கோட்டாபய ராஜபக்ஷ: ’இலங்கை நாடாளுமன்றம் மார்ச் மாதத்தில் கலைக்கப்படும்’

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், இலங்கைக்கு ஆபத்தானதாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானமானது நாட்டிற்கு ஆபத்தானது என்பதனால், தமது அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வணிக உடன்படிக்கை தொடர்பில் தனக்கு பிரச்சினை கிடையாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரண்டு அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கைச்சாத்திடப்பட்ட அந்த வணிக உடன்படிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு தொடர்பில் தான் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் அங்கு வருகைத் தரும் கப்பல்கள் தொடர்பான கட்டுப்பாடு இலங்கைக்கு உரித்தானது என கூறியுள்ள ஜனாதிபதி, இந்த உடன்படிக்கையில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை குறித்து தான் மீளாய்வு செய்ய போவதில்லை என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியமையானது, தவறான விடயம் எனவும், அது தொடர்பில் சீனாவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய விஜயத்தின் போது தெரிவித்திருந்தார்.

சுவிஸர்லாந்து பெண் ஊழியர் விவகாரம்

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸர்லாந்து பெண் ஊழியர்கள் விவகாரம் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விடயங்களை தெளிவூட்டியிருந்தார்.

குறித்த பெண்ணினால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் போலியானவை என தொழில்நுட்ப சாட்சியங்களின் ஊடாக சுவிஸர்லாந்து தூதுவருக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த பெண் சுவிஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றுகின்றமையினால், அந்த பெண் தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரகம் முன்னிலையாகின்றமை எந்தவிதத்திலும் தவறு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பெண்ணினால் குற்றஞ்சுமத்தப்பட்ட விதத்தில் எந்தவித கடத்தலும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி உறுதியாக இதன்போது கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு நாட்டு அரசாங்கங்களும் தலையீடு செய்யாது, முறையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

19ஆவது திருத்தச் சட்டம்

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியமையானது, பாரிய தவறான விடயம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரசியலமைப்பு தெளிவில்லாது காணப்படக்கூடாது எனவும், அதனால் 19ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கான அதிகாரங்களை பயன்படுத்தும் போது அதில் பிரச்சினை எழுந்துள்ளதா என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் வலுவான நபர் என்பதனால் தன்னால் பணியாற்ற முடியும் என கூறியுள்ளார்.

எனினும், ஜனாதிபதியாக வலுவற்ற ஒருவர் இருப்பாராயின், அவர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்

மார்ச் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னரே, 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிப்பட்ட முறைப்பாடொன்றை அடிப்படையாக வைத்தே முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

தான் நீதித்துறைக்கோ அல்லது பொலிஸாருக்கோ அழுத்தங்களை விடுக்க போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: