You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐஏஎஸ் விதிகளை திருத்துவது கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும்: மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்திய ஆட்சிப் பணி விதிகளை திருத்தம் செய்யும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளை தேவைப்படும்போது மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் பணிகளுக்கு அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தை 1954 ஆம் ஆண்டு ஆட்சிப் பணி விதி 6ன் புதிய திருத்தம் வழங்குகிறது. இந்தத் திருத்தம் தொடர்பாக கடந்த ஆண்டு இறுதியில் அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. இந்தத் திருத்தம் மாநில உரிமைக்கு எதிரானது எனக் கூறி அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது நிர்வாக ரீதியாக மாநில அரசுகளுக்கும் அதிகாரிகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது எனவும் அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், `அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இந்த உத்தேச திருத்தங்களுக்கு என்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ` ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஓர் இணக்கமான சூழ்நிலைக்கு இந்தத் திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒன்றிய அரசின்வசம் அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுக்கும்.
மேலும் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பது குறித்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கனவே மாநில அரசுகளில் குறிப்பிட்ட சில முதுநிலைகளில் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. ஒன்றிய குரூப்-I நிலை அலுவலர்கள் மூலமாகவும், வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களை தேர்வு செய்யும் (Lateral entry) முறை மூலமாகவும் ஒன்றிய அரசு தனது தேவையை நிறைவு செய்து கொள்ளும் சூழ்நிலையில் மாநில அரசு முழுக்க முழுக்க தன்னுடைய நிர்வாகத் தேவைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைச் சார்ந்துள்ளது' என்பதையும் கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், மக்களுக்குத் தேவையான பல்வேறு ஒன்றிய, மாநில அரசின் திட்டங்களை மாநில அரசுகளே முன்னின்று செயல்படுத்தி வருவதையும், தேசிய பேரிடர்களை எதிர்கொள்ளும் சமயங்களில் போதுமான எண்ணிக்கையில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாநில அரசுகளுக்கு தேவைப்படுகின்றனர் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிக்கு அனுப்ப வற்புறுத்துவது, ஏற்கனவே அதிகாரிகள் எண்ணிக்கைக் குறைபாடுள்ள நிலையில் நிர்வாகத்தில் ஒரு தொய்வு நிலையை ஏற்படுத்திவிடும். ஒன்றிய அரசு வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களை தேர்வு செய்திடும் முறை ஒன்றிய அரசு பணிக்குச் செல்ல விரும்பும் அலுவலர்களின் ஆர்வத்தையும் ஏற்கனவே குறைத்துள்ளது' எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய சட்டத் திருத்தமானது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தனித்துவம் வாய்ந்த ஒரு அம்சமான அகில இந்திய ஆட்சிப் பணி என்பதனை சேதமடையச் செய்துவிடும். இந்திய ஆட்சிப் பணி இதுவரை தேசத்திற்குச் சிறப்பான சேவையாற்றி ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே இணக்கமான உறவுகளின் மூலம் ஒரு வலுவான கட்டமைப்பாக திகழ்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்றமுடியும் எனும் நிலை இந்தியாவின் எஃகு கட்டமைப்பு (steel frame) என்று அழைக்கப்படும் அரசுப் பணி நிர்வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையையும், அலுவலர்களிடையே பணி ஆர்வத்தையும் குறைக்குமென்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
` புதிய சட்டத் திருத்தத்தால் அகில இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஒரு நிரந்தர அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றும், இது தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்ல விரும்பும் நம்முடைய நாட்டிற்கு உகந்ததல்ல. குடிமைப்பணி அலுவலர்கள் அரசியல் சார்புத்தன்மை இன்றியும், எவ்வித அச்ச உணர்வின்றியும் பணியாற்ற வேண்டும். ஆனால் உத்தேசிக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் நிர்வாகக் கட்டமைப்பின் தன்மையையும் அதன் பணியாற்றும் செயல்திறனையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மாநிலங்களில் குடிமைப்பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பதும் சிக்கலாக்கிவிடும். இவற்றினால் மாநில நிர்வாகமும் அதன் மூலம் தேச நலனும்கூட பாதிக்கப்படக்கூடும்.
"புதிய சட்டத் திருத்தத்தின் விளைவுகள் அச்சமூட்டுவதாக உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் அவசரமாக சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிப்பது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் எதிரானதாகும். இந்தத் திருத்தத்திற்கு தொடர்புடைய இரண்டு அமைப்புகளான மாநில அரசுகளும், நிர்வாக கட்டமைப்பும் இதனை வரவேற்கவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஓர் ஏற்பாட்டினை மாநில அரசுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்வதும் கூட்டாட்சி அரசியல் அமைப்பிற்கு உகந்ததல்ல' என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
`இது கடந்த 75 ஆண்டுகளாக கவனமாக உருவாக்கப்பட்ட இந்த தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்கச் செய்யும். எதனையும் அழிப்பது எளிது. ஆனால், மறுகட்டமைப்பு செய்வது கடினமானது. இவ்வாறான கட்டுப்படுத்தக்கூடிய புதிய விதிமுறைகளை வகுப்பதற்குப் பதிலாக மாநில அரசுகளின் ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு ஒன்றிய அரசு நேர்மறையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அகில இந்திய ஆட்சிப் பணியாளர்களின் பணி அமைப்பினை மேம்படுத்தவும் அவர்கள் பணியாற்றுவதற்கு சாதகமான சூழலையும் உருவாக்குவதன் மூலம் ஒன்றிய அரசுப் பணிகளுக்கு அவர்கள் தாங்களாகவே எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் சென்று பணியாற்றக்கூடிய நிலையினை உருவாக்கவும் செய்யலாம். ஏனென்றால், நம்மால் கணிக்க இயலாத விளைவுகளை இது நிச்சயம் ஏற்படுத்தும் எனக் கருதுகிறேன்' என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- தினமும் 150 கோடி டன் நன்னீரை கடலில் கலந்த ராட்சத பனிப்பாறை - விளைவுகள் என்ன?
- 'தயவுசெய்து உதவுங்கள், தாலிபன்கள் என் வீட்டிற்கு வந்துள்ளனர்'
- ஆப்பிள் நிறுவன 'ஏர்டேக்' சாதனம் நம்மை ரகசியமாக கண்காணிக்கிறதா?
- பூதகாலம் - சினிமா விமர்சனம்
- மகாராஷ்டிராவில் தாக்கப்பட்ட கர்ப்பிணி காவலர் - என்ன நடந்தது?
- அயோத்தி அருகே 251 மீட்டர் ராமர் சிலை அமைக்க நிலங்களை பலவந்தமாக பறிப்பதாக விவசாயிகள் புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்