ஹாத்ரஸ் வழக்கு: யார் குற்றவாளி? விடை கிடைக்காத 6 முக்கிய கேள்விகள்

ஹாத்ரஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர், ஹாத்ரஸ்

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் 19 வயது பட்டியலின பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறப்பட்ட சம்பவத்தில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வெளிவரும் தகவல்கள், அந்த வழக்கின் விசாரணையை மேலும் சிக்கலாக்கி வருகிறது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்து விட்ட நிலையில், அவரது மரணம் தொடர்பாக தவறான தகவல்களை அவரது குடும்பத்தார் அளித்ததாகவும், காவல்துறையினர் எதையோ மறைக்க முற்படுவதாகவும், அரசியல் செய்ய இந்த மரணத்தை உத்தர பிரதேச அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் விடை காண முடியாத ஆறு முக்கிய கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் எல்லா சர்ச்சைகளுக்கும் தீர்வு கிடைக்கலாம்.

கேள்வி 1: சம்பவ நேரத்தில் பெண்ணின் இளைய சகோதரர் எங்கே இருந்தார்?

இது குறித்து விசாரித்தபோது, அந்த பெண்ணின் இளைய சகோதரர் பெயர் சந்தீப் என தெரிய வந்தது. அதே நேரம் பாதிக்கப்பட்ட பெண் பேசுவது போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த பெண்ணை சம்பவ பகுதியில் இருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது அந்த காணொளி பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காணொளியில், "சந்தீப் எனது கழுத்தை நெறித்தான்" என்று அந்த பெண் பேசுவது போல உள்ளது.

இந்த காணொளி உண்மை என்றால், அவர் குறிப்பிடும் சந்தீப் அவரது இளைய சகோதரரா அல்லது வேறு ஒரு சந்தீப்பா? என்ற குழப்பம் உள்ளது. ஏனென்றால் இந்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்த நால்வரில் ஒருவரது பெயரும் சந்தீப். இது பற்றி உயிரிழந்த பெண்ணின் சகோதரர் சந்தீப்பிடம் பிபிசி பேசியது. அப்போது அவர் சம்பவம் நடந்தபோது தான் நொய்டாவில் இருந்ததாகவும் பிறகு தனது சகோதரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் அங்கேயே இரண்டு வாரங்கள் இருந்து கடைசியில் அவரது சடலத்துடனேயே கிராமத்துக்கு திரும்பியதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கிராமவாசிகள் பலரும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கும் சந்தீப் அவரது இளைய சகோதரராகத்தான் இருக்கும் என்கின்றனர். ஆனால், சம்பவ நாளில் அவர் கிராமத்தில் இருந்தாரா அவரை வேறு யாரேனும் பார்த்தார்களா என்பதற்கு யாரிடமும் விடையில்லை.

ஹாத்ரஸ்

கேள்வி 2: முதலாவது முதல் தகவல் அறிக்கையில் ஏன் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு பதியப்படவில்லை?

பாதிக்கப்பட்ட பெண்ணை முதலில் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அவரது குடும்பத்தினர் பிறகு அவரை உள்ளூர் மருத்துவமனையில் இருந்தும், அங்கிருந்து அலிகார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். அப்போது அவரது மூத்த சகோதரர் அளித்த புகாரின்பேரிலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில் சந்தீப் அவரது கழுத்தை நெறித்தார் என்று கூறப்பட்டதன் அடிப்படையில் சந்தீப் என்ற நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

இந்த விவகாரத்தில் ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் முதல் கட்டத்திலேயே தங்களுடைய மகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக புகாரை பதியவில்லை என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து உயிரிழந்த பெண்ணின் தாயிடம் பிபிசி கேட்டது. அதற்கு அவர், "அந்த நேரத்தில் எனது மகள் பேசும் நிலையில் இருக்கவில்லை. அவர் ஓரளவுக்கு நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தக்கூடிய மனநிலைக்கு வந்ததும்தான் முழு விவரத்தையும் கூறினார்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விவரத்தை தொடக்கத்திலேயே கூறியிருந்தால் தனக்கு ஏதேனும் ஆபத்து நேரலாம் என்று தனது மகள் அஞ்சியிருக்கலாம் என்றும் அதுமட்டுமல்லாமல் வயல் வெளியில் தனது மகளை பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தார் என்றும் அந்த பெண்ணின் தாய் பிபிசியிடம் கூறினார்.

கேள்வி 3: காவல்துறையினர் ஏன் தொடக்கத்திலேயே பாலியல் வல்லுறவு தொடர்பான பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை?

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டாரா என்பதை கண்டறியும் பரிசோதனை செப்டம்பர் 22ஆம் தேதிதான் நடத்தப்பட்டது. அதுவும் காவல்துறையிடம் தான் கூட்டுப்பாலியலுக்கு ஆளானதாக அவர் தெரிவித்த பிறகே காவல்துறையினர் பரிசோதனைக்கான நடவடிக்கையை எடுத்தனர். அதன்பேரில், ஆக்ராவில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தைச் சேர்ந்தவர்கள் அவரது ரத்த மாதிரி உள்ளிட்ட பிற தடயங்களை செப்டம்பர் 25ஆம் தேதி சேகரித்தனர்.

தொடக்கத்திலேயே ஏன் காவல்துறையினர் பாலியல் வல்லுறவு தொடர்பான பரிசோதனையை செய்யவில்லை என்று அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் ஆக இருந்த விக்ராந்த் வீரிடம் பிபிசி கேட்டது. அதற்கு அவர், தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் கொலை முயற்சி நடந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணே வாக்குமூலம் அளித்ததால் அதன் அடிப்படையில் செப்டம்பர் 22ஆம் தேதி பாலியல் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

ஹாத்ரஸ்

எனினும், முதலாவது கட்டத்திலேயே ஏன் விரிவாக விசாரணை நடத்தி தடயங்களை சேகரிக்க காவல்துறையினர் ஆர்வம் காட்டவில்லை என விக்ராந்த் வீரிடம் பிபிசி கேட்டபோது, அதற்கான விடை அவரிடம் இல்லை.

கேள்வி 4: பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் மருத்தவ அறிக்கையோ, பிரேத பரிசோதனை நகலையோ காவல்துறை ஏன் வழங்கவில்லை?

தங்களுடைய மகளின் மருத்துவ நிலைமையை விவரிக்கும் அறிக்கையை கோரியபோது அதை காவல்துறையினர் வழங்கவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். இது குறித்து அப்போதைய மாவட்ட கண்காணிப்பாளர் விக்ராந்த் வீரிடம் கேட்டபோது, அந்த அறிக்கை மிகவும் ரகசியமானவை. புலனாய்வு நடந்து வருவதால் அதை குடும்பத்தாரிடம் அளிக்கவில்லை என்று கூறினார். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர்களின் மகளுடைய மருத்துவ அறிக்கையின் விவரத்தை பெற உரிமை உள்ளதே என்று கேட்டபோது, அதற்கான விடை காவல்துறையிடம் இருக்கவில்லை.

தற்போதைய மருத்துவ அறிக்கை அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகவில்லை என்றூ கூறப்பட்டாலும், அதில் கட்டாயப்படுத்தப்பட்ட நிலைக்கு அந்த பெண் ஆட்படுத்தப்பட்டதை மருத்துவ அறிக்கை காண்பிக்கிறது என்று சுட்டிக்காட்டியபோதும், தங்களுடைய அறிக்கையில் அதை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. இது குறித்து எஸ்.பி விக்ராந்த் வீரிடம் பிபிசி கேட்டபோது, அந்த விவரத்தை வெளிப்படுத்த முடியாது. தற்போது அனைத்தும் விசாரணையில் உள்ளது என்று தெரிவித்தார்.

ஹாத்ரஸ்

பட மூலாதாரம், Getty Images

கேள்வி 5: நள்ளிரவில் சடலம் எரிக்கப்பட்டது ஏன்?

தங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீரென்று நள்ளிரவில் வந்த காவல்துறையினர் தங்களுடைய மகளின் சடலத்தை மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்து உரிய சடங்குகளை செய்யாமல் எரித்து விட்டனர் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அந்த பெண்ணின் உறவினர் கூறும்போது, தடயங்களை அழிக்கும் வகையில் சடலத்தை காவல்துறையினர் எரித்து விட்டனர் என்று குற்றம்சாட்டினார்.

கேள்வி 6: குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராமு எங்கிருந்தார்?

ஹாத்ரஸில் தாக்கூர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ராமு. இவர் குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் ஒருவர். அவருக்கு ஆதரவாக உள்ளூர் பஞ்சாயத்தார் பேசி வருகிறார்கள். சம்பவ நாளில் தங்களுடைய பண்ணையில் ராமு பணியில் இருந்ததாக அதன் உரிமையாளர் கூறுகிறார். அதை நிரூபிக்க சிசிடிவி ஆதாரம் உள்ளது என்று கூறுகிறார். ஆனால், இதுவரை ராமுவின் இருப்பை உறுதிப்படுத்தக் கூடிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் அவர்கள் வழங்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :