கொரோனா வைரஸ்: தமிழகத்தில் உண்மையில் எத்தனை மருத்துவர்கள் பலியானார்கள்? - மருத்துவ சங்கங்கள் எழுப்பும் சந்தேகம்

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா தடுப்புப் பணியில் 40க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவர்கள் இறந்துள்ளதாக இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்துள்ள நிலையில், அவர்களின் இறப்பு குறித்து தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என மருத்துவர்கள் சங்கமும், இறந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என அரசியல் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அறிகுறிகள்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்த 47 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக கிளை அறிவித்துள்ளது. இறந்த மருத்துவர்களில் 32 பேருக்கு ஆர்டிபிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது என்றும் 15 நபர்கள் நெகட்டிவ் என்ற போதும் கொரோனா அறிகுறிகள் அவர்களுக்கு இருந்தன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் ராஜா, இறந்தவர்களில் பலர் மூத்த மருத்துவர்கள் என்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு இழப்பீடு அளிப்பதில் எந்த முடிவையும் அரசு மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

''தமிழக அரசிடம் புள்ளிவிவரங்களை அளித்தோம். மருத்துவர்களின் மரணத்திற்கு இழப்பீடு தரப்படும் என உறுதியளித்தனர். பின்னர், இறந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால், விரைவில் எந்த இழப்பீட்டு தொகை ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டது எங்களுக்கு மனவருத்தம் தருகிறது. கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்ற மருத்துவர்களின் தியாகம் மதிக்கப்படவேண்டும்,'' என்றார் ராஜா.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் பேசும்போது, கொரோனாவால் இறந்த மற்றும் கொரோனா தொடர்பான பணியால் இறந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின்,ஊழியர்களின் எண்ணிக்கையை உடனடியாக வெளிப்படைத் தன்மையுடன் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்கிறார்.

''மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் கொரோனா இறப்புகளைக் கண்காணிக்க வேண்டியதும் அறிவிக்க வேண்டியதும் அரசின் பொறுப்பாகும். அதை தனியார் அமைப்புகளிடம் விடுவது தவறானது. அது பல்வேறு குழப்பங்களுக்கும், பாரபட்சங்களுக்கும், முறைகேடுகளுக்கும் வழி வகுக்கும். ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனையில் , கொரோனா உறுதியானால் தான் இழப்பீடு என்பதை மாற்ற வேண்டும்.கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களின் இறப்புக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும்,''என்கிறார்.

கொரோனா மரணங்கள் பரிசோதனை சந்தேகம்

''கொரோனாவை உறுதி செய்வதற்கான ,ஆர்டிபிசிஆர் பரிசோதனையைச் சரியாக செய்தாலே, அதன் நம்பகத்தன்மை (sensitivity) 70 விழுக்காடு தான். எனவே, கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு, பல நேரங்களில் தொற்று இல்லை என முடிவுகள் வர வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா மரணங்கள் கூட கொரோனா அல்லாத மரணங்கள் என முடிவு செய்யப்பட்டு விடுகின்றன என்பதால் கொரோனா கால மருத்துவப் பணியாளர்களின் இறப்பை கொரோனா தொடர்பான இறப்பாக கருதி இந்த இழப்பீடுகளை வழங்கிட வேண்டும்,'' என்றும் தெரிவித்தார்.

மருத்துவர்களின் மரணம் குறித்து விமர்சனம் செய்துள்ள, தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின், இழப்பீடாக ரூ.50 லட்சம் நிதி மற்றும் இறந்த மருத்துவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை இரண்டையும் தமிழக அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

"தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் 32 மருத்துவர்களும், கொரோனா நோய் அறிகுறியுடன் வந்த 15 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளார்கள்" என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இச்சங்கத்தின் தமிழகத் துணைத் தலைவராக இருந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த திரு. ஜி.கோதண்டராமன் என்ற மருத்துவரே கொரோனா நோய்த் தொற்றால், 35 நாட்கள் போராடி பிறகு உயிரிழந்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளது,'' என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவர்களின் மரணம் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடவேண்டும் அரசு வெளியிடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: