You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூத்துக்குடி: சட்டவிரோத கைதுகள், சித்ரவதைகள் - போலீஸுக்கு அதிகாரம் அளித்தது யார்?
"இளைஞர்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி கைது செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்களை அடிக்கும் அதிகாரத்தை போலீஸாருக்கு யார் அளித்தது?" என்று கேள்வி எழுப்புகிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், தூத்துக்குடியில் இருந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி டிபேனுடன் பிபிசி தமிழ் பேசிய போது, "22ஆம் தேதி கலவரத்துக்கு பிறகு நிறைய கைதுகள் நடந்திருக்கிறது. இதனையடுத்து, தெரு தெருவாக போய் இளைஞர்களை காவல்துறை அடித்ததாக பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர்" என்றார்.
"ஒவ்வொரு வீதியாக சென்று அமைதியாக இருந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்ய காரணம் இருந்தால், உரிய நடைமுறைகளை பின்பற்றி கைது செய்யலாம், ஆனால், அவர்களை அடிக்க அதிகாரம் இல்லை. இதெல்லாம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வெளிவந்ததால்தான் தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணைய சேவையை அரசு முடக்கியது" என்றும் ஹென்றி டிஃபேன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் எங்கே என்று கேள்வி எழுப்பும் அவர், சட்டத்துக்கு புறம்பாக நிறைய சம்பவங்கள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டுகிறார்.
மேலும், தூத்துக்குடி கலவரத்திற்கு பிறகு நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை விவரிக்கிறார் ஹென்றி டிஃபேன்.
"போராட்டம் நடந்த பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், ஒருவர் சித்ரவதை செய்யப்படுகிறார் என்பதை கேள்விப்பட்ட நீதிமன்ற நடுவர், அங்கு மஃப்டியில் சென்றிருக்கிறார். அவரைப் பார்த்து காவல் துறையினர் 'போயா வெளியே' என்று சொல்லியிருக்கிறார்கள். இதைவிட கேவலம் ஏதுமில்லை" என்று கூறுகிறார் ஹென்றி.
இதற்கெல்லாம் அந்த காவல்துறையினர் காரணம் அல்ல என்றும், தூத்துக்குடி போராட்டத்தையடுத்து நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், சட்டவிரோத கைதுகள் மற்றும் மக்களை துன்புறுத்தியதற்கு அங்குள்ள ஏ.டி.ஜி.பிதான் முழு பொறுப்பு என்று அவர் கூறினார்.
"22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த பிரச்சனைகளுக்கு டிஜிபிதான் காரணம் என்று எப்படி குற்றம் சாட்டுகிறோமோ, அந்த சம்பவத்திற்கு பிறகு நடந்த அனைத்துக்கும் இங்கு இருக்கும் மூத்த அதிகாரிகள்தான் காரணம்" என்று ஹென்றி தெரிவித்தார்.
இந்த மொத்த பிரச்சனையை கையாள்வதில் சிறுபிள்ளைத்தனமாகவும் பொறுப்பில்லாமலும் அரசு நடந்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டும் அவர், ஸ்டெர்லைட் சார்பாக ஒருதலைபட்சமாக நம் நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது என்றார்.
ஆனால், தவிர்க்க முடியாத சூழலில்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை கூறியதாக கேட்டதற்கு பதிலளித்த ஹென்றி, அங்கு கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவியதா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
போராட்டங்களுக்கு போடப்படும் பேரிகேடுகள் அல்லாமல், போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் தடுப்புகள் பயன்படுத்தப்பட்டதாக ஹென்றி குறிப்பிடுகிறார்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான எந்த நெறிமுறையும் காவல்துறை பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாத நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்த காவல்துறைக்கு அனுமதி அளித்தது யார் என்று ஹென்றி கேள்வி எழுப்புகிறார்.
1993ல் மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்த பிறகு, மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கட்டுப்பாட்டு ஆணையம் நியமிக்கப்பட்டு அதன்பிறகு இதுகுறித்த வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றிருக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்தது தவறு என்றும் ஹென்றி தெரிவித்தார்.
இந்த நீதி கமிஷனால் உண்மைகள் முழுவதும் வெளிவராது என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாக கூறிய ஹென்றி, நியமிக்கப்பட்ட நீதிபதி அரசாங்கத்தின் கருவியாக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்