You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேற்கத்திய நாடுகளைவிட சீனாவின் உதவியை பெறவே விருப்பம் - தான்சானியா அதிபர்
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
சீனாவுக்கு முக்கியத்துவம்
மேற்கத்திய நாடுகளைவிட சீனாவிடம் உதவிகளைப் பெறவே தாங்கள் விரும்புவதாக தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி கூறியுள்ளார்.
மேற்கு நாடுகளைவிட சீனா தங்களுக்கு குறைவான கட்டுப்பாடுகளையே விதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் சீனா செய்து வரும் முதலீடுகள் மேற்கு நாடுகள் அங்கு செலுத்தும் செல்வாக்கை குறைக்கும் வகையில் அமைந்துள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் முதலீடு, உதவித்தொகை மற்றும் கடனாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு 60 பில்லியன் டாலர் வழங்க உள்ளதாக சீனா கூறியுள்ளது.
முதல் பெண் ராணுவத் தளபதி
நேட்டோ நாடு ஒன்றுக்கு முதல் முறையாக பெண் ஒருவர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
55 வயதாகவும் அலென்கா எர்மன்க் ஸ்லோவேனியாவின் ராணுவத் தளபதியாக இன்று பொறுப்பேற்கிறார்.
யுகோஸ்லேவியா பிரிக்கப்பட்டு உருவான நாடுகளில் ஒன்று ஸ்லோவேனியா.
விலைபோகாத ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மாடு
மேற்கு ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே, 1,400 கிலோ எடையும், 6 அடி நான்கு அங்குலம் உயரமும் உள்ள ஏழு வயதாகும் மிகப்பெரிய காளை ஒன்றை ஏலத்தில் வாங்க இறைச்சி நிறுவனங்கள் எதுவும் முன்வரவில்லை.
ஆஸ்திரேலியாவிலேயே மிகப்பெரிய கால்நடை என்று கருதப்படும் இந்தக் காளையை கையாள்வது மிகவும் கடினம் என்பதால் யாரும் வாங்கவில்லை என்று அதன் உரிமையாளர் ஜாஃப் பியர்சன் கூறியுள்ளார்.
நிக்கராகுயா துணை அதிபர் மீது அமெரிக்கா தடைகள் விதிப்பு
நிக்கராகுயா நாட்டின் துணை அதிபரும் , அதிபர் டேனியல் ஒர்டேகாவின் மனைவியுமான ரொசாரியோ முரிலோ மீது ஊழல் மற்றும் தீவிரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அமெரிக்கா அவர் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்காவில் நடந்த கொலைகள், வதை மற்றும் ஆள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஓர் இளைஞர் அமைப்புடன் முரிலோவுக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
அதிபர் தம்பதியரின் பாதுகாப்பு ஆலோசகர் மீதும் அமெரிக்கா சில தடைகள் விதித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :