You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை மலையக பள்ளிகளுக்கு இந்திய ஆசிரியர்களை அழைக்க எதிர்ப்பு
இலங்கையில் மலையக பெருந்தோட்ட பள்ளிக் கூடங்களில் சேவையாற்ற இந்தியாவிலிருந்து கணித மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை வரவழைப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
மலையக பெருந்தோட்ட பள்ளிக் கூடங்களில் பல வருடங்களாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக குறித்த பாடங்களில் மலையகத்தின் கல்வி நிலையில் பெரும் பின்னடைவு காணப்படுகின்றது.
மலையக பெருந் தோட்ட பள்ளிக் கூடங்களில் குறித்த காலத்திற்கு சேவையாற்றும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து 100 கணித , விஞ்ஞான ஆசிரியர்களை வரவழைப்பது தொடர்பாக கல்வி இராஜங்க அமைச்சர் வி இராதாகிருஷ்ணன், இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியை நாடியிருக்கின்றார். இது தொடர்பாக அவரால் முன் வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு கல்வி அமைச்சும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு - கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் கணித , விஞ்ஞான பட்டதாரிகளுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது.
இதன் காரணமாக அம் மாகாணங்களிருந்து ஆசிரியர்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில்தான் தமிழ்நாட்டிலிருந்து குறித்த பாட ஆசிரியர்களை வரவழைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி ராஜங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.
யோசனைக்கு எதிர்ப்பு?
இந்த யோசனைக்கு இலங்கையிலுள்ள ஆசிரியர் தொழிற்சங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. பெருன்பான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த யோசனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் "இந்த யோசனை கைவிடப்பட்டு பெருந் தோட்ட பகுதிகளிலுள்ள பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். அது சாத்தியப்படாவிட்டால் க.பொ. த உயர்தரம் கற்றவர்கள் பயிற்சி வழங்கப்பட்டு ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட வேண்டும். இதனை விடுத்து இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது " என்று கூறினார்.
"தங்குமிட வசதிகள் உள்ளிட்ட ஏனைய தேவைகள் பற்றி கவனம் செலுத்தும் போது செலவுகள் அதிகமாக இருக்கும்" என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதற்கு பதில் அளிக்கும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் " இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது .அவ்வாறு ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டால் இந்தியாவின் உதவியாகவே அது அமையும். அவர்களுக்கான செலவுகளை இந்திய அரசாங்கம் பொறுப்பேற்கும். சேவைக்காலம் முடிந்த பின்னர் அவர்கள் திரும்பி விடுவார்கள் " என்கின்றார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்