You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று வரலாற்றுப் பெருமையை மீட்டது எப்படி?
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கத்தை வென்று இந்திய அணி தனது நீண்ட காலத் தாகத்தைத் தணித்திருக்கிறது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை இந்தியா தோற்கடித்தது.
5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்ற இந்தப் போட்டியின் ஒவ்வொரு நொடியும் இதயத்துடிப்பை எகிற வைத்தன.
1980-களுக்குப் பிறகு பிறந்த இந்தியர்கள் முதல் முறையாக ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி பதக்கம் வென்ற செய்தியை இன்று செவிகுளிரக் கேட்டிருப்பார்கள்.
டோக்யோவில் ஆஸ்திரேலிய அணியுடனும் பெல்ஜியம் அணியுடன் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு மீண்டெழுந்து வந்து சாதனையைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா.
இந்த வெற்றியும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. கடைசி நொடி வரை பெனால்ட்டி கார்னர்கள் மூலம் இந்திய அணியின் அரணைத் துளைத்துவிட ஜெர்மனி வீரர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். அத்தத் தாக்குதலைத் திறமையாக முறியடித்த பிறகே இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.
டோக்யோவில் கிடைத்த "கடைசி வாய்ப்பு"
41- ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு இந்திய அணி ஒலிம்பிக்கில் ஒருமுறையேனும் அரையிறுதிப் போட்டிக்குக்கூடத் தகுதி பெறவில்லை.
டோக்யோவில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றாலும் வலிமையான பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.
அதனால் பதக்கம் வெல்வதற்கான கடைசி வாய்ப்பு இது. எதிரே நிற்பது ஜெர்மனி. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவைப் போலவே பெருமை கொண்ட அணி அது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர்.
போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜெர்மனி முதல் கோலை அடித்து முன்னிலைக்குச் சென்றது. ஜெர்மனி அணியின் டிமுர் ஓரூஸ், இந்திய அணியின் பாதுகாப்பு அரணை மிக லாவகமாக உடைத்துச் சென்று கோல் வலைக்குள் பந்தை அடித்தார்.
அந்த நிமிடத்திலேயே இந்திய அணி வேகம் பிடித்தது. நான்காவது நிமிடத்தில் ஜெர்மனியின் கான்ஸ்டன்டைனுக்கு கிரீன் கார்டு வழங்கப்பட்டது. அதனால் இரண்டு நிமிடங்களுக்கு 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலை ஜெர்மனிக்கு ஏற்பட்டது.
முதல் கால்பகுதியில் ஜெர்மனிக்கு அடுத்தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 10-ஆவது நிமிடத்தில் கிராம்புஸ்க் அடித்த பந்து இந்தியவின் கோலை நோக்கிச் சீறிப் பாய்ந்தது. ஆனால் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அதை அற்புதமாகத் தடுத்தார். மறு நிமிடத்திலேயே தண்டனை முடிந்து உள்ளே வந்திருந்த கான்ஸ்டன்டைன் அடித்த பந்து சில சென்டி மீட்டர் இடைவெளியில் கோலில் இருந்து தவறிச் சென்றது.
முதல் காற்பகுதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஜெர்மனிக்கு மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பைத் தாண்டி அவர்களால் முன்னேற முடியவில்லை.
இரண்டாவது கால் பகுதியில் கோல் மழை
இரண்டாவது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும் 17-ஆவது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்து சமன் செய்தது. நீலகண்ட சர்மா அளித்த பந்தை சிம்ரஞ்சித் அருமையாக கோலாக்கினார்.
பின்னர் இரு தரப்பு வீரர்களுமே தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கினர். இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வலுவான நிலைக்குச் சென்றது. இதே போல் இந்திய அணியும் இரண்டு கோல்களை அடித்தது. இதனால் இரு அணிகளும் 3-3 என்ற கோல்கணக்கில் சமநிலை பெற்றன. இரண்டாவது கால் பகுதியில் மட்டும் மொத்தம் ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன.
மூன்றாவது கால் பகுதி ஆட்டம் தொடங்கியதுமே இந்திய அணி பெனால்ட்டி கார்னர் மூலம் இன்னொரு கோலை அடித்தது. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரஞ்சித் சிங் மற்றொரு கோலை அடித்தார் இதனால் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
கடைசி நொடி "பெனால்ட்டி கார்னர்"
பரபரப்பான கடைசி கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனி இந்திய பாதுகாப்பை உடைப்பதில் தீவிரம் காட்டினார். பல நேரங்களில் அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. எனினும் 48-ஆவது நிமிடத்தில் லூகாஸ் வின்ட்ஃபெடர் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடித்தார்.
இதனால் கடைசி 10 நிமிடங்களும் பரபரப்பாகவே சென்றன. இன்னும் ஒரு கோல் அடித்தால்கூட சமநிலைக்குச் சென்றுவிடலாம் என்ற முனைப்பில் ஜெர்மனி வீரர்கள் அதிரடியான தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கினர்.
நான்கரை நிமிடங்கள் இருந்தபோது கோல்கீப்பரையும் களத்துக்குள் கொண்டு வந்து தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தியது ஜெர்மனி. 11 ஜெர்மானிய வீரர்களும் இந்தியாவின் கோலை நோக்கியே இயங்கிக் கொண்டிருந்தனர்.
ஆறு விநாடிகளே இருந்தபோது ஜெர்மனிக்கு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கொடுக்கப்பட்டதால், பதற்றம் அதிகமானது. ஆயினும் கோலை நோக்கி அடிக்கப்பட்ட பந்தை இந்திய வீரர்கள் தடுத்தனர். இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது.
ஒரு வெண்கலத்துக்கு இந்தியா கொண்டாடுவது ஏன்?
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெல்லும் 12 ஆவது பதக்கம் இது. இவற்றில் எட்டு தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் ஆகியவை அடங்கும். ஜெர்மனி அணி இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றிருக்கிறது.
அந்த வகையில் ஒலிம்பிக் வரலாற்றில் மிகச் சிறந்த ஹாக்கி அணி என்ற பெருமையை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. 1928 முதல் 1956 வரை இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது.
ஆனால் அந்தப் பெருமையெல்லாம் 1980-ஆம் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் வரைதான். பிறகு படிப்படியாக திறமையும் புகழும் மங்கத் தொடங்கியன. பலமுறை இழந்த பெருமையை மீட்பதற்கு இந்திய அணி முயற்சி செய்திருக்கிறது. ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.
அதிகபட்ச சோதனையாக 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. லண்டன் ஒலிம்பிக்கில் 12-ஆவது இடம் ரியோ ஒலிம்பிக்கில் 8-ஆவது இடம் என சமீப காலமாக பதக்கத்துக்கு அருகே கூட இந்திய அணி செல்லவில்லை.
டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வலிமையான அணியாகக் கருதப்பட்டாலும் ஆஸ்திரேலிய அணியுடனான லீக் போட்டியில் 1-7 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இது அணியின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியது.
ஆனால் அதன் பிறகு விடா முயற்சியுடன் ஸ்பெயின், அர்ஜென்டினா, பிரிட்டன் என ஏ பிரிவில் உள்ள மற்ற அனைத்து அணிகளையும் தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.
கடந்த 40 ஆண்டுகளில் பிறந்த இந்தியர்களுக்கு ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா பதக்கம் வென்றது என்ற செய்தியைக் கேட்கவே வாய்ப்புக் கிடைத்திருக்காது.
1983-இல் கபில்தேவ் தலைமையிலான அணி உலகக் கோப்பையை வென்ற பிறகு கிரிக்கெட்டே அவர்களுக்கு நினைவில் இருந்திருக்கும். இனி அவர்கள் கிரிக்கெட்டைப் போலவே ஹாக்கியையும் கொண்டாடத் தொடங்கக்கூடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்