You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`குண்டுச் சத்தம் என் இதயத்தைப் பிழிந்ததைப் போல் இருந்தது'
ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டுவெடித்தபோது அதை நேரில் பார்த்த ஒருவர், தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார்.
பெயரை வெளியிட விரும்பாவிட்டாலும், அதிர்ச்சி கலந்த அந்த அனுபவத்தை அவர் முழுமையாகப் பகிர்ந்து கொண்டார். இதோ:
"காபூலில் 17, வஸிர் முகமது அக்பர்கான் சாலையில் ஓர் அமைச்சகம் உள்ளது. காலை 8.22 மணிக்கு அங்கு நான் இருந்தேன். ஜெர்மன் தூதரகத்துக்கு மிக அருகில் இருக்கிறது. 8.32 மணிக்கு குண்டு வெடித்தது.
குண்டு வெடித்த அந்த நொடியில், யாரோ என் இதயத்தைப் பிழிந்து, பிறகு விட்டுவிடுவதைப் போல் இருந்தது. அந்த நேரத்தில், என் காதுகள் செவிடானதைப் போல் இருந்தது.
கட்டடம் அதிர்ந்தது. அதையடுத்து, மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து பெரும் புகை வெளியானது.
இது மிகவும் குறுகலான, நெரிசல் மிகுந்த சந்து.
குண்டு வெடித்தபோது, அருகில் உள்ள கட்டடத்தில் இருந்தேன். உடனடியாக அனைவரும் அவரசமாக கீழ் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
ரமலான் மாதத்தில் மக்கள் பசியோடும் இருந்தார்கள். இதைப் பார்த்து பயந்துவிட்டார்கள்.
மூன்று பேரின் சடலங்களை நான் பார்த்தேன். அவர்கள் தாக்குதல் நடத்தியவர்களா அல்லது இலக்கானவர்களா எனத் தெரியவில்லை. ரத்தம் சிதறி ரணகளமாகக் காட்சியளித்த அந்தக் கோரக் காட்சிகளைப் பார்த்தேன்.
நிலைமை மிக மோசமாக இருக்கிறது. பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.
குண்டு வெடித்த இடத்துக்கு அருகாமையில்தான் இந்தியத் தூதரகமும் இருக்கிறது.
ஒருவர் தற்கொலை குண்டுதாரியாக மாற முடிவு செய்யும்போது, பாதுகாப்புப் படையினரால் என்ன செய்ய முடியும்?
பல பேர், குரானை படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
எனது அலுவலக காரில், ஐ.நா (UN) முத்திரை பதிக்கப்பட்டிருந்தாலும், எல்லா சோதனைச் சாவடிகளிலும் நிறுத்தப்படுகிறது.
எல்லாம குழப்பமாக இருக்கிறது. ரமலான் மாதத்தில் இத்தகைய தாக்குதல் நடப்பது கவலையாக இருக்கிறது.
மூன்று பாதுகாவலர்களுடன், குண்டு துளைக்காத கார் என எனக்கு முழுப்பாதுகாப்பு உள்ளது. ஆனால், சாதாரண மக்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினம். சடலங்களைப் பார்ப்பது எங்களுக்கு அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது".
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்