You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் பெரும் தீ விபத்து; கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் போராட்டம்
சென்னை தியாகராய நகரில் உள்ள மிகப் பெரிய துணிக்கடையிலும் அதை ஒட்டியுள்ள நகைக்கடையிலும் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்க தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடிவருகின்றனர்.
தியாகராய நகர் உஸ்மான் சாலையில் அமைந்திருக்கும் சென்னை சில்க்ஸ் துணிக் கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அதன் கீழ் தளத்தில் தீ ஏற்பட்டது. அங்கிருந்து வெளியேறிய புகையைப் பார்த்தவர்கள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். இந்தத் தீ கொஞ்சம் கொஞ்சமாக மேல் தளங்களுக்கும் பரவியது.
அருகிலேயே உள்ள ஸ்ரீ குமரன் தங்க மாளிகைக்கும் தீ பரவியது. உடனடியாக 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டடத்திற்குள் இருந்த 14 பேர் காயங்களின்றி மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்திருக்கிறார்.
பிற்பகல் ஐந்து மணியளவிலும்கூட கட்டடத்திலிருந்து தொடர்ந்து புகை வெளியேறிவருகிறது. காலை முதல் 150க்கும் மேற்பட்ட சென்னைக் குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகள் தீயணைப்பு வாகனங்களுக்குத் தேவையான தண்ணீரை வழங்கியுள்ளன. 12 மணி நேரத்திற்கு மேல் போராடியும் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாததால், 4 மணிக்கு மேல் புதிய கிரேன்கள், தீயணைப்பு வாகனங்கள் உஸ்மான் சாலை பாலத்திற்குக் கொண்டுவரப்பட்டு, தீயணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தீயணைக்கும் முயற்சிகளை தமிழக அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ஜெயகுமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மேலும் சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன், தீயணைப்புத் துறை டிஜிபி ஜார்ஜ் ஆகியோரும் தீயணைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
பிற செய்திகள் :
தற்போது 14க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. காலை முதல் தீ எரிந்துவருவதால் துணிக்கடை அமைந்துள்ள 7 மாடி கட்டடம் சேதமடைந்திருக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது, பொக்லைன் மற்றும் ஜேசிபி எந்திரங்களை வைத்து துணிக்கடையின் சுவர்களை இடிக்கும்பணிகள் நடந்துவருகின்றன.
இந்தத் தீயை அணைக்க ஆகும் செலவை அந்த நிறுவனத்திடமிருந்தே வசூலிப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கட்டடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டிருந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த தீ விபத்தை அடுத்து உஸ்மான் சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உஸ்மான் சாலையிலும் அங்கு உள்ள மேம்பாலத்திலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் 125 தீயணைப்புப் படையினரும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கு முன்பாக இதே தியாகராய நகரில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், இருவர் உயிரிழந்தனர். தியாகராயநகரின் உஸ்மான் சாலை பகுதியில் பல வணிக நிறுவனங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்படுள்ளதாக நீண்ட காலமாகவே புகார்கள் உண்டு. இந்த நிலையில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும்படி 2007ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சில கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
"இந்த விதிமீறல்களுக்குக் காரணமான அதிகாரிகளைக் கைதுசெய்ய வேண்டும். இந்த விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக நாளை வழக்குத் தொடரப் போகிறேன்" என இதற்கு முன்பாக விதிமீறல் கட்டடங்கள் குறித்து வழக்குத் தொடர்ந்த டிராஃபிக் ராமசாமி பிபிசியிடம் தெரிவித்தார்.
துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் தியாகராய நகர் பகுதி முழுவதுமே புகை பரவியிருப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கவலைதெரிவித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்