You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட்டிக்கு பணம் கொடுத்தவர் வெட்டிக் கொலை: 3 சிறுவர்கள் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(48). இவர் சுமைதூக்கும் பணியாளாராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் காரைக்குடி சேர்வார் ஊரணி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு லட்சுமணன் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். பிரகாஷ் ஒரு வழக்கில் தற்போது சிறையில் உள்ளார்.
இது தெரியாத லட்சுமணன் நேற்று பிரகாஷ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி அம்சவள்ளியிடம் கொடுத்த பணத்தையும் அதற்கான வட்டி பணத்தையும் கேட்டுள்ளார். அம்சவள்ளி கணவர் பிரகாஷ் வழக்கு ஒன்றில் கைது செய்யபட்டு சிறையில் இருப்பதாகவும், சிறையில் இருந்து வந்தவுடன் பணத்தை திருப்பித் தருவதாக கூறியுள்ளார்.
வாங்கிய பணத்தை உடனடியாக வட்டியுடன் கொடுக்கும் படி லட்சுமணன் அம்சவள்ளியைத் தகாத வார்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
உங்க அண்ணன் ஜெயிலுக்கு போயிட்டாரு பணம் கொடுத்தவர் வீடு தேடி வருவது எனக்கு அசிங்கமாக உள்ளது என அம்சவள்ளி தனது கணவர் பிரகாஷின் தம்பியிடம் கூறியுள்ளார். பிரகாஷின் தம்பிக்கு 15 வயது மட்டுமே ஆகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷின் தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமணனைக் கொலை செய்துள்ளார் என்று காவல்துறை தெரிவிக்கிறது.
ஞாயிற்றுகிழமை இரவு வேலை முடிந்து விட்டு லட்சுமணன் தனது சைக்கிளில் வீட்டுக்கு திரும்பும் வழியில், பிரகாஷின் தம்பி 15 மற்றும் 16 வயதாகும் தமது இரு நண்பர்களுடன் லட்சுமணனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்துவிட்டு அங்கிருந்து மூன்று சிறுவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குன்றக்குடியில் பதுங்கியிருந்த மூன்று சிறுவர்கள் மற்றும் பிரகாஷின் தந்தை சரவணன் உட்பட நான்கு பேரைக் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிரகாஷ் மனைவி அம்சவள்ளியை போலீசார் தேடி வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்