ரஃபேல் நடால் 21 டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் வென்று உலக சாதனை - ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி

ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் மற்றும் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோருக்கு இடையே நடந்த 2022ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார் ரஃபேல் நடால்.

மெல்பர்னில் 5 மணி நேரம் 24 நிமிடம் நடந்த இந்தப் போட்டியில் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற கணக்கில் வென்றார் நடால்.

இதன்மூலம் 21 ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று உலக சாதனை படைத்துள்ளார் ரஃபேல் நடால்.

அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றதுதான், 'ஓபன் எரா' டென்னிசில் இதுவரை ஒரு தனிநபர் பெற்ற அதிகபட்ச வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இது ரஃபேல் நடாலுக்கு இரண்டாவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டமாகும். 13 ஆண்டுகளுக்கு முன் 2009இல் அவர் இப்படத்தை வென்றிருந்தார்.

இதுவரை ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடெரர், நோவாக் ஜோகோவிச் ஆகியோர் தலா 20 ஆண்கள் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றிருந்தனர்.

இன்றைய வெற்றியின் மூலம் மற்ற இருவரையும் இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, அதிக தனிநபர் கிராண்ட்ஸ்லாம் வென்ற ஆண் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நடால்.

ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை இரண்டாம் முறை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன், பிரென்ச் ஓபன், விம்பிள்டன் ஆகிய நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் குறைந்தது இரண்டு முறை வென்றவர்களில் ஒருவர் ஆகியுள்ளார் நடால்.

நடால் 13 முறை பிரென்ச் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றதுதான் ஒரே கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஒருவரே அதிகபட்ச எண்ணிக்கையில் வென்றதாகும்.

35 வயதாகும் நடால் இப்போது உலக ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

2005இல் பிரென்ச் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதே, இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அப்போது நடாலுக்கு வயது வெறும் 19 மட்டுமே.

விளையாட முடியாத 2021 சாம்பியன் ஜோகோவிச்

ஆண்கள் தரவரிசையில் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சின் ஆஸ்திரேலிய விசா அவர் போட்டியில் கலந்துகொள்ளும் முன்னரே ரத்து செய்யப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடாதது அதற்கு காரணமாகக் கூறியது ஆஸ்திரேலிய அரசு.

அதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றமும் அனுமதி மறுத்தது.

இதனால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2021ஆம் ஆண்டுக்கான ஆண்கள் ஒற்றையர் சாம்பியனான அவர் திட்டமிட்டபடி விளையாட முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: