You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டெர்லைட் தீர்ப்பு: மு.க.ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் கூறுவது என்ன?
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நீடிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழக சூழலியல் அமைப்புகள் கூறியவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.
நீதி கிடைத்திட வேண்டும்
"நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று தமிழக முதல்வர் , அமைச்சரவைத் தீர்மானம் இயற்றி சட்டமாக்க வேண்டும். ஆலைக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைத்திட வேண்டும்," என கருத்து தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
இது குறித்து வைகோ, "தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவிய ஸ்டெர்லைட் ஆலை, நிலம், நீர், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்திய காரணத்தால் மக்கள் தொடர்ந்து போராடி வந்தோம். கடந்த 26 ஆண்டுகளாக போராடினோம். இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆலையை மூடியது செல்லும் என தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிக்கு கிடைத்திருக்கும் வெற்றி. இந்தத் தீர்ப்பின் காரணமாக தூத்துக்குடி வட்டாரம் இதுவரை நாசமான நிலை மாறி பாதுகாக்கப்படும். இந்தப் போராட்டக் களத்தில் உயிர் நீத்த 13 பேரின் ரத்தத்திற்குக் கிடைத்த நீதியாகவே கருதுகிறேன். இதற்கு முன்பு ஆலைக்கு ஆதரவாகப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்த தமிழக அரசு, மக்கள் உள்ளம் எரிமலையாக வெடித்ததால், சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்" என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பகிர்ந்துள்ள ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் குரல் என்றும் வெல்லும்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பகிர்ந்துள்ள ட்வீட்டில், "இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று," என குறிப்பிட்டுள்ளார்.
"உயர்நீதிமன்றத் தீர்ப்பு, பலியான 13பேருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் யாவருக்கும் அளிக்கப்பட்ட நீதி," என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.
இது தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி என மாநிலங்களவை பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "சட்டம் தன் கடமையை செய்தது." என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆலையை அகற்ற
இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, "ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கான (Decommissioning) நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என கோரி உள்ளது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் உண்மையில் எத்தனை மருத்துவர்கள் பலியானார்கள்?
- மெட்ராஸ் இட்லியும், கடற்கரையில் தாத்தாவுடன் நடைப்பயிற்சியும் - கமலா ஹாரிஸின் தமிழக நாட்கள்
- மகேந்திர சிங் தோனியின் இடத்தை யார் நிரப்புவார்? - நிபுணர்கள் கூறுவது என்ன?
- உத்தர பிரதேசம்: 13 வயது தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு - என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: