You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய - இலங்கை கடற்படைக் கப்பல்கள் கொழும்பு, திருகோணமலையில் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபடத் திட்டம்
இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை நேற்று (24) மேற்கொண்டுள்ள இந்திய தெற்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவ்லா, இன்று (25) இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோரை சந்தித்துள்ளார்.
இந்திய கடற்படையின் ஒன்றாவது கடற்படை பயிற்சிப் பிரிவின் 6 பயிற்சிக் கப்பல்கள், இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியை நடத்துவதற்காக நேற்று (24) இலங்கையை வந்தடைந்த போது, இந்திய தெற்கு கடற்படைத் தளபதியும் இலங்கைக்கு நேற்றைய தினம் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கை கடற்படைத் தளபதியை, கடற்படைத் தலைமையத்தில் இன்று சந்தித்த - இந்திய தெற்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவ்லாவுக்கு, சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவ்லா மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி சுதர்ஷன பத்திரண ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது, இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்துப் பேசப்பட்டதாகவும், நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்திய தெற்கு கடற்படைத் தளபதியின் இந்த விஜயத்தின் போது, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கான கடற்படைத் தளபதிகள் உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார்.
மேலும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு கல்லூரி, கடற்படை மற்றும் கடல்சால் கல்லூரி ஆகிய இடங்களுக்கும், திருகோணமலை பிரதேசத்துக்கும் அவர் செல்லவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய தெற்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவ்லா, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, எதிர்வரும் 28ஆம் தேதி நாடு திரும்பவுள்ளார்.
இந்தியாவின் 6 கப்பல்கள்
இந்திய கடற்படையின் ஒன்றாவது பயிற்சிப் படையின் பயிற்சிக் கப்பல்கள், இருதரப்பு கடற்படை பயிற்சிக்காக நேற்று (24) இலங்கை வந்தடைந்தன.
மேற்படி கப்பல்களில் இந்திய கடற்படையின் கப்பல்களான 'ஷர்துல்' மற்றும் 'மகர்' ஆகியவை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. ஏனைய கப்பல்களான 'சுஜாதா', 'சுதர்ஷினி', 'தரங்கினி' ஆகியவையும் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான 'விக்ரம்' எனும் கப்பலும் திருகோணமலை துறைமுகத்துக்குச் சென்றுள்ளன.
இலங்கை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் ஒன்றாவது பயிற்சிப் பிரிவுக்கு - கேப்டன் அப்தாப் கான் சிரேஷ்ட அதிகாரியாக பணியாற்றுகிறார்.
மேற்படி கப்பல்கள் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் இலங்கையிலிருந்து கிளம்புவதற்கு முன்னர், கொழும்பு மற்றும் திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து இரு தரப்பு கடற்படைப் பயிற்சிகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை விமானப் படையின் 70ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்றபோது, அதில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களும் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது,
இந்த நிகழ்வில் இந்திய விமானப்படைக்குத் சொந்தமான 23 விமானங்கள் பங்கேற்றிருந்தன.
பிற செய்திகள்:
- வட்டிக்கு பணம் கொடுத்தவர் வெட்டிக் கொலை: 3 சிறுவர்கள் கைது
- 'என் உடல்நிலையில் தொய்வு உண்மைதான், ஆனால்...' - விஜயகாந்த் உருக்கம்
- 'நீதிபதியின் கருத்தால் மன உளைச்சல்' - நீதிமன்றத்தில் நடிகர் விஜய் முறையீடு
- ரிக்ஷா இழுப்பவரிடம் ரூ. 3.47 கோடி வரி கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ்
- ரோஹித் சர்மாவை நீக்குவீர்களா? - விராட் கோலிக்கு கோபமூட்டிய கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்