You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிராவில் தாக்கப்பட்ட கர்ப்பிணி காவலர் - என்ன நடந்தது?
- எழுதியவர், ராகுல் கெய்க்வாட்
- பதவி, பிபிசி செய்தியாளர்
"என் மனைவி மூன்று மாத கர்ப்பிணி, அவளை மோசமாக தாக்கினார்கள். நான் அவர்களை தடுத்து என் மனைவியை பாதுகாத்தேன்."
சூர்யாஜி தோம்ப்ரே தன் மனைவி மீதான தாக்குதலை பற்றி பேசும்போது இவ்வாறு விவரித்தார்.
ஜனவரி 19 ஆம் தேதி வனக்காவலர் சிந்து சனாப், அவரது கணவரும் வன பாதுகாவலருமான சூர்யாஜி தாம்ப்ரே ஆகியோர் பால்சவடே வனப்பகுதியில் வனவிலங்குகளை எண்ணிவிட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
வனத்துறை நிர்வாகக் குழுவின் தலைவரும், வனத்துறையின் முன்னாள் தலைவருமான ராம்சந்திர ஜன்ஜன், அவரது மனைவி பிரதிபா ஆகியோர் வனக்காவலர் தம்பதியை தாக்கியுள்ளனர்.
இவர்களின் தாக்குதல் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்த்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏன் தாக்கினார்கள்?
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சதாராவில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்குச் சென்ற நாம், அங்கு சிந்து சனாப், சூர்யாஜி தோம்ப்ரே ஆகியோரை சந்தித்தோம்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு வனத்துறை உயர் அதிகாரிகள் பலர் இருவரையும் சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
அன்று நடந்த சம்பவம் குறித்து சிந்து சனாப் கூறுகையில், "நான்கு மாதங்களுக்கு முன் அந்த பகுதியில் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. நான் வேலை செய்ய ஆரம்பித்த நாள் முதல் பலர் என்னை பல விதமாக துன்புறுத்தினர்.
வனத்துறை செய்யும் வேலைக்கு காட்டில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை எங்களுடைய அனுமதியின்றி எப்படி அழைத்துச் செல்கிறீர்கள், புல்களை ஏன் வெட்டுகிறீர்கள் என்று என்னிடம் கேள்வி கேட்டார்கள் என்றார் சந்து. அப்படிச் செய்ய எனக்கு உரிமை உண்டு என நான் பதிலளித்தேன் என்றார் சிந்து.
இது குறித்து சிந்து மேலும் விவரித்தபோது, "ஜனவரி 17ம் தேதி, இரண்டு பெண்களை நான் வனப்பணி தொடர்பாக காட்டுக்கு அழைத்துச் சென்றபோது, அந்த தலைவரின் மனைவி என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்," என்றார்.
ஜனவரி 19ஆம் தேதி, நான் மீண்டும் பெண் தொழிலாளர்களுடன் விலங்குகளை எண்ணச் சென்றேன். இப்போது என் கணவரும் உடன் வந்தார். அப்போது அந்த தலைவர்கள் கூலித்தொழிலாளிகளை ஏன் அழைத்துச் செல்கிறாய் என கேட்டவாறு என்னையும் எனது கணவரையும் செருப்பால் அடிக்க ஆரம்பித்தார்கள்."
சிந்துவின் குற்றச்சாட்டு
வனப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்த அனுமதிக்காததால் அந்த தலைவர்கள் கோபமடைந்ததாக சிந்து குற்றம்சாட்டினார்.
நடந்த தாக்குதலில் கர்ப்பிணியான சிந்து படுகாயம் அடைந்துள்ளார். மூன்று மாத கர்ப்பிணியான அவருக்கு சம்பவத்துக்குப் பிறகு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வனத்துறை உதவி பாதுகாப்பு அதிகாரி சுதிர் சோனாவாலே பிபிசி மராத்தியிடம் கூறுகையில், வனப் பணியாளர்கள் யாரும் வனப்பகுதிக்குச் செல்லவோ தொழிலாளர்களை அழைத்துச் செல்லவோ கூட்டு வன மேலாண்மைக் குழுவின் தலைவரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று தெரிவித்தார்.
ஜனவரி 17ஆம் தேதி சிந்து சனாப்பைக் கொன்றுவிடுவதாக ஜனாஜின் மனைவி மிரட்டியபோது, ஜனவரி 19ஆம் தேதி தன் கணவரையும் தமது துணைக்காக சிந்து பணிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஏற்கெனவே அந்த தம்பதி சிந்துவிடம் ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டதால் அவர் தமது கணவரை துணைக்காக அழைத்துச் செல்ல அனுமதித்ததாக சுதிர் கூறுகிறார்.
வனவிலங்குகளை எண்ணிவிட்டு இருவரும் சதாராவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த தலைவரின் மனைவி தோம்ப்ரேவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
முதல் நாள் சிந்துவை திட்டிய பிறகு மறுநாள், சனாப்பின் கணவர் சூர்யாஜி தோம்ப்ரேவை ராம்சந்திரா தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.
இதனால் ஜனவரி 19ஆம் தேதியன்று, சிந்து வேலைகளுக்காக பெண்களை அழைத்துச் சென்றபோது, பிரதிபாவும் அவரது கணவரும் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களைத் தாக்கத் தொடங்கினார்.இது குறித்து தோம்ப்ரே கூறுகையில், "ஜனகர் எங்களை ஜனவரி 17ஆம் தேதி மிரட்டினார். இது குறித்து மூத்த அதிகாரிகளிடம் நான் தெரிவித்தேன். அவர்களின் அறிவுறுத்தலின்படியே, சிந்து சனப்புடன் நான் சென்றேன். என்னைப் பார்த்ததும் பிரதீபா ஜங்கர் என்னை செருப்பால் அடிக்க ஆரம்பித்தார். சிந்து சனாப் தலையிட்டு அந்த பெண்ணியை தடுக்க முயன்றார்.
ஆனால் பின்னர் ராம்சந்திராவும் பிரதிபாவுடன் சேர்ந்து கொண்டு சிந்துவை மோசமாகத் தாக்கினர். அந்த சம்பதி சிந்துவை வயிற்றில் கூட உதைத்தனர். இந்த சம்பவத்தை எனது செல்போனில் வீடியோ படம் எடுத்தேன்.
இப்போது அந்த வீடியோ வைரலானது. மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூட தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த காணொளியை பகிர்ந்து கொண்டார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தாக்கரே உறுதியளித்துள்ளார்," என்றார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி நள்ளிரவைக் கடந்த மூன்று மணியளவில், சிந்துவை தாக்கிய தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதை உறுதிப்படுத்திய சதாரா காவல் கண்காணிப்பாளர் அஜித் போரடே, அந்த தம்பதியை ஒரு வாரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
பெண் வனக் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஆதித்யா தாக்கரே, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களை பொறுத்துக் கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சாகங்கரும் இந்த விஷயத்தை அறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சதாரா காவல்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
உதவி வனப் பாதுகாப்பு அதிகாரி சுதிர் சோனாவாலின் குழுவில் சிந்து சனாப் பணிபுரிகிறார். அவர் கூறுகையில், "அனைத்து இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. காலையில் எண்ணும் பணி நடக்கிறது. ஒவ்வொரு வனக்காவலரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள புலிகள் மற்றும் பிற வனவிலங்குகளை கணக்கெடுக்க வேண்டும். புலிகள் அல்லது பிற வனவிலங்குகள் தென்பட்டால், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பணிக்கே சந்து பணிக்கப்பட்டிருந்தார்," என்றார்.
பிற செய்திகள்:
- அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பம் ஏன் விமானங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது?
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
- இலங்கையில் முன்னெப்போதும் இல்லாமல் உயரும் நெல் விலை - என்ன காரணம்?
- சூயஸ் குடிநீர் திட்டம்: திமுகவின் நிலைப்பாடு தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாறியதா?
- ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்