NRA - CET தேர்வு: ஒரே நாடு, ஒரே தேர்வு திட்டம் சர்ச்சையா, சாதகமா?

ஒரே நாடு, ஒரே தேர்வு: மத்திய அரசின் புதிய அறிவிப்பு சர்ச்சையா, சாதகமா?

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் மத்திய அரசு, ரயில்வே மற்றும் வங்கிப் பணியில் சேர விண்ணப்பிப்பவர்கள், இனி தனித்தனியாக அல்லாமல் ஒரே தேர்வை எழுத வகை செய்யும் தேசிய ஆள்சேர்ப்பு முகமை (என்ஆர்ஏ) என்ற அமைப்பை உருவாக்க பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இந்த அமைப்பு, மத்திய அரசுப்பணிகளில் ஆள் சேர்ப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும், அதில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும் புதிய அமைப்பு அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது.

இந்த முகமையின்கீழ், பொது தகுதித் தேர்வு (சிஇடி) என்ற பெயரில் ஒரு தேர்வு நடத்தப்படும். தற்போதைக்கு இந்த தேர்வு, ரயில்வே, வங்கித்துறை, மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகியவை நடத்தும் தேர்வுகளுக்கு மாற்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தேர்வு நடைமுறைகளின்படி, வெவ்வேறு பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வகளை எழுதுவோர், பல வகை அழுத்தங்களை எதிர்கொள்வதால், கோடிக்கணக்கான இந்திய இளைஞர்கள், இனி பல தேர்வுகளுக்கு தயாராகும் நிலைக்கு முடிவு காணப்பட்டு, அவர்களின் மதிப்பான நேரமும் ஆற்றலும் தேசிய ஆள்சேர்ப்பு முகமை நடத்தும் பொது தகுதித்தேர்வு மூலம் சேமிக்க முடியும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

பொது தகுதித்தேர்வு என்றால் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி முதல் மூன்று கோடி இளைஞர்கள், மத்திய அரசுப் பணியிலும் வங்கித்துறை பணிகளிலும் சேர வெவ்வேறு வகையான தேர்வுகளை எழுதுகிறார்கள்.

உதாரணமாக, வங்கித்துறை பணிகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு ஒரே ஆண்டில் பல முறை விண்ணப்பங்களை நிரப்பி, தேர்வுகளை இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். ஒவ்வொரு முறை தேர்வு எழுத தனித்தனியாக அவர்கள் தேர்வுக்கட்டணமாக சுமார் ரூ. 300 முதல் ரூ. 900 வரை செலுத்த வேண்டியிருக்கிறது.

ஆனால், இந்திய அரசு உருவாக்கும் தேசிய ஆள்சேர்ப்பு முகமை நடத்தும் பொது தகுதித் தேர்வு ஒன்றை எழுதினாலே போதும், அது மற்ற தேர்வுகளுக்கு மாற்றாக இருக்கும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்.

இந்த தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரரை தேர்வு செய்வது மற்றும் தேர்வு நடத்துவது சாத்தியமாகும் என்றும் தற்போதைக்கு ரயில்வே வாரியம் நடத்தும் ஆர்ஆர்பி தேர்வு, மத்திய அரசு நடத்தும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி தேர்வு, இந்திய வங்கி பயிற்சி அதிகாரிகள் சேவை எனப்படும் ஐபிபீஎஸ் ஆகியவற்றின் முதல் நிலையிலான தேர்வு ஆகியவற்றுக்கு மாற்றாக "சிஇடி" என்ற ஒரேயொரு தேர்வு எழுதினால் போதும் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

ஆன்லைன் அடிப்படையிலான சிஇடி தேர்வை, பட்டதாரிகள், 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம் என்று மத்திய அமைச்சரவை முடிவு தொடர்பான இந்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்வு: மத்திய அரசின் புதிய அறிவிப்பு சர்ச்சையா, சாதகமா?

பட மூலாதாரம், Getty Images

தேர்வு எவ்வாறு நடத்தப்படும்?

புதிய தேர்வு முறை அமலுக்கு வந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசு ஏற்படுத்தும் இரண்டு தேர்வு மையங்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வை எழுதலாம்.

இந்த தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும், தேர்வை எழுத வயது வரம்பும் கிடையாது என்று கூறப்படுகிறது.

தேர்வு மூலம் ஏற்படும் மாற்றம் என்ன?

இதுபோன்ற ஒரு தேர்வு, நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு அமலுக்கு வரும் துணிச்சலான நடவடிக்கை என்று கல்வித்துறை நிபுணர்கள் நம்புகிறார்கள்.

வேலைவாய்ப்பு ஆலோசனை நிபுணரான அனில் சேத்தி, "அரசின் இந்த திட்டம் நல்லதொரு தாக்கத்தை நீண்ட கால அளவில் ஏற்படுத்தும். ஆனால், அடிப்படையில் இது சீர்திருத்தத்துக்கான முதல் அடி என்பதை நாம் மறந்து விடக்கூடாது" என்று சேத்தி கூறுகிறார்.

மத்திய அரசுத்துறைகளில் ஒரு வேலை வேண்டும் என கருதும் பெரும்பாலானோர், பணியிட எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எஸ்எஸ்சி, வங்கி, ரயில்வே தேர்வுகளைதான் முதலில் விரும்பி அவற்றுக்கு விண்ணப்பிப்பார்கள். அவற்றுக்கு மாற்றாக தற்போது உத்தேசிக்கப்படும் திட்டம் அமலுக்கு வந்தால், தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பதால், விரும்பிய எந்த துறையின் தேர்வுக்கும் அவர்கள் விண்ணப்பிக்கும் வசதி கிடைக்கும் என்றும் அனில் சேத்தி, தேர்வின் சாதகமான விஷயங்களை விவரிக்கிறார்.

ஒரே நாடு, ஒரே தேர்வு: மத்திய அரசின் புதிய அறிவிப்பு சர்ச்சையா, சாதகமா?

பட மூலாதாரம், Getty Images

இந்த திட்டம், தொலைதூர மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பு கூறினாலும், அதன் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார், தமிழ்நாட்டைச் சேர்ந்த விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்.

மறுபக்கத்தை எச்சரிக்கும் எம்.பி

இது குறித்து பிபிசி தமிழிடம் ரவிக்குமார் பேசுகையில், "ஜனநாயகத்தின் அடிப்படை அதிகாரப்பரவல். அதன் அடிப்படையில்தான் ரயில்வே, வங்கிகள், அரசுத்துறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதற்கென பணியிடங்களும் தேர்வாணையங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றை எல்லாம் ஒழித்து விட்டு ஒற்றை தேர்வு முறை, ஒற்றை தேர்வு முகமை என அனைத்தையும் ஒரே அமைப்பாக மையப்படுத்துவது என்பது, நாளடைவில் அதிகாரப்போக்குக்கே வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.

"ஏற்கெனவே, மாநில உரிமைகள் பறிக்கப்படும் பல நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ள வேளையில், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ரயில்வே, தபால் துறை, வங்கித்துறைகளில் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் பெருமளவில் பணியமர்த்தப்படும் போக்கு காணப்படுகிறது. இத்தகைய சூழலில், மத்திய அரசு உத்தேசித்துள்ள புதிய தேர்வு முறையால், தமிழ்நாட்டில் தமிழ் மொழி அறியாதவர்கள் அதிகமாக பணயில் சேரும் வாய்ப்பை உருவாக்கும்"" என்று ரவிக்குமார் கூறினார்

ஒரே நாடு, ஒரே தேர்வு: மத்திய அரசின் புதிய அறிவிப்பு சர்ச்சையா, சாதகமா?

பட மூலாதாரம், Getty Images

"மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, எல்லாவற்றையும் மையப்படுத்திக்கொண்டே, ஒற்றை அதிகார மையமாக்க முயற்சி எடுப்பது, அதன் நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுகிறது. ஒருபுறம், மாநிலங்களில் ஆளும் பாஜக முதல்வர்கள், மண்ணின் மைந்தர்களுக்கே மாநிலத்தில் வேலை என்ற முழக்கத்தை வலுவாக ஒலித்து வருகிறார்கள். இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக இவ்வாறு ஒற்றை அதிகார முறைக்கு நாட்டை கொண்டு செல்வது, மத்தியிலும், மாநிலத்திலும ஆட்சி செலுத்தும் அந்த கட்சி முரண்பட்ட நிலையை கொண்டிருப்பதையே காட்டுகிறது என்றும் ரவிக்குமார் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் பணியிடங்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரவிக்குமார் வலியுறுத்தினார்.

மேலும், "மத்திய அரசின் இந்த செயல், மாநிலங்களை ஆத்திரமூட்டுவதாகவும் வஞ்சிப்பதாகவும் உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதை கூட்டாக எதிர்க்க வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேர்வு எழுதுவோரின் கருத்து என்ன?

ஆனால், களத்தில், இந்த புதிய தேர்வு முறை விண்ணப்பதாரர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை கவனித்தாக வேண்டும்.

அரசுப்பணித் தேர்வுக்கு ஆயத்தமாகி வரும் தேர்வர்களில் ஒருவரான டெல்லியைச் சேர்ந்த பூஜா சர்மா, "தற்போது வெளியிடப்படும் தகவல்களின்படி இதுபோன்ற தேர்வு முறை நல்லதுதான் என்றாலும், இதுநாள்வரை விரும்பிய தேர்வை அந்தந்த துறைகள் நடத்தும் கால அட்டவணைப்படி எழுத வாய்ப்பு இருந்தது. ஆனால், இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தேர்வு நடத்தப்பட்டால், ஒருவேளை அந்த அட்டவணை காலத்தில் தேர்வு எழுத முடியாமல் போனாவோருக்கு அந்த ஆண்டே வீணாகலாம்" என்று தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே தேர்வு: மத்திய அரசின் புதிய அறிவிப்பு சர்ச்சையா, சாதகமா?

பட மூலாதாரம், Getty Images

மற்றொரு தேர்வரான பூர்வேஷ், "மத்திய அரசுப்பணிக்கு தயாராகி வரும் நான் பிறருக்கும் அதன் நடைமுறைகள் தொடர்பான பயிற்சிகளை எடுத்து வருகிறேன். சிஇடி தொடர்பாக பல தளங்களில் தகவல்கள் வெளிவந்தாலும் அது எப்போது முதல் அமலுக்கு வரப்போகிறது என்ற முழு விவரம் வெளியாகவில்லை. அது வெளிவந்தால்தான் தேர்வுகள் நம்பிக்கையுடன் தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகளை அறிய ஆர்வம் காட்டுவார்கள்" என்றார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய செய்திக்குறிப்பின்படி, என்ஆர்ஏ தேர்வு முறையில் ஒத்தகை தேர்வு எழுதும் வாய்ப்பு, 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ. 1,517.57 கோடி அளவில் தேசிய ஆள்சேர்ப்பு முகமை உருவாக்கப்பட்டு 117 தேர்வு மாவட்டங்களில் மையங்கள் உருவாக்கப்படும் என்று அரசு கூறுகிறது.

ஆனாலும், பல தேர்வர்கள் கூறுவது போல திட்டத்தின் அமலாக்கம், வெளிப்படைத்தன்மை தொடர்பாக மேலும் பல விவரங்கள் தெளிவுபடத்தப்படாததால், அதுவரை என்ஆர்ஏ தொடர்பான சந்தேகங்களும் தொடரவே செய்யும் என்றே கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: