ரோஹித் சர்மாவை நீக்குவீர்களா? - விராட் கோலிக்கு கோபமூட்டிய கேள்வி - IND vs PAK உலகக்கோப்பை டி20

பாகிஸ்தானின் டி20 வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் செயல்பாடு, விளையாடிய வீரர்கள் தேர்வு என பல விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

டி20 உலகக் கோப்பை தொடரில், நேற்று (அக்டோபர் 24, ஞாயிற்றுக்கிழமை) இந்தியா தனது முதல் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாடியது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 17.5 ஓவரில் ஒரு விக்கெட்டை கூட விட்டுக் கொடுக்காமல் 152 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்றது.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியிடம் ரோஹித் சர்மா குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இது குறித்த ஒரு சிறு காணொளியை ஐசிசி தன் அதிகார ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இஷான் கிஷன் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினார், எனவே அவர் ரோஹித் சர்மாவை விட சிறப்பாக செயல்படுவார் என்று கருதுகிறீர்களா? என ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.

"இது மிகவும் கடினமான கேள்வி" என சிரித்துக் கொண்டே பதிலளித்தார் விராட் கோலி.

மேலும் "இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நான் விளையாடிய அணி சிறப்பான அணி என்று நான் கருதுகிறேன்" என பதிலளித்தார் கோலி.

"நீங்கள் ரோஹித் சர்மாவை சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து வெளியேற்றி விடுவீர்களா? நாங்கள் விளையாடிய முந்தைய ஆட்டத்தில் அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே" என்றார்.

நம்ப முடியாத கேள்வி என மீண்டும் சிரித்துக் கொண்டு, "உங்களுக்கு சர்ச்சைகள் வேண்டுமானால் என்னிடம் முன்கூட்டியே கூறுங்கள், நான் அதற்குத் தகுந்தாற் போல விடையளிக்கிறேன்" என்று கூறி அடுத்த கேள்விக்கு நகர்ந்தார்.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடந்த நேற்றைய போட்டியில், ரோஹித் சர்மா எதிர் கொண்ட முதல் பந்திலேயே (ஷாஹீன் வீசிய பந்து) எல்.பி.டபிள்யூ முறையில் தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

கடந்த மார்ச் 20ஆம் தேதி அஹமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், ரோஹித் சர்மா 34 பந்துகளுக்கு 64 ரன்களைக் குவித்து இந்தியா வெற்றி பெற உதவியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :