You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்மிருதி மந்தனா: 2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஐ.சி.சி. தேர்வு செய்த இவர் யார்?
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஓபனரான ஸ்மிருதி மந்தனா 2021ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அவர் ரேச்சல் ஹேகோ ஃபிளின்ட் கோப்பையையும் பெறுகிறார் என்று அறிவித்துள்ளது ஐ.சி.சி.
இது தொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மெட்டிலும் 2021ம் ஆண்டில் சிறப்பாக விளையாடியுள்ளார் மந்தனா. குறிப்பிட்ட ஆண்டில் அவர் 22 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 855 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 38.86 ரன்கள் எடுத்துள்ளார் அவர். இதில் ஒரு சதமும் ஓர் அரை சதமும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த லிமிடெட் ஓவர் தொடரில் 8 போட்டிகளில் இந்தியாவில் விளையாடப்பட்ட இரண்டு போட்டியையும் இந்திய அணி வென்றது. இந்த வெற்றியில் மந்தனா மிகப்பெரிய பங்காற்றினார் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் இந்த ஸ்மிருதி, அவர் இந்திய கிரிக்கெட்டில் செய்திருப்பது என்ன? சில முக்கியத் தகவல்கள்:
1. 1996ம் ஆண்டு ஜுலை 18ம் தேதி மும்பையில் ஒரு மார்வாரி குடும்பத்தில் பிறந்த ஸ்மிருதி மந்தனா, ஓர் இடது கை பேட்ஸ்வுமன். ஆனால், வழக்கமாக வலது கை பழக்கமுள்ளவர் என்பது சுவாரஸ்ய தகவல்.
2. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக உள்ள ஸ்மிருதி தமது 16 வயதில் 2013ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்தார்.
3. மகாராஷ்டிராவின் 19-வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற தமது அண்ணன் ஷ்ரவன் விளையாடுவதைப் பார்க்க மைதானத்துக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்த மந்தனாவுக்கு அவரது அப்பாதான் பந்து போட்டு பேட்டிங் ஆர்வத்தை வரவழைத்தார் என்றும், அப்பாவின் விருப்பத்துக்காகவே அவர் இடது கை பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார் என்றும் கூறுகிறது இ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணைய தளம்.
4. தனது 11வது வயதில் மகாராஷ்டிராவின் 19-வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் அணியில் இடம் பிடித்தார் ஸ்மிருதி.
5. சர்வதேச அளவில், நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், 62 ஒரு நாள் போட்டியிலும், 84 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள மந்தனா டெஸ்டில் ஒரு சதமும், 2 அரை சதமும் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 4 சதமும் 19 அரை சதமும் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் 14 அரை சதங்கள் அடித்துள்ளார்.
6. 2013ம் ஆண்டு வதோதராவில் மேற்கு மண்டல அளவில் நடந்த 19வயதுக்கு உட்பட்டோருக்கான உள்நாட்டு ஒரு-நாள்-கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து, இந்தியாவில் இரட்டை சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் ஸ்மிருதி. மகாராஷ்டிர அணிக்காக குஜராத் அணியை எதிர்த்து விளையாடிய ஸ்மிருதி 150 பந்தில் 224 ரன்கள் அடித்து வரலாறு படைத்தார்.
7. 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தனது அறிமுக சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே ஒரு இன்னிங்சில் அரை சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார் ஸ்மிருதி. பிறகு நடந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் அவர் சோபிக்கவில்லை. ஆனால், 2017 உலக கோப்பையில் கலக்கினார்.
பிற செய்திகள்:
- இந்திய ஆட்சி பணி விதிகளை திருத்துவது கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும்: மு.க.ஸ்டாலின் கடிதம்
- டோங்கா எரிமலைச் சாம்பல் பூமியைக் குளிர்விக்குமா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
- உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்? எளிய விளக்கம்
- மகாராஷ்டிராவில் தாக்கப்பட்ட கர்ப்பிணி காவலர் - என்ன நடந்தது?
- அயோத்தி அருகே 251 மீட்டர் ராமர் சிலை அமைக்க நிலங்களை பலவந்தமாக பறிப்பதாக விவசாயிகள் புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்