கொரோனா அச்சத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்: பொதுத்தேர்வு ரத்தாகுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கிருத்திகா கண்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
"திங்கட்கிழமை (செப்டம்பர் 21) நடைபெறவுள்ள தேர்விற்கு என் மகனை அழைத்துச் செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவே முயல்வேன்" என்று மிகவும் வருத்தத்துடன் நம்மிடம் பேசத் தொடங்கினார் கவிதா.
கோவையில் தனது மகனுடன் வசித்துவரும் கவிதா, கொரோனா காலத்தில் தனது மகனை தேர்வு எழுதச்சொல்வது மிகவும் வருத்தமளிப்பதாக கூறுகிறார்.
"என் மகனுக்கு ஏ.டி.எச்.டி (கவனக்குறைவு மிகை இயக்கக் கோளாறு) பிரச்சனை இருக்கிறது. அவர் சற்று கோபம் அடைந்தாலும் பக்கத்தில் உள்ளவர்களை கீழே தள்ளி விட்டுவிடுவார். நன்றாக படிக்கும் திறன் உள்ள குழந்தைதான் என்றாலும், இந்த முறை புதியதாக வரும் உதவியாளருடன் இணைந்து அவரைப்போன்ற மாணவர்கள் தேர்வு எழுதுவது என்பது மிகக்கடினம்" என்கிறார்.
கவிதாவைப் போலவே 1200க்கும் மேற்பட்ட பெற்றோரும், குழந்தைகளின் மனநிலை, கொரோனா தொற்றின் அபாயம் உள்ளிட்டவற்றை நினைத்து குழப்பத்தில் இருக்கிறார்கள்.
"முன்பு என் குழந்தை தொடர்ந்து படித்து வந்தார். ஆனால், கொரோனா காலத்தில் அவர் தேர்வுக்கு தயாராகவில்லை. இப்போது திடீரென அவரை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்றால், அவரை படிக்க வைப்பதே எனக்கு கடினமாக உள்ளது. அவரால் நிச்சயமாக கவனம் செலுத்தி படிக்க முடியவில்லை. ஏற்கனவே படித்தவற்றை மீண்டும் படிப்பதற்கே இப்போது உள்ள சூழலில் அவரால் ஒத்துழைக்க முடியவில்லை" என்று கூறுகிறார் கவிதா.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தனித்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 21) முதல் நடைபெறும் என அரசு அறிவித்தது. இதை எதிர்த்து மாணவர் ஒருவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும், சென்னை உயர்நீதிமன்றம், தேர்வு திட்டமிட்டபடி நடக்கலாம் என்று உத்தரவிட்டதோடு, மாணவர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக தேர்வு எழுதுவோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஐ.ஏ.எஸ், "இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைந்து நாங்கள் செய்து வருகிறோம். மாணவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. எங்கள் துறையிலிருந்து, தேர்வு எழுது 1,413 மாணவ மாணவியரின் பெற்றோரிடமும் பேசியுள்ளோம்" என்றார்.
"மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், அவர்கள் எத்தனை நாட்கள் பள்ளிக்கு சென்றார்கள் என்பது உள்ளிட்ட தரவுகள் இருப்பதால், அவர்களுக்கான இறுதி மதிபெண்கள் கொடுக்க வழி உள்ளது. ஆனால், தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவ்வாறான வாய்ப்பு இல்லை. அவர்கள் தேர்விற்கு வருவது ஒருமுறையே என்பதால், அவர்கள் திறன் குறித்த தரவுகள் நம்மிடம் முன்பே இல்லை. இதுவே தேர்வு நடத்தப்படுவதற்கான காரணம். இதே கருத்தை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டி உள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, பல மாவட்ட ஆட்சியர்களிடமிருந்தும் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை செய்வது குறித்த சுற்றறிக்கை வெளியானது.
கொரோனா குறித்த அச்சம்

பட மூலாதாரம், Getty Images
"கொரோனா சோதனை என்பது சாதாரண மக்களுக்கே அசௌகரியத்தை உருவாக்கும் வகையில் உள்ளபோது, ஆட்டிசம் போன்ற சிக்கல்கள் உள்ள ஒரு குழந்தைக்கு அந்த சோதனையை எப்படி செய்வது?" என்ற கேள்வியை முன்வைக்கிறார் கவிதா.
"என் மகனால் சாதாரண ஊசியை கூட சமாளிக்க முடியாது. மேலும், இதுபோன்ற குழந்தைகள் புதியதாக ஒருவர் அவர்களின் அருகில் வந்தால் பதற்றம் அடைவார்கள் என்னும்போது, இந்த சோதனையை என் மகனுக்கு எப்படி எடுப்பேன்? நான் இந்த சோதனையை செய்யும் எண்ணத்தில் இல்லை" என்கிறார் அவர்.
"கொரோனா தொற்று குறித்து நாம் தினமும் செய்திகளில் பார்க்கிறோம். இப்போது என் மகனை தேர்வு எழுத அழைத்துச் சென்று, எனக்கு கொரோனா தாக்கினால், அவரை நாளை யார் பார்த்துக்கொள்வார்கள்?அவருக்கு தினமும் தேவையானவற்றையும், அவர் கூறுவதையும் புரிந்து செயல்படுவது நான் மட்டுந்தான். எனக்கும் நீரிழிவு நோய் உள்ளது. எனக்கு அவரை வெளியே அழைத்துச்செல்ல கண்டிப்பாக பயமாக உள்ளது."

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

"இதேபோல, அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் சிகிச்சை எப்படி கொடுப்பது? ஆட்டிசம் உள்ள குழந்தைகளால், நாம் கூறும் புதிய கட்டுப்பாடுகளை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவருடன் தினமும் வீட்டில் இருக்கும் நானே சற்று கேள்விக் கேட்டால், அவர் கோபம் அடைந்து விடுகிறார். இப்படி இருக்க, இந்த குழந்தைகளுக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டால் நாங்கள் எப்படி சமாளிப்போம்?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.
தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று அபாயம் இருப்பது ஒருபுறம் என்றால், இந்த புதிய சூழலை குழந்தைகளால் ஏற்றுக்கொண்டு செயல்பட முடியுமா என்பதே பெரிய சவால்தான் என்கிறார், சதீஷ்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக செயல்படும் ஏக்தா என்ற அமைப்பை சேர்ந்த ஆர்வலரான இவர், குழந்தைகளும், அவர்களுக்காக தேர்வு எழுதப்போகும் நபர்களுக்கும் பல சிக்கல் உள்ளது என்கிறார்.
"முதல் மூன்று மாதங்கள் தேர்வு இருக்கும் என்று நம்பி மாணவர்கள் படித்தார்கள். ஆல்-பாஸ் என்று கூறியதும் அவர்கள் மனம் மாறிவிட்டது. இப்போது மீண்டும் அவர்களை படிக்க வைக்க பெற்றோருமே சிரமப்படுகிறார்கள். ஆறு மாதங்களாக, இந்த குழந்தைகள் கொரோனா தொற்று, ஊரடங்கு ஆகிய காரணங்களால், வீட்டிலேயே இருந்திருக்கிறார்கள். இவர்களை திடீரென ஒரு உதவியாளருடன் உட்கார்ந்து தேர்வு எழுது என கேட்பது சரியல்ல. குழந்தைகளுக்கு உடனடியாக அவர்கள்மீது நம்பிக்கை வந்துவிடாது."
"கொரோனாத்தொற்று காரணமாக மாணவர்கள் தேர்வு நேரத்தில் முகக்கவசம் அணிந்தபடியேதான் இருக்க வேண்டும். ஆனால், பல மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முகக்கவசம் என்பது மிகவும் அசௌகர்யத்தை உருவாக்கும். அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. சில குழந்தைகளுக்கு வாயிலிருந்து எப்போதுமே உமிழ்நீர் வழிந்துகொண்டே இருக்கும். சில குழந்தைகள் பேசுவது இயல்பாகவே புரிந்துகொள்ள கடினமாக இருக்கக்கூடும்."
"அப்படியிருக்க, முகக்கவசம் அணிந்துகொண்டு அந்த குழந்தை சொல்வதை ஒருவர் சற்று தள்ளி உட்கார்ந்து கேட்டு எழுதுவதெல்லாம் மிகவும் கடினம்." என்கிறார் சதீஷ்.
"அதேபோல, மாணவர்களுக்காக தேர்வு எழுதுவோரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். எங்களை அதற்காக அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்துகொள்ள போகுமாறு கேட்கிறார்கள். அதுவும் எங்களுக்கு சிக்கலாகவே உள்ளது" என்கிறார்.
இந்த விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தொடந்து அரசை எதிர்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மற்ற மாணவர்களுக்கு தேர்வுகளை, அரசு ரத்து செய்துள்ளபோது, இவர்களுக்கும் அதையே செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் மீது அரசு இன்னும்கூட அதிக அக்கறை எடுத்து, அவர்களும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
திங்கட்கிழமை தேர்வு நடக்கவுள்ள நிலையில், குழந்தையை தேர்வுக்கு அழைத்து செல்வதில் பல பெற்றோர் இன்னும் குழப்பமான நிலையிலேயே உள்ளனர்.
"அரசு, மற்ற மாணவர்களுக்கு அளித்த அதே உத்தரவை எங்களின் குழந்தைகளுக்கு ஏன் அளிக்க மறுக்கிறது" என்று கேட்கிறார் கவிதா.
"மற்ற குழந்தைகளைவிட இந்த குழந்தைகளுக்கே அதிக உதவி தேவைப்படும். இவர்களுக்கு பொதுச்சூழலே கடினம் என்னும்போது, கொரோனாவிற்கான கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை விளக்கவே நாங்கள் அதிகம் பயிற்சி அளிக்கிறோம். இத்தகைய நிலையில் குழந்தைகளை தேர்வு எழுத இவர்கள் அழைப்பது மிகவும் வேதனை அளிக்கிறது."
"என்னால் முடிந்த வரை அரசின் அனைத்து துறைத்தலைவர்களுக்கும் கடிதம் எழுதிவிட்டேன். திங்கட்கிழமை தேர்வு ஆரம்பிக்கிறது. ஆனால், தேர்வு ரத்து ஆகும் என்று நம்புகிறேன். என் குழந்தையை தேர்வு எழுத அழைத்துச்செல்ல எனக்கு மனம் இல்லை" என்று கூறுகிறார் கவிதா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












