You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒட்டகச்சிவிங்கியை விட உயரமான காண்டாமிருகம் - 2.65 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்ததாக தகவல்
ஒரு மிகப் பெரிய காண்டாமிருக இனத்தை சீனாவின் வட மேற்குப் பகுதியில் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது நிலத்தில் நடக்கும் மிகப் பெரிய பாலூட்டிகளில் ஒன்றாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது.
21 டன் எடை கொண்ட (இது நான்கு ஆப்பிரிக்க யானைகளின் எடைக்குச் சமம்) தி பராசிராதெரியம் லின்சியான்ஸ் (The Paraceratherium linxiaense) என்கிற காண்டாமிருக இனம் 26.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
கொம்பு இல்லாத அந்த காண்டாமிருகத்தினால் ஏழு மீட்டர் உயரமுள்ள மரம், செடி கொடிகளை மேய முடிந்திருக்கும் என்பதால், அது ஒட்டகச்சிவிங்கியை விட உயரமானதாக கருதப்படுகிறது.
சீனாவில் இருக்கும் கான்சு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவத்தைக் கொண்டு இந்த புதிய காண்டாமிருக இனம் தொடர்பான விஷயங்கள் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
'கம்யூனிகேஷன் பயாலஜி' என்கிற அறிவியல் சஞ்சிகையில், கடந்த வியாழக்கிழமை இது குறித்த ஆராய்ச்சிகள் பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றன.
அதில், கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவின் வாங்ஜியாசுவான் என்கிற கிராமத்துக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவத்தை பகுப்பாய்வு செய்த போது, அது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெரிய காண்டாமிருக இனங்களில் இருந்து, முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கும் இப்புதிய இன காண்டாமிருகத்தின் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பை எடுத்துக் கொண்டால், அதன் மண்டை ஓடு மிகவும் மெலிதானவையாகவும், டபே (Tapir) என்கிற உயிரினத்தைப் போல அதன் மூக்குப் பகுதி மரங்களைப் பற்றுவதற்கு ஏதுவானதாக இருந்ததைக் சுட்டிக் காட்டுகிறது என தலைமை ஆராய்ச்சியாளர் மற்றும் பெய்ஜிங்கில் இருக்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வெர்டெப்ரேட் பேலியான்டாலஜி அண்ட் பேலியாந்த்ரோபாலஜி முனைவர் டெங் டாவ்வின் ஆராய்ச்சி கூறுகிறது.
மேலும், இப்புதிய இன காண்டாமிருகம், ஒரு காலத்தில் பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த பிரம்மாண்ட காண்டாமிருக இனத்துக்கு மிக நெருக்கமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்து இருக்கிறது. ஆக இந்த காண்டாமிருக இனம் மத்திய ஆசியா முழுக்க பயணித்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
வட மேற்கு சீனா முதல் இந்தியா பாகிஸ்தான் எல்லை வரை இந்த காண்டாமிருக இனம் சுற்றித் திரிந்து இருக்கிறது என்றால், அந்த காலத்தில் திபெத் பீடபூமிப் பகுதிகளில் சில பகுதிகள் தாழ்வான பகுதிகளாக இருந்திருக்கும் என்பதை காட்டுகிறது.
"வெப்பமண்டல காலநிலை அந்த பிரம்மாண்ட காண்டாமிருகத்தை மத்திய ஆசியாவை நோக்கி நகர அனுமதித்திருக்கிறது. அந்த கலத்தில் திபெத் பீடபூமி பகுதி உயர்ந்து எழாமல் இருந்திருக்கலாம்" என பேராசிரியர் டெங் டாவ் கூறினார்.
பிற செய்திகள்:
- இலங்கை மாகாண சபை தேர்தலுக்கு ஆதரவாக கருத்து கூறிய இந்திய ஹைகமிஷன்: தமிழ் தேசிய கூட்டமைப்பு
- இலங்கை மாகாண சபை தேர்தலுக்கு ஆதரவாக கருத்து கூறிய இந்திய ஹைகமிஷன்: தமிழ் தேசிய கூட்டமைப்பு
- நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாடு பாஜகவினர் கடுமையாக விமர்சிப்பது ஏன்?
- அதிகம் தடுப்பூசி போட்ட தெற்கு டெல்லி, மாஹே குறைவாக செலுத்திய திருவண்ணாமலை: காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்