You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள், டால்ஃபின்கள், திமிங்கலங்கள் - காரணம் என்ன?
சில வாரங்களுக்கு முன் இலங்கை கடல் எல்லையில் ஆபத்தான ரசாயணங்கள், எரிபொருட்களை கொண்ட கப்பல் ஒன்று விபத்துக்கு உள்ளானது. அதன் பிறகு தற்போது நூற்றுக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கிக் கொண்டிருக்கின்றன.
தி எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்கிற கப்பல் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் கொழும்புக்கு அருகில் கடற்பகுதியில் விபத்துக்கு உள்ளாகி மூழ்கியது.
அக்கப்பலில் 278 டன் பங்கர் எரிபொருள், 50 டன் எரிவாயு, 25 டன் நைட்ரிக் அமிலம் என பல ரசாயணங்கள் இருந்தன. கடந்த மே மாதம் 20ஆம் தேதி இக்கப்பல் தீ விபத்துக்கு உள்ளானது.
இக்கப்பலில் இருக்கும் எரிபொருள் நீண்ட கால சுற்றுச்சூழலியல் பிரச்னையை பல தசாப்தங்களுக்கு ஏற்படுத்தும் என நிபுணர்கள் அஞ்சுகிறார்கள்.
இதுவரை 176 ஆமைகள், 20 டால்ஃபின்கள், நான்கு திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டிருக்கிறது.
ஆண்டின் இந்த கால கட்டத்தில் உயிரினங்கள் இறப்பது என்பது வழக்கமானதல்ல என ஓர் அரசு அமைச்சரே கூறியுள்ளார்.
"தென் மேற்கு பருவ காலத்தில், கடல் வாழ் உயிரினங்கள் இப்படி இறக்காது" என இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரா பத்திரிகையாளர்களிடம் கூறியதாக ராய்டர்ஸ் முகமை கூறியுள்ளது.
"தற்போது இறந்து கரை ஒதுங்கி இருக்கும் பெரும்பாலான உயிரினங்கள் மேற்கு கடற்கரையில், கப்பல் விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து தான் கண்டு எடுக்கப்பட்டு இருக்கின்றன"
186 மீட்டர் நீளம் கொண்ட எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் இந்தியாவில் ஹசீரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு வந்தடைய புறப்பட்டது. கடந்த மே மாதம் கொழும்பு துறைமுகத்துக்கு அருகே நங்கூரமிட்டு நின்றிருந்த போது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்துக்குப் பிறகு இலங்கையின் மிக அருமையான கடற்கரைகளில் பிளாஸ்டிக், எண்ணெய் போன்ற கழிவுகள் காணப்பட்டன. கடல் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கத் தொடங்கின.
விபத்து நடந்த போது தொடக்கத்தில் அப்பகுதியில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு தற்போது தளர்த்தப்பட்டு இருக்கிறது.
இலங்கை அரசு 40 மில்லியன் அமெரிக்க டாலரை காப்பீட்டுத் தொகையாக கோரியது. தீ அணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கான செலவு மற்றும் 50,000 மக்களுக்கு (இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள்) நஷ்ட ஈடு வழங்குவதற்கு என இந்த தொகையைக் கோரியது.
இந்த கப்பல் விபத்து நைட்ரிக் அமிலக் கசிவால் ஏற்பட்டதாகவும், கடந்த மே 11ஆம் தேதி முதல் ஏற்பட்ட இந்த கசிவை கப்பல் குழுவினர் அறிந்திருந்ததாகவும் இலங்கை அதிகாரிகள் நம்புகிறார்கள்.
கப்பலின் உரிமையாளரும், கப்பலில் நைட்ரிக் அமிலக் கசிவு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தங்கள் கப்பலுக்கு கத்தார் மற்றும் இந்தியா அனுமதி வழங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இலங்கையில் இந்த கப்பலுக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டது என்கிற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
இக்கப்பலை வழி நடத்திய ரஷ்ய கேப்டன், இலங்கையை விட்டுச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அவர் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரோடு 14 பேர் மீது இந்த வழக்கு சார்பாக குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறார்கள். ஜூலை 15ஆம் தேதி இவ்வழக்கு விசாரணை தொடங்கப்பட உள்ளது.
பிற செய்திகள்:
- இருப்பது 2 வெள்ளை காண்டாமிருகம், இரண்டுமே பெண்: இந்த இனத்தைக் காப்பாற்ற வினோத முயற்சி
- டோக்கியோ ஒலிம்பிக்: 40 ஆண்டுகளுக்குப் பின் தங்கம் வெல்லுமா இந்திய ஹாக்கி அணி?
- சைகோவ்-டி தடுப்பு மருந்து: கொரோனாவுக்கு எதிரான முதல் டி.என்.ஏ. தடுப்பு மருந்து
- நடுக்கடலில் இறங்கிய விமானம்; மரணத்தில் இருந்து தப்பிய விமானிகள்
- இந்தியாவில் கொரோனா வைரஸ்: 4 லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்