You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பண மதிப்பு நீக்கத்தால் சேமிப்பை இழந்த ரங்கம்மாள் மறைந்தார்: சேர்த்த பணம் கடைசி வரை உதவவில்லை
- எழுதியவர், மு.ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை அறியாமல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சேர்த்துவைத்திருந்த சின்ன ரங்கம்மாள், வயது மூப்பின் காரணமாக இன்று ஞாயிறு காலை உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் பெரிய ரங்கம்மாள்(வயது 75) மற்றும் சின்ன ரங்கம்மாள் (வயது 72).
இருவரும் தங்களது வயோதிகத்தில் ஏற்படும் செலவினங்களுக்காக, பல ஆண்டுகளாக பணத்தை சேமித்து அவர்களது வீட்டில் வைத்துள்ளனர். தினக்கூலியாக கிடைத்த தொகையை மிச்சப்படுத்தி சேர்த்து வைத்த 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சமீபத்தில் இவர்கள் வெளியில் எடுத்து தங்களின் மகன்களிடம் மருத்துவ செலவிற்காக கொடுத்துள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என உறவினர்கள் இவர்களிடம் தெரிவித்ததும் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
'சேமித்து வைத்த பணத்தை காகிதத்தில் சுற்றி வீட்டிற்குள் அங்கங்கே வைத்திருப்போம். அவற்றை அவ்வப்போது செலவுக்காக எடுத்துக்கொள்வோம். வயதானதால் சில இடங்களில் பணம் வைத்ததையே மறந்துவிட்டோம். சில நாட்களுக்கு முன் சேமித்த பணம் கிடைத்தது. ஆனால், அவை அனைத்தும் செல்லாத ரூபாய்கள் என மற்றவர்கள் சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம்' என இருவரும் தெரிவித்திருந்தனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இவர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக கூறுகின்றனர் இவர்களின் உறவினர்கள்.
இந்த செய்தி பிரபலமாகவே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இரண்டு மூதாட்டிகளுக்கும், அரசின் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும், சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கிராமத்தில் வசித்து வந்த ரங்கம்மாள் சகோதரிகளை நேரில் சந்தித்து பண உதவி செய்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் சின்ன ரங்கம்மாளுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
'சின்ன ரங்கம்மாளின் கணவர், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள், அதில் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார், மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். தனது இறுதி கால செலவுகளுக்காக சேர்த்துவைத்த பணம் செல்லாது என தெரிந்ததுமே அவர் அதிர்ச்சியடைந்துவிட்டார். மத்திய அரசின் சார்பில் இவரது பணத்தை மாற்ற ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். சின்ன ரங்கம்மாளின் பிள்ளைகள் அனைவரும் கட்டிட வேலை செய்பவர்கள், அவர் நினைத்ததுபோலவே சேர்த்துவைத்த 24000 ரூபாய் செல்லும் பணமாக இருந்திருந்தால், அவரது இறுதிச்சடங்குகளை செய்ய உதவியிருக்கும்' என்கிறார் ரங்கம்மாளின் உறவினர் மணிவர்மன்.
சின்ன ரங்கம்மாளின் சகோதரி பெரிய ரங்கம்மாள், 22,000 ரூபாய் மதிப்புள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளோடு அரசின் உதவிக்காக கண்கலங்கிய நிலையில் இன்னும் காத்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்