You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையின் பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனை சமாளிக்குமா 'ராஜபக்ஷ' அரசு?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை அரசு வெளிநாடுகளிடம் இருந்து வாங்கியிருக்கும் கடனுதவிகளால் எதிர்காலத்தில் பலவித தாக்கம் ஏற்படலாம் என்று பல்துறை நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
இலங்கை உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் உதவிகளை பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய அவர், சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான உதவிகள், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளது என்றும் வங்கதேசத்திடம் இருந்து 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உதவிகள் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
எதிர்வரும் சித்திரை புத்தாண்டிற்கு முன்னர், சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையுடன் நட்புறவை பேணி வரும் நாடுகளிடமிருந்தே, இவ்வாறான உதவிகள் கிடைப்பதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை, பாகிஸ்தானிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானுக்கான அதிகாரபூர்வ விஜயமொன்றை அண்மையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டிருந்தார். அப்போது இந்த உதவித் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரிசி, சீமெந்து மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கிலேயே இந்த கடனுதவியை இலங்கை பாகிஸ்தானிடமிருந்து கோரியுள்ளது.
பாகிஸ்தானிடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான யோசனையை, வர்த்தக அமைச்சர், விரைவில் நிதி அமைச்சிடம் சமர்ப்பித்து, அதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் கடனை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இதனை சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்தும் இலங்கை அரசாங்கம் பல்வேறு உதவிகளை பெற்று வருகிறது.
ஊடகவியலாளரின் பார்வை
இலங்கை அரசாங்கத்திடம் நெடுந்தூர திட்டமொன்று கிடையாது என மூத்த ஊடகவியலாளர் இரா.செல்வராஜா தெரிவிக்கின்றார்.
நாட்டை தொடர்ச்சியாகவே வீழ்ச்சியை நோக்கி அரசாங்கம் நகர்த்தி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
தற்காலிக ஏற்பாடுகளையே அரசாங்கம் செய்கின்றதே தவிர, நிரந்தர ஏற்பாடுகளை செய்ய தவறி வருவதாகவும் மூத்த ஊடகவியலாளர் இரா.செல்வராஜா குறிப்பிடுகின்றார்.
''நாட்டை மேலும் மேலும் கடனில் சிக்க வைக்கின்றார்கள். அந்த நாடுகள் கடனை சும்மா தர போறதில்லை. திருப்பி செலுத்த வேண்டிய கடன் இது. கடன் மட்டும் இல்லை, அதற்குரிய வட்டியையும் செலுத்த வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மேலும் மேலும் பள்ளத்தை நோக்கி தான் போகுது.
தற்காலிகமாக கடனை வாங்கி, நாட்டு பிரச்சினையை சமாளித்தாலும், எதிர்காலத்தில் இதைவிட பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். அப்போது நாட்டு மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர்கொள்ளுவார்கள். இது எல்லாம் தற்காலிக ஏற்பாடுகளே தவிர, நிரந்தர ஏற்பாடு இல்ல. நிரந்தர ஏற்பாடு என்றால், ஏற்றுமதி வருமானத்தை இலங்கை அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்காவிட்டால், ஒன்றும் செய்ய இயலாது. தற்காலிக ஒட்டு வேலை தான். டாலர் கையிருப்பே இல்லை. 1500 கன்டேனர்கள கூட ரிலிஷ் பன்ன முடியாமல் இருக்கு. பெற்றோல், டீசல் இறக்குமதி செய்ய பணம் இல்லை.
இந்த பிரச்னையினால் மின்சாரத்தை துண்டிக்க போறாங்க. அரசாங்கத்தி;ற்கு வேறு வழியே இல்ல. சப்புகஸ்கந்த மின்உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது, தூர நோக்கு இல்லாத பொருளாதார சிந்தனைகள் தான், இந்த பிரச்சினைக்கு காரணம். அன்றைக்கு அன்றை பிளேன் பண்ணுறாங்க. நாட்டை ஆள்வதற்கு அப்போது அப்போதே பிளேன் பண்ணுறாங்க. நெடுந்தூர பிளேன் இல்ல" என மூத்த ஊடகவியலாளர் இரா.செல்வராஜா தெரிவிக்கின்றார்.
பொருளாதார நிபுணரின் பார்வை
''இலங்கை பொருளாதாரம் எதிர்காலத்தில் சீரழியுமா? வளர்ச்சி அடையுமா? இல்லை இதைவிட மேலும் கடனாளியாகலாமா? கடனிலிருந்து மீண்டெழுமா? நாடு வெளிநாட்டு சக்திகளின் பலப்பரீட்சை பிரதேசமாக மாறுமா? அல்லது சமாதான பூமியாக இருக்குமா? போன்ற பல கேள்விகளை எழுப்புவதாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.
உலக நாடுகளிடமிருந்து தொடர்ச்சியாக கடனை பெற்று, முழுமையாக கடனாளியாக மாறிய மெக்ஸிகோவை போன்றதொரு நிலைமையை, இலங்கை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடனை, எவ்வாறான திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றது என்பதே முக்கியமானது என கூறிய அவர், அது தொடர்பிலான சரியான தெளிவு கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடனை உற்பத்திக்கு பயன்படுத்தினால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் குறைவடையும் என அவர் கூறினார்.
எனினும், வாங்கும் கடனை கொண்டு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டால், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யாது என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் கடனானது, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடனானது, அதிக வட்டிக்கு வாங்கப்படுவதுடன், அதனை மீள செலுத்தும் காலம் குறுகியது என அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிலைமை தொடருமானால், எதிர்காலத்தில் இலங்கை, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பலபரீட்சை பிரதேசமாக மாறும் நிலைமை ஏற்படும் என பொருளாதார நிபுணர் பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
- திப்பு சுல்தான் மதமாற்றம் செய்த கொடுங்கோலனா? விடுதலைக்கு போராடிய வீரனா?
- உள்ளாட்சி தேர்தலில் 3 மேயர் இடங்கள், 20% வார்டுகள் கேட்கும் பாஜக - ஏற்குமா அ.தி.மு.க?
- சென்னை மாநகராட்சி அதிகாரியை தாக்கினாரா தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: