You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி இலங்கையில் கைது
கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கையின் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி இன்று கைது செய்யப்பட்டார்.
கானியா பெனிஸ்டர் பிரான்சிஸை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று முற்பகல் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, கைது செய்யப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியான கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) மாலை முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட, கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்ய ஆலோசனை வழங்கியதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவிக்கிறது.
குறித்த பெண்ணின் மனோநிலை தொடர்பில் ஆராய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம், அவரை தேசிய மனநிலை சுகாதார ஆய்வு நிறுவனத்திற்கு இன்று அழைத்து சென்றிருந்தது.
கொழும்பிலுள்ள சுவிஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கை பெண் அதிகாரி கடந்த மாதம் 25ஆம் தேதி கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகவும், தூதரகத்தின் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் சுவிஸர்லாந்து, இலங்கை அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியன இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.
இதன்படி, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி விசாரணைகள் நடத்தப்பட்டன.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரியை கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தியதாக அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக அரசத் தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார தெரிவித்திருந்தார்.
அத்துடன், குறித்த பெண்ணின் மனநிலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும், குறித்த பெண்ணிற்கு வெளிநாடு செல்ல ஏற்கனவே நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு, எதிர்வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த பெண்ணிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
அப் பெண்ணை, பெண் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு, அப்பெண் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமன நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வைத்தியர்களினால் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக குறித்த பெண் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கூறியுள்ளார்.
எனினும், கடத்தப்பட்டோ, தாக்கப்பட்டோ அல்லது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டோ இருக்கின்றமை தொடர்பில் இதுவரை உரிய சாட்சியங்கள் கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது.
குறித்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் போது, அவரது வாக்குமூலம் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு காணப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் கூறியுள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் கருத்துக்கள் மீது நம்பிக்கை வைக்க முடியவில்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துமாறு சுவிஸர்லாந்து அரசாங்கம் இலங்கையிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையிலேயே, கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று அறிவித்திருந்தது.
சுவிஸர்லாந்து தூதுவர் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவர் ஹென்ஸ் பீட்டர் மொக் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது,
சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் ஓட்டுநர்கள் என கூறப்படும் இருவர் கைது
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் கருத்துக்களை வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஓட்டுநர்கள் என தம்மை அடையாளப்படுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் நவம்பர் மாதம் 10ஆம் தேதி இந்த இருவரும், முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
இவ்வாறு ஊடக சந்திப்பை நடத்திய இருவரும் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 27ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வெள்ளை வேன் ஊடாக பலர் கடத்தப்பட்டு, துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு முதலைகளுக்கு உணவாக வீசப்பட்டதாகவும் குறித்த இருவரும் அன்றைய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: