உணவு சமைக்க கல் சட்டிகள்: உடல் நலத்துக்கு என்ன நன்மை?

கல் பாத்திரம்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

மண் பாண்டங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் சமையலறைகளில் கல் சட்டிகள் அடியெடுத்துவைத்துள்ளன. பாத்திர கடைகள் மட்டுமல்லாது ஆன்லைன் தளங்களிலும் கல் சட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

சென்னை, கோவை, மதுரை நகரங்களில் பல்வேறு பாத்திர கடைகளில் தற்போது கல் பாத்திரங்கள் வரவேற்பை பெற்றுள்ளன.

பொதுவாக ஆட்டுக்கல், அம்மிக்கல், இஞ்சி, ஏலக்காய் இடிப்பதற்கு பயன்படுத்தும் சிறிய கல் கொட்லா பல வீடுகளில் பயன்பாட்டில் இருப்பதை பார்த்திருப்போம்.

தற்போது, கல் பாத்திரங்களில் தோசை கல், தயிர் சட்டி, குழம்பு சட்டி, பணியார கல், கடாய் என விதவிதமான வடிவங்களில் கிடைக்கும் கல் பாத்திரங்களுக்கும் சமையல்கூடங்களில் இடம் கிடைத்துள்ளது.

சோப்பு கல் என்று சொல்லப்படும் மாவு கல்லில் இந்த பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. மதுரை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் பெரும்பாலான கல் பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

பாத்திரத்தின் அளவை பொறுத்து, குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.4,000 வரையிலான பாத்திரங்கள் கிடைக்கின்றன.

கல் பாத்திரம்

கல் பாத்திரத்தில் சமைத்த அனுபவம் குறித்து பேசிய சென்னையைச் சேர்ந்த அன்புக்கரசி சமைக்கும் நேரமும், சமையல் எரிவாயுவும் மிச்சப்படுவதாக கூறுகிறார்.

''நான் வேலைக்கு செல்லுவதற்கு முன், காலை மற்றும் மதிய நேர உணவை தயாரிக்கவேண்டும். கல் பாத்திரத்தை பழகுவதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால் பயன்படுத்த தொடங்கிவிட்டால், சமைக்கும் நேரம் மிச்சப்படும். உணவு கொதிக்கும் நிலையில் அடுப்பை நிறுத்திவிடலாம். ''

''கல் பாத்திரத்தில் உணவு கொதிநிலையிலேயே சில மணிநேரம் இருக்கும் என்பதால், எரிவாயு மிச்சப்படும். உணவு ருசியின் வித்தியாசத்தை நாங்கள் உணர்கிறோம். பொதுவாக கல் சட்டியில் வைத்திருக்கும்போது, தயிரில் புளிப்பு தன்மை தென்படுவதில்லை,'' என்கிறார் அன்புக்கரசி.

கல் பாத்திரம்

கல் பாத்திரங்களில் சமைப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தமிழக அரசின் இயற்கை யோகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா சரவணனிடம் கேட்டோம்.

கல் சட்டி செய்வதற்கு பயன்படும் மாவு கல்லில் மக்னீசியம் இருப்பதால், நேரடியாக உணவில் இந்த சத்து கலப்பதற்கு கல் சட்டி உதவும் என்கிறார். பிரிட்ஜ் பயன்பாட்டுக்கு வரும்வரை, பல இல்லங்களில் உணவு கெட்டுப்போகாமல் இருக்க கல் சட்டிகள் பயன்படுத்தப்பட்டன என்கிறார்.

கல் பாத்திரம்

''சமைத்த உணவை, மீண்டும் மீண்டும் சூடு செய்யக்கூடாது. அதோடு உணவை மிதமான சூட்டில் சாப்பிடவேண்டும். மீண்டும் மீண்டும் சூடு செய்தால் அந்த உணவில் உள்ள சத்துகள் குறைந்துவிடும். கல் பாத்திரங்களில் சமைத்த உணவு சுமார் மூன்று மணிநேரம் சூடாக இருக்கும்.''

''கல் பாத்திரங்கள் சூடாக நேரம் ஆகும். அதேபோல, அந்த பாத்திரத்தில் சூடு குறைவதற்கும் நேரம் ஆகும். அதாவது நீங்கள் சமைத்த உணவில் உள்ள நுண்தாதுகள் எதுவும் இழக்காமல் மிதமான சூட்டில் நீண்ட நேரம் இருக்கும். புராதன ஹாட் பாக்ஸ் என்றே கல் சட்டியை சொல்லலாம்,'' என்கிறார் தீபா.

Banner image reading 'more about coronavirus'
Banner

கல் பாத்திரத்தை கேஸ் ஸ்டவ்வில் வைத்து சமைக்கலாம் என்றும் கல் சட்டியில் உள்ள வெப்பம் காரணமாக விரைவில் உணவு கெட்டுப்போவதை கட்டுப்படுத்தபடுகிறது என்றும் கூறுகிறார் மருத்துவர் தீபா.

''கல் சட்டி சமமான சூட்டை நீண்ட நேரம் தக்கவைக்கும் என்பதால், சமைத்த உணவில் தண்ணீர் விடுவது, வாசனை நீங்கி, நாற்றம் வருவது போன்றவை ஏற்படாது. கிருமிகள் வளராது. மண் பாத்திரத்தை போலவே, கல் பாத்திரத்தில் தாளிக்கும் வாசனை வருவதை நீங்கள் நுகரமுடியும். கல்லின் நுண்துகள் உணவில் சேருவதைத்தான் அந்த வாசனை உணர்த்துகிறது.''

''அலுமினியம், இன்டோலியம் போன்ற பாத்திரங்களை பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனம் உணவில் சேர்கிறது. அது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும். இயற்கையில் கிடைக்கும் கல்லில் செய்யப்படும் பாத்திரத்தில் சமைத்தால் உணவில் அமிலத்தன்மையைக் குறைக்கும். இதனால் செரிமான கோளாறுகளை தடுக்கும்,'' என்கிறார் தீபா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: