ரோகித் ஷர்மா - இந்திய அணியின் சத நாயகனாக உருவெடுத்தது எப்படி?

    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

ரோகித் ஷர்மாவுக்கு இரட்டை சதம் ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல. மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் விளாசிய நாயகன். ஒருநாள் போட்டிகளில் 250 ரன்களை கடந்த முதல் வீரர் அவர்தான்.

ஆனால் நேற்று ரோகித் ஷர்மா விளையாடிய நிதானமான இன்னிங்ஸ் மிகச்சிறப்பு வாய்ந்தது. அதைத்தான் விராட் கோலியும் போட்டி முடிந்த பிறகு கூறினார்.

ரோகித் ஷர்மா 70-80 ரன்களை கடந்து விட்டாலே இணையத்தில் ரோகித் ரசிகர்கள் இன்று 200 ரன்களை அடிப்பார்/அடிக்கமாட்டார் என விவாதிக்கத் துவங்கிவிடுவார்கள். ஏனெனில் ரோகித்தின் வரலாறு அப்படி. ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட்டார் எனில் அவரை அவுட் ஆக்குவது எந்த ஒரு அணிக்கும் எந்த ஒரு பௌலருக்கும் மிகப்பெரிய சவால். மேலும் ரன்களை விரைவாக குவிக்கத் துவங்குவது அவரது பாணி.

ஆனால் அதற்கு நேர் மாறாய் இருந்தது நேற்றைய ஆட்டம்.

ஆட்டத்தின் துவக்கதில் ரபாடா, ரோகித்தை பாடாய் படுத்தினார். அவரது பொறி பறந்த பந்துவீச்சில் ரோகித் ஷர்மா நிலை குலைந்து போனார். ரபாடாவின் ஓவரைக் கடப்பதே ரோகித்துக்கு சவாலாக இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ரபாடாவை எதிர்கொண்டார் ரோகித் ஷர்மா. அந்த ஓவரின் நான்காவது பந்தில் 140 கி.மீ வேகத்தில் ஒரு நல்ல பவுன்சர் வீசினார். ரோகித் பேட்டில் பட்டு பந்து எகிறியது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் ஃபாப் டு பிளசிஸின் கேட்ச் பிடிக்கும் முயற்சி வீணானது.

கிறிஸ் மோரிஸும் தனது பங்குக்கு ரோகித்தை கடும் சோதனைக்கு உள்ளாக்கினார். இம்முறையும் தென்னாப்பிரிக்க வீரர்கள் கேட்ச் பிடித்து அவரை அவுட் ஆக்க முடியவில்லை.

நான்காவது ஓவரில் ரபாடா மீண்டும் ரோகித்ததை கடுமையாக சோதித்தார். முதல் நான்கு பந்தில் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார் ரோகித்.

ரோகித் ஷர்மா 22 பந்துகளில் ஐந்து ரன்கள் தான் எடுத்திருந்தார். ஆனால் எட்டாவது ஓவரில் ரபாடாவின் பந்தில் ஒரு சிக்ஸர் வைத்தார். அதே ஓவரில் மேலும் இரண்டு பௌண்டரிகள் விளாசினார்.

12-வது ஓவரில் கள அம்பயரின் தீர்ப்பால் விக்கெட்டை இழக்கும் வாய்ப்பில் இருந்து நூலிழையில் தப்பினார்.

தவான், கோலி என இரு முக்கிய வீரர்கள் அவுட் ஆன நிலையில், இந்தியாவின் நடு வரிசை ஏற்கனவே அவ்வளவு வலிமையானதொன்றும் கிடையாது என்ற நிலையில் மிகவும் பொறுப்பாக ஆடினார் ரோகித்.

பொறுமையாக விளையாடிய ரோகித் 41-வது ஓவரில் தனது சதத்தை நிறைவு செய்தார். 128 பந்துகளில் அவர் சதமடித்தார். இதுதான் அவரது மிகப் பொறுமையான சதமும் கூட.

இந்த சதம் மூலம் இந்தியாவுக்காக விளையாடி அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கங்குலியை முந்திவிட்டார் ரோகித் ஷர்மா. ஆம். 23 சதங்களோடு தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

அவரை விட அதிக சதம் அடித்தவர்கள் டெண்டுல்கர் (49), விராட் கோலி(41) மட்டுமே.

மேலும் சேஸிங்கில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 11 சதங்களோடு சர்வதேச அளவில் நான்காமிடம் பிடித்திருக்கிறார். கோலி 25 சதங்களோடு முதலிடத்தில் இருக்கிறார்.

ரபாடாவின் கடும் தாக்குதலிருந்து தனது விக்கெட்டை காப்பாற்றி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து சதமும் விளாசி 144 பந்துகளில் 122 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார் ரோகித் ஷர்மா.

ஒரு வகையில் பார்த்தால் ரோகித் நேற்றைய ஆட்டம் போலதான் அவரது வரலாறும் இருக்கிறது.

இந்தியாவுக்காக ரோகித் விளையாடத் துவங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ரோகித் சர்மா அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகியிருந்தாலும் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை

2007-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது ரன் கணக்கை துவக்கினார் ரோகித் ஷர்மா.

அப்போட்டியில் சச்சின் 99 ரன்களில் ஆட்டமிழக்க ஆறாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரோகித் எட்டு ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக முதல் அரை சதம் எடுத்தார். ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளில் முதல் சதம் எடுப்பதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டிருந்தது.

முதல் நாற்பது போட்டிகளில் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. இந்திய அணி இக்கால கட்டத்தில் சிறந்து விளங்கியது. பல தொடர் வெற்றிகளை கண்டது. எனினும் ரோகித்தின் ஆட்டமும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படுவதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

2010-ல் ஒருவழியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் சதமடித்திருந்தார். அடுத்தப் போட்டியில் இலங்கைக்கு எதிராகவும் சதம் கண்டார்.

ஆனால் அந்த இரு போட்டிகளுக்கு பிறகு ரோகித் மீண்டும் சதம் விளாசுவதற்கு மீண்டும் மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது.

2013-ம் ஆண்டில் ஜெய்ப்பூரில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார்.

அதே ஆண்டு பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

அதன் பின்னர் ரோகித் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை வேறு பரிமாணம் கண்டது. உலக அளவில் டாப் ஐந்து பேட்ஸ்மேன்களில் ஒருவராக உயர்ந்தார்.

இந்திய அணியின் நம்பகமான தொடக்க வீரராக உருவெடுத்தார்.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் மூன்று சதம் விளாசிய ரோகித், அடுத்த ஆறு ஆண்டுகளில் 20 சதங்களை எடுத்தார்.

கடந்த 2015 உலகக் கோப்பைக்கு பிறகு மட்டும் 16 சதம் விளாசியிருக்கிறார்.

சதம் விளாசுவது மட்டுமின்றி சீராக சிறப்பான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 2013-ம் ஆண்டுக்கு பிறகு 50-க்கு குறையவே இல்லை. அதிலும் 2017, 2018 ஆண்டுகளில் 70-க்குக்ம் அதிகமான சராசரி வைத்திருந்தார்.

இந்த கால கட்டங்களில் ஐபிஎல் தொடர்களிலும் அணித்தலைவராக பொறுப்பேற்று மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

சில வீரர்கள் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடுவார்கள். சிலர் சேஸிங்கின் போது சிறப்பாக விளையாடுவார்கள். ஆனால் எந்தவொரு சூழலிலும் அவர் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்பதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன .

அணி முதலில் பேட்டிங் பிடிக்கும்போது அவரது சராசரி 48.19, சேஸிங்கில் 47.60.

அணி முதலில் பேட்டிங் செய்த சமயங்களில் 12 சதமும் சேஸிங்கில் 11 சதமும் விளாசியிருக்கிறார்.

சம காலத்தில் ரோகித் அளவுக்கு இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் மிகக்குறைவு.

இந்தியாவின் அணித்தலைவர் கோலி சேஸிங்கில் பிரமாதமான ஆட்டக்காரர். சேஸிங்கில் சராசரியாக 67 ரன்கள் எடுத்திருக்கிறார். முதலில் பேட்டிங் செய்யும்போது அவரது சராசரி கிட்டத்தட்ட ஐம்பது.

தற்போது ரோகித் ஷர்மா 201 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடி 8138 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது சராசரி 48.

ரோகித் ஷர்மா அளவுக்கு 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய தொடக்க வீரராக களமிறங்கிய எந்தவொரு வீரரும் இவ்வளவு அதிகமாக சராசரி வைத்திருக்கவில்லை.

சேவாக், கம்பீர் போன்ற வீரர்கள் நாற்பது ரன்களை விட குறைவான சராசரி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் ஷர்மாவின் சில சாதனைகள்

  • 2013-ம் ஆண்டில் இந்தியா சார்பாக விளையாடிய வீரர்களில் ஒரு ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ரோகித் ஷர்மா. அப்போது 209 ரன்கள் எடுத்திருந்தார்.
  • 2014,2015,2016,2017,2018 ஆண்டுகளிலும் ரோகித் ஷர்மாவே ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் குவித்த இந்திய வீரர் ஆவார்.
  • 2017,2018 ஆண்டுகளில் உலக அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தகவர்கள் பட்டியலில் ரோகித்துக்கு இரண்டாமிடம்.
  • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நான்கு சதங்கள் விளாசிய ஒரே நபர் ரோகித். அதிக அரை சதம் விளாசிய வீரரும் அவர்தான்.
  • கடந்த 2018ஆம் ஆண்டில் ரோகித் ஷர்மா சர்வதேச போட்டிகளில் 71 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
  • ஐபிஎல்லில் அதிக முறை கோப்பை வென்ற ஒரே கேப்டன் ரோகித் ஷர்மா - இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பை வென்றுள்ளது.

ரோகித் ஷர்மா இவ்வளவு சாதனைகள் புரிந்திருந்தாலும் இன்னமும் அவர் பௌன்சர்களை சமாளிப்பதில் வல்லவர் இல்லை எனக் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அவர் தடுமாற்றம் கண்டு வந்துள்ளது தெரியவருகிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் 30 போட்டிகளில் விளையாடி 1328 ரன்களும், இங்கிலாந்தில் 16 போட்டிகளில் 67.41 எனும் சராசரியோடு 809 ரன்களும் குவித்திருக்கும் ரோகித், தென்னாப்பிரிக்க மண்ணில் 14 போட்டிகளில் விளையாடி இருந்தாலும் ஒரு சதம் உட்பட 256 ரன்களையே எடுத்திருக்கிறார். அங்கு அவரது சராசரி வெறும் 19.69 மட்டுமே.

கிரிக்கெட்டை பொருத்தவரை ரோகித் ஷர்மா எந்தவொரு களத்திலும் நிலைத்துவிட்டால் அபாயகரமான வீரர். அதை வரலாறு உறுதிப்படுத்துகிறது.

இந்தியா வெற்றிகரமாக தொடரை துவங்கியிருக்கிறது. ரோகித்தும் தனது வழக்கமான பாணியை விட நிதானமாக ஒரு சிறப்பான சதம் விளாசியிருக்கிறார். ரோகித்தின் கிரிக்கெட் வாழ்வில் அவரது செயல்திறன் உச்சகட்டத்தில் இருக்கக்கூடிய ஆண்டாக 2019 அமையப் போகிறதா என்பதை பொருத்திருந்துப் பார்ப்போம்.

இப்போதைக்கு உலக பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும் தலைவலி இந்தியாவுடன் ஆடும்போது கோலியின் விக்கெட்டை கைப்பற்றுவது மட்டுமல்ல ரோகித்தை விரைவில் ஆட்டமிழக்கச் செய்வதும் அவசியம் என்பதுதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :