You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
30 லட்சம் ஒளியாண்டு தூரத்தில் ஓர் அதிவேக நட்சத்திர 'தொழிற்சாலை'
இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் 'ஆஸ்ட்ரோ சாட்' 30 லட்சம் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தைப் படம் பிடித்துள்ளது.
நமது பால்வழி மண்டலத்தைப் போல பல்லாயிரம் மடங்கு நிறை குறைந்த இந்த மண்டலம், பால்வழி மண்டலத்தைப் போல 12 மடங்கு வேகத்தில் நட்சத்திரங்களை உற்பத்தி செய்து அதிசயிக்கவைக்கிறது .
பல அலைநீளம் கொண்ட இந்த செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 2015 ஆம் ஆண்டு செலுத்தியது. இச் செயற்கைக்கோள் அனுப்பிய நட்சத்திர மண்டலத்தின் புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
முப்பது லட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள, செட்டஸ் என்னும் நட்சத்திர கூட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிறியரக நட்சத்திர மண்டலம் உல்ஃப்-லண்டுமார்க்-மெல்லாட் என அழைக்கப்படுகிறது.
அருகாமையில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் இருந்து விலகியுள்ள இந்த உல்ஃப் மண்டலம் சூரிய குடும்பத்தில் உள்ளதைப் போல 13 சதவிகிதம் மட்டுமே உலோகத்தைக் கொண்டுள்ளது.
வழக்கமாக நட்சத்திரக்கூட்டங்களின் நிறை குறைவாக இருக்கும்போது அது புதிய நட்சத்திரங்கள் உருவாகும் விகிதத்தைப் பாதிக்கும். ஆனால், மிகவும் நிறை குறைவாக உள்ள இந்த நட்சத்திர மண்டலம் எப்படி அதிவேகத்தில் நடத்திரங்களை உற்பத்தி செய்கிறது என்பதை விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆஸ்ரோசாட்டின் மூன்று கண்டறியும் கருவிகள் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. யூ.வி கண்டறியும் கருவிகள் தொலைவிலுள்ள போட்டான்களை கண்டறிந்த அதேவேளையில், செயற்கைகோளில் உள்ள இமேஜர் இதைப் படமக்கியுள்ளது. இதன்மூலம் கிடைத்துள்ள தகவல்கள் குறித்து இந்திய விண்வெளி இயற்பியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அன்னபூரணி சுப்ரமணியம், அவரது மாணவர் சயான் மண்டல் ஆகியோர் இது குறித்து ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தமது தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு விதமான தொலைநோக்கிகள், புகைப்படம் எடுக்கும் கருவி உட்பட ஐந்து விதமான கருவிகளுடன், ஆஸ்ரோசாட் விண்ணிற்கு அனுப்பப்பட்டது.
குழந்தைகள் வளர்வதைக் கவனிப்பது போல
இந்த விண்மீன்கள் தற்போது தான் பிறந்துள்ளன. ஒரு குழந்தை வளர்வதைப் போல இவையும் முதிர்ச்சி அடையும். இவற்றின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து அறியும் முயற்சியில் இந்த புகைப்படம் ஒரு முக்கியமான படிக்கல். மிக அருகாமையில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் இது . இவ்வாறான புகைப்படங்களை எடுப்பதற்காவே வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டது தான் ஆஸ்ட்ரோசாட் என்று பிபிசி தமிழ் சேவையின் கிருத்திகாவிடம் தெரிவித்தார் மத்திய அரசின் 'விஞ்ஞான் பிரசார்' நிறுவனத்தின் விஞ்ஞானியும், எழுத்தாளருமான த.வி. வெங்கடேஸ்வரன்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்