You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால மீது போலீஸ் மா அதிபர் புகார்: தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்
இலங்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த போலீஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள போலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார்.
போலீஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய, ஜனாதிபதி கூறியதாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரால் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படியே, தான் இடமாற்றும் உத்தரவுக்கு கையெழுத்திட்டதாக பூஜித் ஜயசுந்தர கூறினார்.
ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜராகி சாட்சி அளித்தபோது அவர் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக அவர்களின் உறவினர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.
இந்த நிலையில் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு பிரிவினர் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்வதற்கான தேவை ஏன் ஜனாதிபதிக்கு ஏற்பட வேண்டும் என நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் அப்போது பூஜித் ஜயசுந்தரவிடம் கேள்வி எழுப்பினர்.
பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கும், 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் இடையில் தொடர்பு காணப்படுகிறது என தாம் எண்ணுவதாக போலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
போலீஸ் மா அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாத பின்னணியில், ஏன் அரசியல் அழுத்தங்களுக்கு நீங்கள் உட்படுத்தப்பட்டீர்கள் என நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் போலீஸ் மாஅதிபரிடம் கேள்வி எழுப்பினர்.
தனது மேலதிகாரியான பாதுகாப்பு செயலாளரே தனக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாக அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த இடமாற்ற விவகாரம், போலீஸ் ஆணைக் குழுவிற்கும் அறிவிக்கப்பட்டு, ஆணைக்குழுவின் அனுமதியுடனேயே இடமாற்றம் வழங்கப்பட்டதாக பூஜித் ஜயசுந்தர கூறினார்.
இதேவேளை, தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆஜராவதை தவிர்க்குமாறு தனக்கு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அறிவுறுத்தியதாகவும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
இலங்கை தாக்குதல் நடத்தப்படுவற்கு முன்னர், தாம் இறுதியாக 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதியே பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறாயின், தேசிய பாதுகாப்பு சபையிலிருந்து போலீஸ் திணைக்களம் புறக்கணிக்கப்பட்டதா என போலீஸ் மாஅதிபரிடம், நாடாளுமன்ற தெரிவுக்குழு வினவியது.
அதற்கு, ஆம் என போலீஸ் மாஅதிபர் பதிலளித்தார்.
மேலும், இலங்கை மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளது தொடர்பாக தனக்கு முதலாவது ஆவணம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியே கிடைத்ததாகவும், இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் மேலதிக விடயமாகவே இது கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், தனக்கு கிடைத்த தகவல்கள் குறித்து தான் உரிய தரப்பிற்கு அறிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்