You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொலை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள பிள்ளையான் எம்.பி பதவியேற்க அனுமதி
இலங்கை நாடாளுமன்றத்தன் எதிர்வரும் 9ஆவது அமர்வில் நீதிமன்ற விளக்கமறியலில் உள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர், நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நடந்து முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக சிறையிலுள்ள இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர ஆகியோர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனைகளின் போது, அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்திருந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டமொன்றின் ஏற்பாடுகளில் போது இரத்தினபுரி - காஹவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பிரேமலால் ஜயசேகரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) 9ஆவது நாடாளுமன்ற கன்னி அமர்வில் கலந்துகொள்ள நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் அந்த மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளாக 54 ஆயிரத்து 198 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
சிறைச்சாலையில் இருந்தவாறு, ஒரு பிரசார கூட்டத்தில் கூட கலந்துகொள்ளாத நிலையில், மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் பிள்ளையானுக்கு செலுத்தப்பட்டன.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்றம் செல்ல நீதிமன்றம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுங்கள்: தலைவர்கள், சூழலியல் அமைப்பு கோரிக்கை
- சிறப்புக் குழந்தைகள்: ஊரடங்கு காலத்தில் பெற்றோர் செய்வது என்ன?
- அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி; பிரணாப் தொடர்ந்து கவலைக்கிடம்
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் உண்மையில் எத்தனை மருத்துவர்கள் பலியானார்கள்?
- மெட்ராஸ் இட்லியும், கடற்கரையில் தாத்தாவுடன் நடைப்பயிற்சியும் - கமலா ஹாரிஸின் தமிழக நாட்கள்
- மகேந்திர சிங் தோனியின் இடத்தை யார் நிரப்புவார்? - நிபுணர்கள் கூறுவது என்ன?
- உத்தர பிரதேசம்: 13 வயது தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு - என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: