You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொலை குற்றச்சாட்டில் இலங்கை பாதுகாப்பு படை தலைவர் கைது
இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற காலத்தில் நிகழ்ந்த கொலை குற்றங்களை மூடிமறைத்துவிட்டதாக இலங்கையின் உயரிய ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்வதற்கான வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் பாதுகாப்பு படை தலைவர் ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழீழ வீடுதலை புலிகளோடு 2008 முதல் 2009ம் ஆண்டு வரை நடைபெற்ற போரின் முக்கிய நிலைகளில் 11 இளைஞர்களை கொன்றதாக கூறப்படும் முக்கிய சந்தேக நபரான கடற்படை உளவுத்துறை அதிகாரியின் குற்றங்களை விஜேகுணரத்ன மூடிமறைத்து விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
அந்த உளவுத்துறை அதிகாரி ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அட்மிரல் விஜேகுணரத்ன இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.
தலைநகர் கொழும்பிலுள்ள நீதிமன்றம் டிசம்பர் 5ம் தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கான 3 பிடியாணைகள் நவம்பர் மாத தொடக்கத்தில் வழங்கப்பட்டன.
தன்னுடைய ராணுவ சீருடையை அணிந்து கொண்டு, கடற்படை அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ நீதிமன்றத்தில் அட்மிரல் விஜேகுணரத்ன இப்போதுதான் ஆஜராகியுள்ளார்.
பிணையில் அவரை விடுவிக்க சமர்பிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற செயல்பாடுகள் பற்றி செய்தி சேகரித்தபோது தாங்கள் தாக்கப்பட்டதாக பல பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.
கிளர்ச்சியாளர்களின் தலைவரும், பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் கொல்லப்பட்ட போரின் முடிவில் இருதரப்பும் போர் குற்றங்கள் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றன.
இது பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று மனித உரிமை குழுக்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றன.
இந்த அட்மிரல் பாதுகாத்ததாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் தமிழர்கள். இந்த 11 இளைஞர்களின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
போரின் விலை என்ன?
26 ஆண்டுகளாக நடைபெற்ற இலங்கையின் உள்நாட்டு போரில் இருதரப்பிலும் குறைந்தது ஒரு லட்சம் பேர் இறந்துள்ளனர்.
இலங்கையின் வடக்கில் சிறுபான்மையினருக்கான தனி நாட்டை பெறுவதற்கு போராடுவதாக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் கூறினர்,
போரின் கடைசி மாதங்களில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்கான குடிமக்களின் இறப்புகளின் சரியான எண்ணிக்கை இதுவரை இல்லை.
போர் நடைபெற்ற கடைசி மாதங்களில், இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் பல லட்சக்காணக்கான தமிழ் மக்கள் சிக்கியிருந்தனர்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி
அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய ஷெல் தாக்குதலை அரசுப்படைகள் அப்போது நடத்தியதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், தங்களை பாதுகாத்துகொள்ள மக்களை பாதுகாப்பு கேடையங்களாக விடுதலை புலிகள் பயன்படுத்தியதாகவும், தப்பி செல்வோரை சுட்டுக்கொன்றதாகவும் கூறப்படுகிறது.
கிளர்ச்சியாளர்களின் தலைவர்களும், பிறரும் சரணடைந்த அல்லது பிடிபட்ட பின்னர், இலங்கை படை அவர்களை கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்படுகின்றன.
இலங்கையில் குடிமக்களை பாதுகாப்பதற்கு ஐநா அதிகமான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதை 2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை ஒப்புக்கொண்டது.
போரின்போது இழைக்கப்பட்ட பல போர் குற்றங்களை சானல் 4 மற்றும் ஐநா ஆவணப்படுத்தியுள்ளன.
போர் நடைபெற்ற கடைசி 5 மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு புலனாய்வு தெரிவிக்கிறது.
ஆனால், கொலைகள் இதைவிட அதிக எண்ணிக்கையில் இருக்கலாம் என்ற பிறர் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்