இலங்கை வெள்ளம், நிலச்சரிவு: 44 மாணவர்கள் பலி; 8 பேரை காணவில்லை

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அந்தப் பிரதேசங்களில் கல்வி நடவடிக்கைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்புக்குள்ளான மூன்று மாகாணங்களிலும் இதுவரை கிடைத்த அறிக்கையின் படி குறைந்தது 44 மாணவர்கள் பலியாகியுள்ளனர். எட்டு மாணவர்கள் பற்றிய தகவல்கள் இல்லை என்றார் மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்.

தொடர்புடைய செய்திகள் :

மேல் மாகாணத்தில் அதாவது களுத்துறை மாவட்டத்தில் கூடுதலான மாணவர்கள் உயிழந்துள்ளனர். அம் மாகாணத்தில் மட்டும் 17 மாணவர்கள் மரணமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டம் - 06, அம்பாந்தோட்டை - 04 என்ற எண்ணிக்கையில் 10 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். மேலும், 8 மாணவர்களை காணவில்லை.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் 15 மாணவர்களும் கேகாலை மாவட்டத்தில் 02 மாணவர்களும் என 17 மரணங்கள் கல்வி அமைச்சில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அகிலவிராஜ் காரியவசம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன..

மேலும் அனர்த்தம் காரணமாக பல பள்ளிக் கூடங்களும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் 56 அரசு பள்ளிக் கூடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் 30 பள்ளிக் கூடங்களிலும் தென் மாகாணத்தில் 12 பள்ளிக் கூடங்களிலும் மேல் மாகாணத்தில் 17 பள்ளிக் கூடங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன.

பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு மூன்று தொகுதி சீருடை , பாதணி , இலவச பாடநூல் மற்றும் பயிற்சி புத்தகங்கள் போன்றவை வழங்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார்.

குறிப்பிட்ட காலத்திற்கு மாணவர்களுக்கு சீருடையுடன் சமூகமளித்தல் தொடர்பாக விதி விலக்களிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார் .

இதே வேளை நாளை வெள்ளிக்கிழமை வரை பள்ளிக் கூடங்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பள்ளிக் கூடங்கள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற அனைத்து பள்ளிக் கூடங்களும் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்