You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையிலுள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்களைத் தனி இடத்தில் பராமரிக்க நீதிமன்றம் அனுமதி
இலங்கையில் சட்ட விரோதக் குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை, முகாமுக்கு வெளியே தங்க வைத்துப் பராமரிக்க நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளைத் தடுப்பு முகாமுக்கு வெளியே வைத்துப் பராமரிக்க ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் முன்வந்துள்ள நிலையில், மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இலங்கையில் பிறந்த குழந்தை உள்ளிட்ட 31 ரோஹிஞ்சா முஸ்லிம்கள், மீரிகான சட்டவிரோதக் குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் 3 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
31 பேரையும் ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் மூலம் பராமரிக்க அனுமதி கோரி குடிவரவு-குடியகல்வு தினைக்களத்தினால் மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 31 பேரையும் கொழும்பிலுள்ள ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் கையளிக்குமாறு குடிவரவு-குடியகல்வு தினைக்களத்திற்கு உத்தரவை பிறப்பித்தாக ரோகிஞ்சா முஸ்லிம்களுக்கு சட்ட உதவிகளை வழங்கி வரும் ஆர்.ஆர்.ரி நிறுவனத்தை சேர்ந்த மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்டின் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்
அநேகமாக நாளை வியாழக்கிழமை, இவர்கள் கையளிக்கப்படுவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 5 வருடங்களாக இந்தியாவில் ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் புதுடெல்லியிலும், தமிழ்நாட்டிலுள்ள அதிராம்பட்டினத்திலும் இவர்கள் தங்கியிருந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் படகு மூலம் வேறொரு நாட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை ஏப்ரல் 30-ஆம் திகதி இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து 7 பெண்கள் , 16 சிறுவர்கள் உள்ளிட்ட 31 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் 3 மாதங்களுக்கு மேலாக மீரிகான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இவர்களுக்கு புகலிடம் வழங்க முடியாத நிலையில் வேறொரு நாட்டில் புகலிடம் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளில் ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தற்போது ஈடுபட்டுள்ளது.
அதுவரையில் தடுப்பு முகாமுக்கு வெளியே வைத்து பராமரிக்க கொழும்புக்கு வெளியே கல்கிசை என்னுமிடத்தில் தனியான வீடொன்றும் வாடகைக்கு பெறப்பட்டிருந்தாலும் நீதிமன்ற அனுமதி பெறப்பட வேண்டும்.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதி கோரும் மனுவொன்று மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :