபா

டீசல் ஒரு லிட்டர்- 16.93 ரூபா

சுப்பர் டீசல் ஒரு லிட்டர்:- 38.73 ரூபா

இதன்படி, எரிபொருளின் ஊடாக அரசாங்கத்தின் நாள் ஒன்றிற்கு மாத்திரம் 331 பில்லியன் ரூபா வரி வருமானமாக கிடைக்கின்றது. இதனூடாக பெட்ரோலியகூட்டுதாபனத்திற்கு நாளொன்றிற்கு 556 பில்லியன் ரூபா நாளாந்தம் நட்டம் ஏற்படுவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

இதையடுத்து, எரிபொருளுக்கு அரசாங்கத்தினால் அறவிடப்படுகின்ற வரியை ரத்து செய்தால், மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதன் ஒரு கட்டமாக, எரிபொருளுக்கான வரியை ரத்து செய்யுமாறு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில, கடந்த 18ம் தேதி நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், அமைச்சர் உதய கம்மன்பிலவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, நிதி அமைச்சு இன்று வரை பதில் வழங்கவில்லை.

நாளாந்த பயன்பாட்டிற்கு தேவையான எரிபொருள்

பெட்ரோல் ஒக்டேன் 92 :- 3000 - 4800 மெட்ரிக் டன்

பெட்ரோல் ஒக்டேன் 95 :- 300 - 350 மெட்ரிக் டன்

சுப்பர் டீசல் :- 225 - 250 மெட்ரிக் டன்

ஒட்டோ டீசல் :- 6500 - 7000 மெட்ரிக் டன்

எரிபொருளுக்கு உண்மையில் தட்டுப்பாடு காணப்படுகின்றதா?

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்ற போதிலும், எரிபொருளுக்கு பெரியளவில் தட்டுப்பாடு கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

எனினும், தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணத்தையும் அவர் தெளிவூட்டினார்.

அதாவது ''எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, வாகன ஓட்டிகள் தமது வாகனங்களுக்கு முழுமையாக எரிபொருளை நிரப்புகின்றனர். முன்னர் குறிப்பிட்டளவு மாத்திரமே எரிபொருளை நிரப்புவார்கள். எனினும், தற்போது முழுமையாக நிரப்புகின்றனர். அதனால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. எனினும், நாட்டிற்கு தேவையான எரிபொருள் களஞ்சியத்தில் உள்ளது" என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும், "எரிபொருள் இருப்பதால்தான், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும், அவ்வாறு எரிபொருள் இல்லை என்றால், மக்கள் வரிசையில் இருக்க மாட்டார்கள்" எனவும் அமைச்சர் கூறுகின்றார்.

எப்போது இந்த பிரச்சினை தீரும்?

எரிபொருள் தட்டுப்பாடு இல்லாது, வழமைக்கு திரும்பும் நாள் எப்போது என்பதனை சரியாக குறிப்பிட முடியாது எனவும், விரைவில் தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து, மீண்டெழுவதற்காக இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு விரைவில் பொருளாதாரத் தொகுப்பு ஒன்று கிடைக்கவுள்ளது.

சுமார் 240 கோடி அமெரிக்க டாலருக்கான பொருளாதார தொகுப்பை வழங்க இந்திய இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், முதற்கட்டமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணங்கியுள்ளது.

இதன்படி, இந்த நிதி விரைவில் நாட்டிற்கு கிடைக்கப் பெற்றவுடன், மருந்து, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்காக செலவிடப்படவுள்ளது.

இதையடுத்து, எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் நிவர்த்தியாவதற்கான சாத்தியம் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

மின்சாரம் தடை

நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றமையினால், மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தினந்தோறும் மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, தினமும் சுமார் 3 முதல் 5 மணிநேர மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விடுதலைப் புலிகளை விடவும் மோசமான நிலைமை

இது குறித்துப் பேசும்போது, "தமிழீழ விடுதலைப்புலி பயங்கரவாதத்தை விடவும், நாடு தற்போது மிக மோசமான நிலைமையை எதிர்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

''நாங்கள் இன்று சந்திக்கும் பிரச்சினையானது, விடுதலைப் புலி பயங்கரவாதத்தை விடவும் மிக மோசமானது. விடுதலைப்புலி பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும் என கூறியவர்கள் வரிசையில் முன்னணியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். இன்று நான் கூறுகின்றேன்.

சுதந்திர இலங்கை சந்தித்திருக்கும் பெரும் சவாலானது, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அந்நிய செலாவணி பிரச்னையாகும். அதன் விளைவுகள் விடுதலைப் புலி பயங்கரவாதத்தை விடவும் மோசமாக இருக்கிறது. சவாலுக்கான நீள அகலம் விடுதலைப் புலி பயங்கரவாதத்தை விடவும் மோசமானது" என உதய கம்மன்பில கூறுகின்றார்.

மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் ஏப்ரல் இறுதி வாரம் வரை இந்தியாவினால் வழங்கப்படுகின்ற கடனுதவித் திட்டத்தின் மூலமாக ஒரு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், இலங்கை அரசாங்கம் முன்னோக்கி நகர்ந்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: