பைபோலார் டிஸ்ஸார்டர்: மருத்துவர்கள் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுஷீலா சிங்
- பதவி, பிபிசி செய்தியாளார்
அனில் (பெயர் மாற்றப்பட்டது) சுமார் 11-12 வயதாக இருக்கும்போது மிகவும் கோபம் வந்தபோது தனது தாயை அடித்துவிட்டார்.
அனிலின் இந்த நடத்தையை அவரது தாய் பார்ப்பது இது முதல் முறையல்ல.
முன்பும் அவர் கோபத்தில் பொருட்களை எடுத்து வீசுவார், மேலும் தம்பியை தள்ளவோ அல்லது அறையவோ செய்வார்.
சில நேரங்களில் கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் அளவுக்கு அவரது நடத்தை கட்டுமீறியதாக மாறியது. நண்பர்களுடன் சண்டை மற்றும் அடிதடிகள் பற்றிய புகார் பள்ளிக்கூடத்திலிருந்தும் வந்து கொண்டேயிருந்தது.
அதே நேரத்தில், அவரது மனநிலையின் மற்றொரு தோற்றமும் காணப்பட்டது. அவர் முழுமையாக அமைதியாகி விடுவார்.எதற்கும் பதிலளிக்க மாட்டார். பல முறை எந்த காரணமும் இல்லாமல் அழுவார்.அறையில் தன்னைத்தானே பூட்டிக்கொள்வார்.
முதலில் அவரது தாய் இது ஒரு குழந்தையின் செயல்கள் என்று நினைத்து இவற்றை புறக்கணித்தார். பின்னர் இந்த வயதில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றமே இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் நினைத்தார்.
ஆனால் அனிலின் நடத்தை வேறுவிதமானது என்று படிப்படியாக அந்தத்தாய் உணர ஆரம்பித்தார். அனிலின் மனநிலை ஏற்ற இறக்கங்களில், ஒரு வடிவத்தைக் காணத் தொடங்கினார். இது மீண்டும் மீண்டும் நடப்பதை அவர் கவனித்தார்.
அனில் தன்னை அடித்த தினத்தில், தண்ணீர் தலைக்கு மேலே சென்றுவிட்டது என்பதை அவர் புரிந்துகொண்டார்.
ஏதோ ஒரு ஆவேசத்தில் அனில் தனக்குத்தானே தீங்கு செய்யாமல் இருக்கவேண்டுமே என்று பயப்பட ஆரம்பித்த அவர் மருத்துவ ஆலோசனையைப் பெற முடிவு செய்தார்.
மனநல மருத்துவர் மனீஷா சிங்கலுடன் பேசிய பிறகு தனது மகனுக்கு இருமனக்குழப்பம் (பைபோலார் டிஸ்ஸார்டர்) இருப்பதை அந்தத்தாய் அறிந்தார்.
இருமனக்குழப்பம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
டாக்டர்களின் கூற்றுப்படி, இரு மன குழப்பம் என்பது டோப்பமைன் ஹார்மோனின் சமமின்மை காரணமாக ஏற்படும் ஒரு வகையான மனக் கோளாறு ஆகும். இந்த ஏற்ற இறக்கம் காரணமாக, ஒரு நபரின் மனநிலை அல்லது நடத்தை மாறுகிறது.
ஒரு நபர் இருமன குழப்பத்தால் அவதிப்பட்டால், அவருக்கு ஆர்வக்கிளர்ச்சி (மேனியா) அல்லது மனச்சோர்வு தாக்கங்கள் ஏற்படக்கூடும். அதாவது அவரது மனநிலை மிக அதிக உற்சாகமாகவோ அல்லது மிகவும் சோர்வாகவோ இருக்கும்.
முதலாவது வகை பைபோலாரில், ஆர்வக்கிளர்ச்சி அதாவது மிக அதிக உற்சாக தாக்கங்கள் ஏற்படும். இந்த கோளாறில், ஒரு நபர் பெரிய பேச்சுக்களை பேசுவார். தொடர்ச்சியாக வேலை செய்வார், தூக்கத்திற்கு தேவை இருப்பதையே உணரமாட்டார். அதையும் மீறி அவர் சோர்வின்றி இருப்பார்..
இந்தப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர் தேவையை காட்டிலும் அதிகமாக செலவு செய்வார் மற்றும் சிந்திக்காமல் முடிவுகளை எடுப்பார். அவரது மனம் ஒரு இடத்தில் நிலையாக இருக்காது.
மனநல மருத்துவர் டாக்டர் பூஜா சிவம் ஜேட்லி இந்தக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை பற்றிக் குறிப்பிடுகையில், அந்த நபர் ஒரு வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் வியாபாரத்தில் பல அதிரடி முடிவுகளை எடுக்கத் தொடங்கினார் என்றும் கூறுகிறார்.
அவர் பெரிய பெரிய விஷயங்களைப்பற்றி பேசத் தொடங்கினார். மிக அதிகமாக செலவுசெய்ய ஆரம்பித்தார். அவருக்கு தூக்கம் வருவது நின்றுவிட்டது. தன்னை மிகவும் சக்திவாய்ந்தவர் என்று நினைக்கத் தொடங்கினார்.
இவற்றோடு கூடவே அவரது 'செக்ஸ் டிரைவ்' கூட அதிகமானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்கு பலருக்கும் வேலை கொடுப்பது, தனது சொத்துக்களை அவர்களின் பெயர்களுக்கு எழுதிக்கொடுப்பது போன்ற பெரிய விஷயங்களை பற்றிப்பேசுவார்.
அத்தகைய நபர்களுக்கு யதார்த்த நிலையுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு விடுவதாக, பூஜா சிவம் ஜேட்லி மேலும் கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்தால், அது ஆர்வக்கிளர்ச்சி நிலை அல்லது அதி உற்சாக தாக்குதல் நிலை என்று அழைக்கப்படுகிறது.
இரண்டாம் வகை பைபோலார் (ஹைப்போமேனியா) - இது சோகத் தாக்கங்களைக் கொண்டுவருகிறது. இந்த கோளாறில் மனம் மனச்சோர்வடைவது, எந்த காரணமும் இல்லாமல் அழுதுகொண்டே இருப்பது , எந்த வேலையிலும் மனம் ஈடுபடாமல் இருப்பது, தூங்காவிட்டாலும் படுக்கையில் இருக்க வேண்டும் என்ற உணர்வு, மிகக் குறைந்த அல்லது அதிக தூக்கம் போன்ற அறிகுறிகள் உள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தங்களது சக்தி குறைவதாக நினைக்கிறார்கள். இந்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை சந்திப்பதை நிறுத்திவிடுகிறார்கள்.
ஒருவர் எப்போது எச்சரிக்கையை உணரவேண்டும்?
பொதுவாக நீங்களும் நாமும் சாதாரண வாழ்க்கையில் இதேபோன்ற உணர்வுகளை சிலநேரங்களில் அனுபவிப்போம். பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்களில் இதிலிருந்து மீண்டு வந்துவிடுவோம். ஆனால் அத்தகைய நிலை இரண்டு வாரங்களுக்கு நீடித்தால், அது ஹைபோமேனியாவாக மாறக்கூடும்.

இந்த அறிகுறிகள் ஏதேனும் ஒரு முறை ஏற்பட்டாலும், அந்த நபர் பைபோலார் கோளாறுக்கு இலக்காகியுள்ளார் என்று புரிந்து கொள்ளப்படுகிறது என்று டாக்டர் மனீஷா சிங்கல் தெரிவிக்கிறார்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, எந்த வயதிலும் பைபோலார் ஏற்படலாம், ஆனால் இந்தப்பிரச்சனை சராசரியாக 20-30 வயதுகளில் அதிகமாக ஏற்படுகிறது.
இருப்பினும், இப்போதெல்லாம் 20 வயதிற்கு உட்பட்டவர்களிடையே ஏர்லி பைபோலார் டிஸ்ஸார்டர் ( 'ஆரம்பகால இருமனக்குழப்ப நோய்) ஏற்படுவதை நாம் காண்கிறோம்.
கொரோனா தொற்றுநோயின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மன நோயாளிகளின் நிலை
டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையின் மனநல மருத்துவர் ரூபாலி ஷிவல்கர் கூறுகையில், "இந்த நோய் மிகவும் பழமையானது. ஆனால் இப்போதுதான் இந்த நோய் சரியாக அடையாளம் காணப்படுகிறது.
மக்கள் இதைப்பற்றி அறிந்திருக்கிறார்கள், எனவே இந்த நோய் பற்றி வெளியே தெரியத்துவங்கி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் , இந்த நோய் மிகவும் சாதாரணமாகிவிட்டது. 100 பேரில் மூன்று அல்லது ஐந்து சதவீதம் பேருக்கு இந்த கோளாறு உள்ளது. '' என்று தெரிவிக்கிறார்.
ஒரு நபருக்கு 40 வயதிற்குப் பிறகு இதுபோன்ற கோளாறு முதல் முறையாக ஏற்பட்டால், சில சமயங்களில் அது மூளையில் ஏற்படும் மாற்றங்களுடன் நேரடியாக தொடர்புகொண்டதாக கருதப்படுகிறது. இது 'ஆர்கானிக் மூட் டிஸ்ஸார்டர்' என்று அழைக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த நிலையில்,மூளையின் கட்டமைப்பில் ஏதாவது மாற்றம் அல்லது குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்று ஆராயப்படுகிறது..
பைபோலாரரும், தற்கொலை எண்ணங்களும்
குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போது, ஹார்மோன்களின் மாற்றங்கள் காரணமாக அவர்களின் மனநிலையும் மாறத்துவங்குகிறது. எந்த விஷயத்திலும் அவர்கள் எரிச்சல் அடைகிறார்கள், கோபப்படுகிறார்கள் ஆனால் அத்தகைய நிலை நீண்ட காலம் நீடிக்காது.
இவை 'சைக்ளோதேலமிக் டிஸ்ஸார்டர்'க்கு உட்பட்டவை. இங்கு எந்தவிதமான உணர்ச்சியும், அது கோபமாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும், லேசானதாக (குறைவு) இருக்கும்.
இது பொதுவாக இளமை பருவத்தில் காணப்படுகிறது. இதை நாம் புறக்கணித்துவிடலாம். ஆனால் ஒரு குழந்தைக்கு பைபோலார் டிஸ்ஸார்டர் இருந்தால், அது 'கிளாசிக்கல் மேனியா' அல்லது மனச்சோர்வு என்பதன் கீழ் வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதில் நீடித்த சோகம், மிகவும் கோபம், ஆக்ரோஷம், தூக்கத்தின் தேவை இல்லாமை, அதிகப்படியான பேச்சு அல்லது செலவு மற்றும் பாலியல் ரீதியிலான விஷயங்களில் சாதரணத்தைக்காட்டிலும் அதிக ஈர்ப்பு. ஆகியவை ஏற்படுகின்றன.
இத்தகைய அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால், பைபோலார் ஏற்படும் அபாயம் உள்ளது.
சமீபத்தில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்திக்குப் பிறகு, அவர் பைபோலார் நோயுடன் போராடி வந்ததாக ஊடகங்களில் விவாதங்கள் சூடு பிடித்தன.
" ஆர்வக்கிளர்ச்சி(மேனியா) அல்லது மனச்சோர்வு அத்தியாயம் ஏற்படும்போது, தற்கொலைக்கு முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இரண்டு சூழ்நிலைகளிலும், அந்த நபர் உண்மை சூழலில் இருந்து முர்றிலுமாக விலகி இருக்கிறார்.
ஆர்வக்கிளர்ச்சி நோயாளி தன்னால் எதையும் செய்யமுடியும் என்று நினைக்கிறார். சிந்தித்து புரிந்துகொள்ளும் சக்தியை அவர் இழந்துவிடுகிறார், "என்று மனநல மருத்துவர் டாக்டர் பூஜா சிவம் ஜேட்லி தெரிவிக்கிறார்.
"இதுபோன்ற சந்தர்ப்பத்தில், நோயாளி இத்தகைய தீவிர நடவடிக்கைகளை எடுக்க முடியும். தற்கொலைகள் பெரும்பாலும் பைப்போலார் மன அழுத்தத்தில் நிகழும் சாத்தியக்கூறு உள்ளது. இதுபோன்ற ஒருவர் தற்கொலை அல்லது நம்பிக்கையின்மை பற்றி எப்போதாவது பேசினால், அதை ஒரு எச்சரிக்கையாக கருதவேண்டும். ஆகவே உடனடியாக சிகிச்சை பெறவேண்டியது முக்கியமாகும், "என்றும் அவர் கூறுகிறார்.
நோயை கட்டுப்படுத்துவது சாத்தியம்
பைபோலார் டிஸ்ஸார்டர் உள்ள ஒரு நோயாளி தன்னிடம் வரும்போதெல்லாம், அவனுக்குள் தற்கொலை எண்ணங்கள் இருக்கிறதா என்பது குறித்து தான் முக்கியமாக கவனிப்பதாக மருத்துவர் ரூபாலி சிவால்கர் கூறுகிறார்.
பைபோலார் வாழ்நாள் முழுவதுமே நீடிக்கும் ஒரு நோய் என்று அவர் கூறுகிறார். தைராய்டு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் மன நோய்கள்... இவை அனைத்தும் 'தொற்றுநோய் அல்லாதவை' என்பதன் கீழ் வருகின்றன. நீங்கள் இந்த நோய்களைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும், ஆனால் அவற்றை நீங்கள் முற்றிலுமாக அழிக்க முடியாது.
"இந்த மனநோய்கள், மரபியல் ரீதியாகவும் ஏற்படக்கூடும். உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதன் அறிகுறிகள் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடும்,”என்று மனநல மருத்துவர் மனீஷா சிங்கல் கூறுகிறார்.
"ஒருவருக்கு பைபோலார் ஏற்பட்டால், நோயாளியின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வரும்போது, அவர் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார். அந்த நிலையில் இந்த நோய் குறித்து அவரிடம் நாம் தெரிவிக்கலாம், ஏனென்றால், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவரது மனநிலை மாறிக்கொண்டிருப்பதாகவும் அவர் நினைக்கும்போது, அதைப் புரிந்துகொண்டு மருத்துவரிடம் சென்று அவரால் ஆலோசனையைப் பெறமுடியும் ,”என்று மனீஷா மேலும் தெரிவிக்கிறார்.
டாக்டர்களின் கூற்றுப்படி, இந்த நோயை குணப்படுத்த, ’மூட் ஸ்டெபிலைஸர்’ அல்லது மூளையின் மென்படலத்தில் ஸ்டெபிலைஸர், பயன்படுத்தப்படுகிறது. டோப்பமைனின் அளவை சமப்படுத்தவும் நோயைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.
பைபோலார் கோளாறு உள்ள நோயாளிகள், ஏதாவது படைப்பு வேலைகளில் ஈடுபடுவது அவர்களுக்கு உதவக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய நோயாளிகளுக்கு அதிக அக்கறையும் அன்பும் தேவை. ஆர்வக்கிளர்ச்சி நிலையில் அவர்கள் பல முறை மிகவும் மோசமான முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்போது அவர்கள் செய்த தவறை உணர்ந்து வருத்தப்படுவார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு அமைதியாகவும், அன்பாகவும் விளக்க வேண்டும். அதே சமயம் அவர்கள் மனதை அமைதியாக வைத்திருக்கவும், சோர்வடையாமல் இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களை சந்தித்து உரையாடுமாறு இத்தகைய நோயாளிகளை ஊக்குவிக்க வேண்டும்.
குறிப்பு: மருந்துகள் மற்றும் சிகிச்சையின் மூலம் மன நோய்களுக்கான சிகிச்சை சாத்தியமாகும். இதற்காக, நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியை நாட வேண்டும். நீங்கள் அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு மனப்பிரச்சனை தொடர்பான ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், இந்த ஹெல்ப்லைன் எண்களை அழைப்பதன் மூலம் உதவியைப் பெறலாம்:
சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம்(Ministry of social justice and empowerment) - 1800-599-0019
• மனித நடத்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் கழகம் –(Institute of human behaviour and allied sciences) 9868396824, 9868396841, 011-22574820
• தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகம் (National institute of mental health and neuro sciences) - 080 - 26995000
• வித்யாசாகர் மனநலம், நம்பியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (Vidyasagar institute of mental health, neuro and allied sciences) 24x 7 ஹெல்ப் லைன் - 011 2980 2980
பிற செய்திகள்:
- 3,000 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய காட்டுக்குள் விடப்பட்ட ’டாஸ்மானியா பேய்கள்’
- ஹாத்ரஸ் வழக்கு: யார் குற்றவாளி? விடை கிடைக்காத 6 முக்கிய கேள்விகள்
- நோபல் பரிசு 2020: "ஹெபடைட்டிஸ் சி" வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
- இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று: அவசரநிலை அறிவிப்பு - விரிவான தகவல்கள்
- தீவிரமான உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நான்கு அமெரிக்க அதிபர்கள்
- "ஜெயலலிதா" ஆக கங்கனா: விறுவிறுப்புடன் "தலைவி" படப்பிடிப்பு - விரிவான தகவல்கள்
- பிக் பாஸ் சீஸன் 4: பங்கேற்பவர்கள் யார், யார்? பின்னணி என்ன?
- உணவு சமைக்க கல் சட்டிகள்: உடல் நலத்துக்கு என்ன நன்மை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












