You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெள்ளை காண்டாமிருக இனத்தைக் காப்பாற்ற வினோத முயற்சி: இரண்டுமே பெண், எப்படி இனப்பெருக்கம் செய்விக்க முயல்கிறார்கள்?
- எழுதியவர், நிக் ஹாலாண்ட்
- பதவி, பீபிள் சேவிங் தி வேர்ல்ட், பிபிசி உலக சேவை
நஜின் மற்றும் ஃபடு. இந்த உலகின் கடைசி இரண்டு வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகங்கள். இந்த இரண்டுமே பெண் காண்டாமிருகங்கள். தாய் மற்றும் மகள்.
"ஒவ்வொரு நாளும் அவற்றை பார்க்கும்போது, இதுதான் இந்த உலகம்பார்க்கப் போகும் கடைசி காண்டாமிருகங்கள் என்று நினைக்கையில் மனம் வலிக்கிறது"என்கிறார் ஆப்பிரிக்காவின் கென்யாவில் உள்ள ஒல் பெஜெடா இயற்கை பூங்காவில் அவற்றை பார்த்துக் கொள்ளும் ஜேம்ஸ் ம்வெண்டா.
எனினும், அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த இனத்தை, பாதுகாக்க,இயற்கை பாதுகாவலர்கள் ஒரு சிறப்பான திட்டத்தை முன்வைத்துள்ளனர்.
உலகின் கடைசி வெள்ளை காண்டாமிருகங்கள்
கென்யா மலையின் (Mount Kenya) அடிவாரத்தில் இருக்கிறது ஒல் பெஜெடா இயற்கை பூங்கா.
காலையில் மலையை சூழ்ந்திருக்கும் மூடுபனி, மெதுவாக கீழிறங்கி புற்களில் படிகிறது.
நஜின் மற்றும் ஃபடு இரண்டுமே வேலியால் அடைக்கப்பட்ட இடம் ஒன்றில்தான் தூங்கும். ஆனால், காலையில் ஜேம்ஸ் அவற்றை திறந்த வெளியில் ஓய்வெடுக்கவும், புல் மேயவும் விடுவார்.
"ஃபடு புதர்களுக்கு இடையே தூங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தாய் நஜின்,புற்களை வயிறு நிறையும் வரை சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்" என்கிறார் ஜேம்ஸ்.
வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகங்களுக்கு புற்களை மேய அகலமான வாய் இருக்கும். இதுவே இந்த இனத்தின் தனிப்பட்ட சிறப்பு.
சதுப்பு நிலங்கள்தான் இவற்றின் இயற்கை வாழ்விடம். உகாண்டா, சூடான் மற்றும் காங்கோ குடியரசு பகுதிகளில் ஒருகாலத்தில் இந்த வெள்ளை காண்டாமிருகங்கள் சுற்றித்திரியும்.
ஆனால், பல ஆண்டுகளாக கொம்புகளுக்காக இவை வேட்டையாடப்படவே, இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
40 ஆண்டுகளுக்கு முன்…
நஜின் மற்றும் ஃபடு ஆகிய இரண்டுமே கென்யாவில் பிறக்கவில்லை. அவை பிறந்தது செக் குடியரசு நாட்டில்.
1975ல் அதன் இருப்பிடமான சதுப்புநிலக் காடுகளில் அவற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைய அப்போது செக்கோஸ்லோவேகியாவில் இருந்த த்வுர் பூங்காவிற்கு ஆறு வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகங்கள் கொண்டுவரப்பட்டன.
அவற்றை இனப்பெருக்கம் செய்விக்க சிறந்த முறை எதுவென்று பூங்கா நிர்வாகம் யோசித்தது. அப்போது இருந்த ஒரே நம்பிக்கை இயற்கையான இனப்பெருக்க முறைதான்.
1977 - 1983 காலகட்டத்தில் மூன்று காண்டாமிருகங்கள் பிறந்தன. பிறகு ஆறு ஆண்டுகள் கழிந்து நஜின் பிறந்தது. 11 ஆண்டுகள் கழித்து, நஜினுக்கு பிறந்த குட்டிக்கு ஃபடு என்று பெயரிடப்பட்டது.
ஆனால், ஒரு பிரச்னை இருந்தது. இனப்பெருக்க விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. மேலும் ஆண் காண்டாமிருகங்கள் வயது மூப்பு காரணமாக ஒவ்வொன்றாக இறந்தன.
செயற்கை இனப்பெருக்க முறை
ஆய்வகத்தில் கருவை உருவாக்கி, இனப்பெருக்கம் நடந்தால் மட்டுமே வடக்கத்திய வெள்ளை காண்டமிருக இனத்தை காக்க முடியும் என்று பூங்கா நிர்வாகம் நம்பியது.
"ஆண் காண்டாமிருகங்களிடம் இருந்து விந்தணுவை எடுத்து, அவற்றை பெண் காண்டாமிருகங்களுக்கு செலுத்தினோம்" என்கிறார் பெர்லினை சேர்ந்த விலங்குகள் இனப்பெருக்க வல்லுநர் தாமஸ் ஹில்டர்பிராண்ட்.
அவற்றின் எடை மிகவும் அதிகம் என்பதால் அந்த நடைமுறை எளிமையானதாக இருக்கவில்லை. ‘
கிரேனை வைத்து காண்டாமிருகங்களை தூக்கி இனப்பெருக்க உறுப்புகளை அணுக வேண்டியிருந்தது.
பின்னர் பெர்லினில் உள்ள ஆய்வகத்தில் விந்துகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் முயற்சி எடுக்கப்பட்டும், அது எந்த பலனையும் தரவில்லை.
அவை இயற்கையாக வாழும் இருப்பிடத்தில் இருந்தால் கருத்தரிக்கும் முறை எளிமையாக இருக்கும் என்று நம்பப்பட்டது.
அதனை தொடர்ந்து 2009ஆம் ஆண்டு நஜின் மற்றும் ஃபடு ஆகிய இரண்டும், சன்னி மற்றும் சுடானோடு (கடைசி இரண்டு ஆண் காண்டாமிருகங்கள்) கென்யாவுக்கு கொண்டுவரப்பட்டன.
"இந்த காண்டாமிருகங்கள் உறவில் ஈடுபட்டன. ஆனால் எந்த கருவும் உருவாகவில்லை" என்கிறார் ஜேம்ஸ்.
அப்போது 2009ல் 14 வயதான ஃபடுவுக்கு தொற்று ஏற்பட்டு கருப்பை முற்றிலும் சேதமடைந்திருந்தது தெரியவந்தது. அதோடு, நஜினுக்கும் தசைகளில் பாதிப்பு ஏற்பட்டு, சுமார் 100 கிலோ எடை கொண்ட குட்டியை சுமக்க வாய்ப்பில்லாமல் போனது.
பிறகு அந்த ஆண்டே சன்னி இறந்துவிட, 45 வயதான உலகின் கடைசி ஆண் வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகமான சுடான் 2018ல் இறந்தது.
ஐவிஎஃப் முறையில் கருத்தரித்தல்
நஜின் மற்றும் ஃபடுவால் கருத்தரிக்க முடியவில்லை என்றாலும், அவை இன்னும் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன என்பது தாமசுக்கு தெரிய வந்தது.
"கடைசி இரண்டு பெண் வெள்ளை காண்டாமிருகங்களிடம் இருந்து ஏன் முட்டைகளை சேரிக்கக் கூடாது என்று நினைத்தேன்" என்கிறார் தாமஸ்.
ஆண் மிருகங்களிடம் இருந்த சேகரிக்கப்பட்ட விந்து ஏற்கனெவே பெர்லின் ஆய்வத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் ஐவிஎஃப் முறையில் நஜின் மற்றும் ஃபடுவின் முட்டைகளை வைத்து ஆய்வகத்தில் கரு உருவாக்கலாம் என்று திட்டமிடப்பட்டது.
டெஸ்ட் ட்யூப் காண்டாமிருகங்கள் தான் கடைசி வாய்ப்பாக தோன்றியது.
ஆனால் அதற்கு பெண் காண்டாமிருகங்களிடம் இருந்து முட்டை எடுப்பதில் பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
"இது வெற்றி பெறாமல் போகலாம் என்று எனக்கு புரிந்தது. ஆனால், அனைத்து முயற்சிகளை செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்" என்கிறார் தாமஸ்.
வடக்கத்திய பெண் வெள்ளை காண்டாமிருகங்களின் கருப்பைகள் அதன் உடலின் ஆழமான உள்பகுதியில் இருக்கும்.
இந்த முறையை இதற்கு முன் யாரும் செய்தது கிடையாது. சிறிய தவறு நிகழ்ந்தாலும் காண்டாமிருகம் இறப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்.
2019ல் இதற்கான அறுவை சிகிச்சை நடந்த போது நஜின் மற்றும் ஃபடுவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.
அவை இரண்டும் படிப்படியாக மயக்க நிலைக்கு சென்ற பின்பு தாமஸ் மற்றும் அவரது குழுவினர் பணியில் இறங்கினர்.
"முதலில் அதன் மலக்குடலை கிருமி நீக்கம் செய்தோம். அதில் மலம் ஏதும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். பின்னர் சிறப்பு கருவி ஒன்றை உள்ளே செலுத்தினோம்" என்கிறார் தாமஸ்.
சிறப்புக் கருவியின் நீண்ட எஃகு குழாய் முனையில் ஒரு ஊசி இருக்கும்.
அதனை காண்டாமிருகத்தின் மலக்குடலுக்குள் செலுத்த வேண்டும். வேறு சில உள் உறுப்புகளை தாண்டினால், அங்கு கருப்பை இருக்கும்.
சுமார் 2 மீட்டர் தூரம் உள்ளே செலுத்த வேண்டும். இதற்காக தாமஸ், அல்ட்ரா சௌண்ட் கேமிராவை பயன்படுத்தினார்.
குழாய் முனையில் இருக்கும் ஊசி அவசியமானது. அதுதான் கருப்பையில் இருந்து முட்டைகளை உறிஞ்ச உதவும். ஆனால் ஊசி கூர்மையாக இருப்பதால், ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும் பெரும் ஆபத்தில் போய் முடியும்.
"அதோடு கருப்பைகள் ஒவ்வொன்றும் சிறிய உருளைக்கிழங்கு அளவிற்கு இருக்கும். அவை ஒரு பெரிய ரத்தக் குழாய் அருகில் இருக்கும். அந்த ரத்த குழாயானது ஒரு குழந்தையின் கை அளவிற்கு இருக்கும். தவறாக அந்த ஊசி, ரத்தக்குழாய் மீது பட்டுவிட்டால், காண்டாமிருகம் இறப்பதற்கான வாய்ப்பு அதிகம்"
ஒருவழியாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
தாமஸ் மற்றும் அவரது குழுவினர், கருப்பையில் இருந்த நீரை வெளியேற்றி 10 முட்டைகளை எடுத்தனர்.
பின்னர் அந்த முட்டைகள் இத்தாலியில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு, வடக்கத்திய வெள்ளை ஆண் காண்டாமிருகத்தின் விந்துடன் எடுத்துச் செல்லப்பட்டன.
இதன் விளைவாக இரண்டு கருக்கள் உருவாயின. இது பெரிய வெற்றிக்கான முதல் படி.
ஆனால், அடுத்த கேள்வி, இந்த கருவை, ஒரு கருப்பைக்குள் வைத்தால்தான், அதனால் வளர முடியும்.
நஜின் மற்றும் ஃபடுவால் கருவை சுமக்க முடியாது என்பதால், தெற்கத்திய வெள்ளை காண்டாமிருகம் ஒன்றை தேர்ந்தெடுத்து அதன் கருப்பையில் கருவை வைக்க திட்டமிடப்பட்டது.
வடக்கத்திய, தெற்கத்திய காண்டாமிருகங்கள் முன்னொரு காலத்தில் உறவு வைத்து, கலப்பு இனம் ஒன்றை உருவாக்கி இருந்தன.
அதனால், இந்த முடிவு சரியாக இருக்கும் என்று தாமஸ் எண்ணினார்.
ஆனால், இதன் முடிவு தெரிய நீண்ட காலம் ஆகலாம்.
முதலில் அதற்கு ஐரோப்பாவில் இருந்து கென்யாவிற்கு அந்த கரு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டும்.
பின்னர் இதனை கருப்பைக்குள் செலுத்த வேண்டும். இது இந்தாண்டு இறுதியிலோ அல்லது 2022 தொடக்கத்திலோ நடக்கலாம்.
அனைத்தும் வெற்றிகரமாக நடந்தால், 16 மாத கர்ப்ப காலம் முடிந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் காண்டாமிருகக்குட்டி பிறக்கலாம்.
வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகங்களின் எதிர்காலம்
"தற்போது இரண்டே பெண் காண்டாமிருகங்கள்தான் இருக்கின்றன. ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை மாறி, தற்போது அவற்றை பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம்" என்கிறார் ஜேன்
தற்போது முட்டைகளை வெற்றிகரமாக வெளியே எடுத்திருக்கிறோம். இது 5 முறை மீண்டும் செய்யப்பட்டது.
அதனால், தற்போது நஜின் மற்றும் ஃபடு சேர்ந்து 9 கருக்களை கொடுத்துள்ளன.
அவை பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வைக்கப்படுள்ளன.
எதிர்காலத்தில் அதிக அளவிலான வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகங்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.
"வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகங்கள் மிகப் பெரிதாக இருக்கும். மனிதர்கள் இந்த உலகத்தில் இருந்து அவற்றை அழித்துவிட்டனர். தற்போது அவற்றை மீண்டும் இந்த உலகிற்கு கொண்டுவர ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்கிறார் தாமஸ்.
"எதிர்காலத்தில் காடுகளில் இந்த வகையான காண்டாமிருகங்களை சுற்றித்திரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சிகளை எடுக்கிறோம். அதற்கு ஒவ்வொரு படியாக எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது" என்று கூறுகிறார் ரிச்சர்ட்.
ஒரு வேளை எதிர்காலத்தில் வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகங்களின் புதிய தலைமுறை உருவாகலாம். அதற்கு இதுவே முதல்படி."People Fixing the World" என்ற ரேடியோநிகழ்ச்சியில் ([email protected]) இருந்து இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. தொகுத்தவர் எவா ஒன்டிவெரோஸ்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்