இலங்கை ஈஸ்டர் தாக்குதல் ஓராண்டு நிறைவு: கள நிலவரம் என்ன? -விரிவான தகவல்கள் #GroudReport

ஈஸ்டர் தாக்குதல் ஓராண்டு நிறைவு: இலங்கையின் நிலவரம் என்ன? -விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இயேசு உயிர் பெற்ற தினமான கிறிஸ்தவர்களினால் கொண்டாடப்படும் ஈஸ்டர் தினமானது இன்று உலக வாழ் அனைத்து மக்களுக்கும் சவால் நிறைந்த தினமாக மாறியுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற சந்தர்ப்பத்திலேயே ஈஸ்டர் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் உலக மக்களுக்கு இன்றைய தினம் சவால் மிக்கதொரு நாளாக இருக்கின்ற போதிலும், இலங்கை வாழ் மக்களுக்குக் கடந்த ஆண்டு சவால் மிக்கதொரு தருணமாக ஈஸ்டர் தினம் அமைந்திருந்தது.

இலங்கையில் இடம் பெற்ற 30 வருட கால யுத்தம் நிறைவடைந்து, நாடு அமைதியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த தருணத்தில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களின் பின்னர் இலங்கை மக்கள் மீண்டுமொரு பயங்கரவாதத் தாக்குதலை சந்தித்திருந்தனர்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று நட்சத்திர உணவகங்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் ஓராண்டு நிறைவு: இலங்கையின் நிலவரம் என்ன? -விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு ஈஸ்டர் தினம் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும், இந்த ஆண்டின் ஈஸ்டர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

இலங்கையில் ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 277 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக விசாரணைக் குழுக்களின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி, இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 40 வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழந்திருந்ததுடன், 45திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருந்தனர்.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை
படக்குறிப்பு, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

இந்த தாக்குதல் சம்பவத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு பொறுப்பு கூறியிருந்தது.

அதன் தலைவராக செயற்பட்ட சஹரான் ஹசிம் தலைமையில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்டிருந்தது.

2019ஆம் ஆண்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் தின திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களை இலக்கு வைத்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் தருணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அதேநேரம், கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களான கின்ஸ்பேரி, சங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய ஹோட்டல்களையும் இலக்கு வைத்து இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல்கள் தொடர்ந்து சில தினங்களாக பதிவாகியிருந்தன.

அதன்பின்னர், இஸ்லாமியர்களை இலக்கு வைத்து நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றன.

பல இஸ்லாமியர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான சூழ்நிலையில், கடந்த ஆண்டு கிறிஸ்தவ தேவாலயங்களின் பல உற்சவங்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டும் ஈஸ்டர் தினத்தன்று உலக நாடுகளே அச்சத்தில் மூழ்கியிருப்பதை காண முடிகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவ நிகழ்வுகள் அனைத்தையும் ரத்துசெய்யக் கொழும்பு பேராயர் இல்லம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

ஈஸ்டர் தாக்குதல் ஓராண்டு நிறைவு: இலங்கையின் நிலவரம் என்ன? -விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இந்த அறிவித்தாலின் பிரகாரம், இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகக் கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட் தந்தை லால் புஸ்பதேவ பெர்ணான்டோ தெரிவித்தார்.

அதன்படி, நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திங்கள், வியாழன், பெரிய வெள்ளி, அல்லேலூயா சனி மற்றும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஆகிய அனைத்து நிகழ்வுகளும் ரத்துசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் ஈஸ்டர் தின நிகழ்வுகள் கொழும்பு பேராயர் இல்லத்தில் நடத்தப்பட்டதுடன், திருப்பலி ஒப்புக் கொடுத்தல் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

Banner image reading 'more about coronavirus'
Banner

இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் தமது வீடுகளில் இருந்தவாறே ஈஸ்டர் தின ஆராதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் கிறிஸ்தவரான ரூபன் பிலிப்பிடம் பிபிசி தமிழ் வினவியது.

''இயேசு கிறிஸ்து மூன்று தினங்களில் உயிர்த்தெழுந்த சந்தர்ப்பத்தை நாங்கள் ஒரு வெற்றி நாளாகவே பார்க்கின்றோம். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலானது ஒரு திட்டமிட்ட செயலாக இருந்தாலும், இயேசு கிறிஸ்த்து எதனை மக்களுக்கு போதித்தாரோ அதனையே அனைத்து கிறிஸ்தவர்களும் பின்பற்றியிருந்தார்கள். இந்த வருஷமும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இயற்கையின் தாக்குலாக இருக்கின்றது. இந்த தாக்குதல் இயேசுக்கும், எங்களுக்கும் இடையில் உள்ள பந்தத்திற்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நாங்கள் எங்க இருந்தாலும், அவரை நினைவு கூறக்கூடியதாக இருக்கு." என ரூபன் பிலிப் தெரிவிக்கின்றார்.

அருட்தந்தை ரீகன் லோகு

பட மூலாதாரம், ரீகன் லோகு

படக்குறிப்பு, அருட்தந்தை ரீகன் லோகு

ஈஸ்டர் தினத்தை சுதந்திரமாக கொண்டாட முடியாத நிலைமை குறித்து அருட்தந்தை ரீகன் லோகு பிபிசி தமிழுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

''கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஈஸ்டர் தினத்தை கொண்டாட முடியாது போனதை கிறிஸ்தவ மக்கள் ஒரு விசுவாச தளர்வாகவே கருதுகின்றனர். இயற்கையாகவோ அல்லது மனித செயற்பாடுகளினாலோ ஏதேனும் நடந்தேறினால், இறைவன் மீதான நம்பிக்கையை நாம் கைவிடக்கூடாது. தொடர்ந்தும் நாம் இந்த உலகில் வாழ வேண்டும். நம்பிக்கை தளரக்கூடாது" என அருட்தந்தை ரீகன் லோகு தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: