You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தின் 512ஆவது படைத் தலைமையகத்தில் நடந்த இந்த சந்திப்பில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிறகு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட போராளிகள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் இலங்கை இராணுவத்தின் 512ஆவது படைபிரிவின் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மிலிந்த, "இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந்திப்பதற்காக அழைத்துள்ளேன். நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பில் சந்திக்கவேண்டியுள்ளது.
குறிப்பாக நான் யாழ்ப்பாணத்திலுள்ள சர்வமத பிரதிநிதிகள்,வர்த்தக சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். அதன் பின்னர் உங்களை அழைத்துள்ளேன். தற்போது நாட்டில் உள்ள நிலைமை யாழ்ப்பாணத்திலும் இடம்பெறாமல் இருக்க வேண்டுமென்பதே எனது நோக்கம். எனவே யாழ்ப்பாண மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது" என்று தெரிவித்தார்.
"வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவோர் தொடர்பில் அவதானமாக இருந்தால் கொழும்பில் நடந்த தாக்குதல் போல் யாழ்ப்பாணத்தில் இடம் பெறாமல் தடுக்க முடியும். எனவே வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் எமக்கு தகவல் தருவதன் மூலம் அனைத்து குற்றச் செயல்களையும் இல்லாதொழிக்க முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் "நாங்களும் மக்களுக்காகத்தான் போராடினோம் எச் சந்தர்ப்பத்திலும் மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை" எனவும் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை இச் சந்திப்பு தொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி பிபிசி தமிழிடம் தெரிவிக்கையில்,
நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் முன்னாள் போராளிகளை இணைத்துகொள்வது, அது தொடர்பில் துப்புகளை வழங்குவதற்கு போராளிகள் நாங்கள் தாயாரில்லை.
ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்பது இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளோடு சம்பந்தப்பட்ட விடயம். எங்களை குற்றவாளிகளாக நினைத்து நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் நாங்கள் தற்பொழுது சமூகமயப்படுதப்பட்டுள்ளோம். நாங்கள் தற்பொழுது சாதாரண வாழ்கையையே வாழ்ந்து வருகின்றோம்.
தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டினை பாதுகாத்து கொள்ளும் பொறுப்பு இலங்கை அரசாங்கம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு படையிடமே உள்ளது. இதனை அவர்கள் முன்னாள் போராளிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இலங்கை இராணுவம் நாட்டினை பாதுகாக்கின்ற வேலையை செய்தால் நல்லது. அரசியல் செய்கின்ற வேலையை நிறுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்