You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியுரிமை திருத்த சட்டம்: ”வன்முறை தொடர்ந்தால் விசாரிக்கப்போவதில்லை” - உச்ச நீதிமன்றம்
ஜாமியா மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட "வன்முறை" தொடர்பாக, தாமாக முன் வந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முன்வந்துள்ளது.
ஆனால் அதே சமயம் போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தாலோ அல்லது பொதுச் சொத்துக்கு சேதாரம் விளைவிக்கப்பட்டால் தாங்கள் இதனை விசாரிக்கப்போவதில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் இன்று (திங்கள்கிழமை) தலைமை நீதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் ஜாமியா மற்றும் அலிகர் பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
நாடு முழுவதும் மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கோரினார்.
"நாடு முழுவதும் மனித உரிமைக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நாட்டில் அமைதியாக நடக்கும் போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர். போலீஸாரே பேருந்துகளுக்கு தீவைத்து கொளுத்திவிட்டு மாணவர்கள் மீது பழி சுமத்துகின்றனர்" என்று இந்திரா ஜெய்சிங் குறிப்பிட்டார்.
இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான காங்கிரஸ் மற்றும் திரிபுராவின் முன்னாள் மகாராஜா ஆகிய தரப்புகள் தொடர்ந்த மனுக்கள் டிசம்பர் 18ஆம் தேதியன்று விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்க்வி இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார்
ஆனால் தலைமை நீதிபதி பாப்டே மனுவின் விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தொடரும் போராட்டங்கள்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலையில் லக்னோ நட்வா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதேபோல் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், லக்னோ மாணவர் போராட்டங்கள் குறித்து போலீஸ் கண்காணிப்பாளரான கலாநிதி நைதானி கூறுகையில், கிட்டத்தட்ட 30 வினாடிகள் அளவுக்கு கல்லெறி சம்பவங்கள் நடந்தன. ஏறக்குறைய 150 பேர் இந்த போராட்டத்துக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர். தற்போது மாணவர்கள் வகுப்பறைகளுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்' என்று கூறினார்.
பிற செய்திகள்:
- குடியுரிமை சட்டம்: போராட்டத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்ட ஜாமியா பல்கலை. மாணவர்கள் - நடந்தது என்ன?
- சினிமா பார்த்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் - ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை
- இந்தோனீசியா சுனாமியை உருவாக்கிய எரிமலை துண்டுகள் இவைதான்
- சேர்த்த பணம் உதவவில்லை: பண மதிப்பு நீக்கத்தால் சேமிப்பை இழந்த ரங்கம்மாள் மறைந்தார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: