இலங்கை சுனாமி: தொலைந்த மகனுக்கு உரிமை கோரும் இரு பெண்கள் - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் மகன் ஒருவருக்கு இரண்டு தாய்மார் உரிமை கோரும் வழக்கை திங்கட்கிழமை விசாரித்த அம்பாறை மாவட்டம் - சம்மாந்துறை நீதிமன்றம், உண்மையைக் கண்டறிய இரு தரப்பினரின் மரபணு பரிசோதனையை (டி.என்.ஏ) மேற்கொள்வதற்கு தீர்மானித்தது.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது ஐந்து வயதில் காணாமல் போன தன்னுடைய மகன், கடந்த வாரம் 21 வயது இளைஞனாக தனது வீட்டுக்கு வந்துள்ளார் என, அம்பாறை மாவட்டம் - மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா என்பவர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததோடு, கிராமசேவை உத்தியோகத்தருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து, குறித்த பையனுக்கு தான்தான் தாய் என்றும், தனது மகன் பிறந்ததில் இருந்து தன்னுடனேயே வளர்ந்து வருவதாகவும் அம்பாறையைச் சேர்ந்த நூறுல் இன்ஷான் என்பவரும் உரிமை கோரினார். மட்டுமன்றி, தனது மகனை ஹமாலியா என்பவரிடமிருந்து மீட்டுத் தருமாறு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை முறைப்பாடு ஒன்றினையும் அவர் பதிவு செய்திருந்தார்.
இதற்கிணங்க சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் இவ்விடயம் தொடர்பில் வழக்கு ஒன்றினை பொலிஸார் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு இன்று திங்கட்கிழமை நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சர்ச்சைக்குரிய மகனை உரிமை கோரும் தாய்மார்களான ஹமாலியா மற்றும் நூறுல் இன்ஷான் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர். சர்சைக்குரிய மகன் - இதுவரையில் தன்னை வளர்த்து வந்த தாய் - நூறுல் இன்ஷான் என்பவருடன் இணைந்து நீதிமன்றில் முன்னிலையானார்.
குறித்த மகனுக்கு அக்ரம் றிஸ்கான் என - தான் பெயர் வைத்ததாக ஹமாலியா கூறும் அதேவேளை, தனது மகனின் பெயர் முகம்மட் சியாம் என்கிறார் நூறுல் இன்ஷான்.

ஹமாலியா சார்பில் மூன்று சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த போதும், நூறுல் இன்ஷான் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை
குறித்த பையன் தமது மகன் என தெரிவித்த இரண்டு தாய்மாரும், அதனை நிரூபிக்கும் பொருட்டு, சில ஆவணங்களையும் மன்றில் ஒப்படைத்தனர்.
சுனாமியின் போது மகனைத் தொலைத்த தாய் ஹமாலியா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்; "இந்த வழக்கு முடியும் வரையில் வாரத்தில் மூன்று நாட்கள் ஹமாலியாவுடன் சர்ச்சைக்குரிய மகன் தங்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.
அக்டோபர் 7இல் ஆஜராக உத்தரவு
இரண்டு பக்க வாதங்களையும் செவிமடுத்த நீதவான்; குறித்த பையன் யாருடைய மகன் என்பதைக் கண்டறியும் பொருட்டு, மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தீர்மானித்தார். எனவே, இரண்டு தாய்மார்கள் மற்றும் சர்ச்சைக்குரிய மகன் ஆகியோருடன், இரண்டு தாய்மாரின் கணவர்களையும் புதன்கிழமை (அக்டோபர் 7) நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
மேற்படி இரண்டு தாய்மாரின் கணவர்களும் அவர்களிடமிருந்து சட்டப்படி பிரிந்து வாழ்வதாக இதன்போது மன்றில் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும், நூறுல் இன்ஷானின் முன்னாள் கணவர் அமீர் என்பவர் இன்றைய தினம் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டமையை அடுத்து, நீதிமன்றுக்கு தான் வருகை தந்தாக அவர் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், மரபணு பரிசோதனையில் உண்மையான தாய் யார் என தெரியவந்தாலும் கூட, குறித்த மகன் 18 வயதுக்கு மேற்பட்டவர் (மேஜர்) என்பதால், எந்தத் தாயுடன் வாழ்வது என்கிற முடிவை எடுக்கும் உரிமை சம்பந்தப்பட்ட மகனுக்கே உள்ளது எனவும் இதன்போது நீதவான் சுட்டிக்காட்டினார்.

வழக்கு விசாரணையின் பின்னர் பிபிசி தமிழிடம் பேசிய தார்மார் இருவரும், இந்த விடயத்தில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதேவேளை, குறித்த பையன் நூறுல் இன்ஷானுக்குப் பிறந்தவர் என்றும், அவரின் தந்தை தான்தான் எனவும் இன்று நீதிமன்றுக்கு வருகை தந்திருந்த அமீர் என்பவர் பிபிசியிடம் கூறினார்.
பின்னணி என்ன?
சுனாமி அனர்த்தத்தின் போது ஐந்து வயதில் காணாமல் போன தனது மகன், 16 வருடங்களின் பின்னர் - மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளார் என்று, அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
முகம்மட் அக்ரம் றிஸ்கான் எனும் பெயருடைய தனது மகன் 1999ஆம் ஆண்டு பிறந்தாக ஹமாலியா கூறினார்.
கடந்த வாரம் ஹமாலியாவை பிபிசி தமிழ் சந்தித்த போது, இது தொடர்பில் பல விடயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
"சுனாமி அனர்த்தம் நடந்த வேளையில் - நான் வீட்டில் இல்லை; வேலைக்குச் சென்றிருந்தேன். அப்போது மகனுக்கு 05 வயது. நான் வேலைக்குப் போகும் போது, எனது தாயிடம்தான் மகனை ஒப்படைத்து விட்டுச் செல்வேன். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது எனது பிள்ளை காணாமல் போய்விட்டார்" என்று ஹமாலியா தெரிவித்தார்.
"மகன் காணாமல் போனதையடுத்து பல இடங்களிலும் தேடத் தொடங்கினேன். சுனாமி ஏற்பட்டு நாலாவது நாளன்று வைத்தியசாலையொன்றில் எனது மகன் உள்ளார் எனக் கேள்விப்பட்டேன். அங்கு சென்று பார்த்தபோது - பிள்ளை இல்லை. ஆனாலும் தேடும் முயற்சியை நான் கைவிடவில்லை". என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஹமாலியாவுக்கு ஒரேயொரு பிள்ளைதான். அதுவும் காணாமல் போய்விட்டதால் பெரும் கவலையடைந்தார். "மகன் கிடைத்து நாலாவது மாதம், கணவர் பிரிந்து சென்று விட்டார்" என்று, தனது துயரத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
"2016ஆம் ஆண்டு, அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் மூலம், எனது பிள்ளை - அம்பாறையிலுள்ள வீடொன்றில் வசித்து வருவதாக தெரிந்து கொண்டேன். அதனையடுத்து எனது பிள்ளையைத் தேடிச் சென்றேன்".
"சிங்களப் பெண்கள் போல் ஆடையணிந்து, சோப் விற்பனை செய்பவரைப் போல், கடலை விற்பவரைப் போல், பிச்சைக்காரி போலெல்லாம் வேடமணிந்து எனது மகன் இருக்கும் வீட்டுப் பக்கமாகச் சென்றேன். அப்போது இவர்தான் எனது மகன் என்பதை நான் கண்டு கொண்டேன். பிறகு அங்குள்ளவர்களிடம் பேசி, இவர் என்னுடைய மகன் என்பதைக் சொன்னேன். அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை".
"அண்மையில் சிங்கள நண்பர்கள் மூலமாக எனது மகனின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டேன். அவருடன் பேசினேன். தொழிலொன்றின் நிமித்தம் கொழும்பு சென்றிருந்த அவர், இப்போது என்னிடம் வந்து சேர்ந்துள்ளார்" என்று நடந்த விடயங்களை ஹமாலியா விவரித்தார்.
தனது மகனின் பெயர் அக்ரம் றிஸ்கான் என்று ஹமாலியா கூறிய போதும், குறித்த பையன் தனது பெயர் - முகம்மட் சியான் என்றார்.
ஹமாலியாவுடன் வாழ்ந்த சிறு வயது ஞாபகங்கள் எவையும் அந்தப் பையனின் நினைவில் இல்லை. "நீ என்னுடைய மகன்" என்று ஹமாலியா கூறியதை நம்பியே, அவர் அங்கு வந்து சேர்ந்திருந்தார்.
சுமாமியின் போது காணாமல் போன தனது மகன் - வேறொரு குடும்பத்தில் வளர்கிறார் என்றும், அவரை மீட்டுத் தருமாறு கோரியும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சில வருடங்களுக்கு முன்னர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாக ஹமாலியா கூறினார்.
மேலும் ஜனாதிபதி செயலகம் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு போன்ற இடங்களுக்கும், தனது மகனை மீட்டுத் தருமாறு கோரி - எழுத்து மூலம் அவர் முறையிட்டிருக்கின்றார். "ஆனால், அந்த முறைப்பாடுகளுக்கமைய எனக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை" என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
இரண்டாவது தாய்
இது இவ்வாறிருக்க, குறித்த பையன் தன்னுடைய மகன்தான் என்று அம்பாறை நகரில் வாழும் 42 வயதுடைய நூறுல் இன்ஷான் என்பவரும் உரிமை கோரினார்.
அவரை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசிய போது; "ஹமாலியா எனும் பெண் எனது மகனைத் தேடி இங்கு அடிக்கடி வந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் நான் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றிருந்தேன். அந்தப் பெண்ணிடம் எனது தாயார்; "சியான் எங்கள் பிள்ளை" என்று கூறியிருக்கிறார். ஆனால், அவர் அதனைக் கருத்தில் எடுக்காமல் அடிக்கடி வந்து தொந்தரவு செய்திருக்கிறார்" என்று கூறினார்.
"சியான் 2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி அம்பாறை வைத்தியசாலையில் பிறந்தார்" என்று தெரிவித்த நூறுல் இன்ஷான்; தான் கர்ப்பமாக இருந்த போது - சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் வழங்கப்பட்ட 'கர்ப்பவதி பதிவேறு', மகன் பிறந்தபோது வழங்கப்பட்ட 'குழந்தையின் சுகாதார வளர்ச்சிப் பதிவேடு' ஆகியவற்றினைத் தேடியெடுத்துக் காண்பித்தார்.

மேலும் சியானின் சிறிய வயது புகைப்படங்களையும் அவர் காட்டினார்.
அம்பாறையிலுள்ள சத்தாதிஸ்ஸ எனும் பாடசாலையில் சியான் முதலாம் வகுப்பில் மூன்று மாதங்கள் வரை கல்வி கற்றுள்ளார். அதன் பின்னர் சியானின் தாயை - ஹம்பாந்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் திருமணம் செய்து அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அதனால் முதலாம் வகுப்பிலிருந்து 05ஆம் வகுப்பு வரை ஹம்பாந்தோட்டயிலுள்ள பாடசாலையொன்றில் சியான் படித்துள்ளார்.
பின்னர், சியானின் தாய் மீண்டும் அம்பாறை வந்துள்ளார். அதனையடுத்து 05ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை மீண்டும் அம்பாறையிலுள்ள பாடசாலைக்கு சியான் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் படிப்பை தொடரவில்லை.
இவை அனைத்தும் சியானின் தாயார் கூறிய விடயங்கள்.
இந்தப் பின்னணியில்தான், சுனாமியின் போது காணாமல் போன தனது மகன் திரும்பி வந்துள்ளதாகவும், அம்பாறையில் உள்ள நூறுல் இன்ஷான் என்பவர் தனது மகனின் வளர்ப்புத்த தாய் என்றும், முகம்மட் அக்ரம் றிஸ்கான் எனும் தனது மகனுக்கு, அவரை வளர்த்தவர்கள் சியான் எனப் பெயர் வைத்துள்ளார்கள் எனவும் ஹமாலியா தெரிவித்தார்.
கடந்த வாரம் ஹமாலியாவின் வீட்டுக்குச் சென்றிருந்த சியான்; இரண்டு நாட்களின் பின்னர், அம்பாறையிலுள்ள தாய் நூறுல் இன்ஷானின் வீட்டுக்குச் சென்று, அங்கேயே தொடர்ந்தும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- பைபோலார் டிஸ்ஸார்டர்: தற்கொலைக்கு காரணமாகக் கூடிய நோய்
- ஹாத்ரஸ் வழக்கு: யார் குற்றவாளி? விடை கிடைக்காத 6 முக்கிய கேள்விகள்
- 3,000 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய காட்டுக்குள் விடப்பட்ட ’டாஸ்மானியா பேய்கள்’
- நோபல் பரிசு 2020: "ஹெபடைட்டிஸ் சி" வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
- இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று: அவசரநிலை அறிவிப்பு - விரிவான தகவல்கள்
- பிக் பாஸ் சீஸன் 4: பங்கேற்பவர்கள் யார், யார்? பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












