இலங்கை: மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பதை தவிர்க்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

எதிர்வரும் மாகான சபை தேர்தல்களை ஒத்திவைப்பதை தவிர்த்து அதனை நடத்தும்படி அரசாங்கம் மீது உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி முன்னாள் தலைமை நீதிபதி சரத்.என் சில்வா உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர் , ஜயந்த ஜெயசூரிய ,சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் அண்மையில் மாகான சபை தேர்தல்கள் திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் திடீரென நிறைவேற்றிய முறை முற்றிலும் சட்ட விரோதமானதென்று முன்னாள் தலைமை நீதிபதி தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

சம்பந்தப்பட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்படுவதட்கு முன்னர் அது அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட வில்லை என்று தெரிவித்த அவர் அந்த திருத்தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அரசியல் சாசனத்தின் கீழ் பொது மக்களுக்கு காலாவகாசம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதன் மூலம் அரசியல் சாசனத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அரசாங்கம் பறித்துள்ளதாக தெரிவித்த முன்னாள் தலைமை நீதிபதி, மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இவ்வாறு செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

எனவே மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பதை தவிர்த்து அதனை உடனடியாக நடத்தும்படி தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு அவர் தனது மனுவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வழக்கு தாக்கல் செய்யப்பட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சரத்.என் சில்வா இந்த சட்டவிரோத செயலின் மூலம் அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஒன்றிணைந்து மாகாண சபை தேர்தல்களை பின்போட சதி திட்டங்கள் தீட்டி வருகின்றதாக குற்றம்சாட்டினார்.

எதிர் காலத்தில் நாடாளுமன்ற மற்றும் பொதுத் தேர்தல்களையும் பின்போட அரசாங்கம் இவ்வாறான முறைகளை கையாளும் அபாயம் இருக்கின்றது. எனவே அரசாங்கம் முன்னெடுக்கும் அரசியல் சாசனத்தை மீறும் செயல்களை தடுக்கும் நோக்கத்துடன் தான் நீதிமன்றம் முன் வந்து இந்த மனுவை தாக்கல் செய்ய தீர்மானித்தாக தெரிவித்தார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :