You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பரியேறிய ரூபா: சமூக தடைகளை உடைத்தது எப்படி? - தமிழகத்தின் முதல் பெண் ஜாக்கியின் வெற்றி கதை
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஒருகாலத்தில் இந்தியாவில் பெண்கள் தங்கள் வீட்டின் படி தாண்டுவதற்கே தடை இருந்தது. சமையலறையைத் தாண்டாத பெண்களுக்குக் கல்வியே எட்டாக்கனியாக இருந்தது.
19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் சுதந்திரத்துக்கு முதல் படியாகக் கல்வியும், அதனால் கிடைத்த வேலைவாய்ப்புகள் மற்றும் பதவிகள் வெளியுலகத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தன.
ஆனால், இந்தியாவில் விளையாட்டுத்துறையில் பெண்கள் கோலோச்சத் தொடங்கியது வெகு அண்மையில்தான்.
தடகளம், குத்துச்சண்டை, பேட்மின்டன், மல்யுத்தம், கிரிக்கெட் என பல விளையாட்டுகளிலும் பெண்கள் சாதிக்கத் தொடங்கினர். போட்டிகளில் வெல்லவும், பதக்கங்களையும் குவிக்கவும் ஆரம்பித்தனர்.
ஆனாலும், குதிரையேற்றம் போன்ற விளையாட்டுகளில் ஆண்களே சாதித்து வந்தனர்.
ராணி மங்கம்மா, ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் போன்றவர்கள் குதிரை ஏறிப் போர் புரிந்ததாக கதைகளைக் கேட்டுள்ளோம், சித்திரங்களைப் பார்த்துள்ளோம். ஆனால், சமகாலத்தில் குதிரை பந்தயங்களில் ஆண்களே ஜாக்கியாக இருந்துவந்த நிலையில், முதல்முறையாக அந்த தடையை உடைத்தவர் ரூபா சிங்.
சென்னையை சேர்ந்த ரூபாவின் பூர்வீகம் ராஜஸ்தான். இந்தியாவின் முதல் பெண் ஜாக்கியான (தொழில்முறை நடத்துநர்) ரூபா சிங், குதிரை பந்தயத்துறையில் தான் சந்தித்த சவால்களையும், அதில் அடைந்த உயரங்களையும் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.
''சிறுவயது முதலே குதிரைகள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் என் வாழ்வில் ஓர் அங்கமாக இருந்துவந்தன. என்னுடைய தாத்தா இந்தியாவில் பிரிட்டன் ஆட்சியின்போது அவர்களின் ராணுவத்தில் உள்ள குதிரைகளைப் பராமரிக்கும் பணியிலிருந்தார்''
''மிகச் சிறு வயதில் அவருடன் நான் செல்லும்போது குதிரைகள் எனக்குப் பழக்கமானது. குதிரைகள் மற்றும் குதிரைப் பந்தயம் மீதான காதலும் அப்போதுதான் ஆரம்பித்தது'' என்று அவர் குறிப்பிட்டார்.
''மேலும் என் குடும்பத்தில் முதல் ஜாக்கியாக என் தந்தை இருந்ததும் குதிரைகளுடன் எனக்கு நெருக்கம் அதிகரிக்கக் காரணமாக இருந்தது. இளம் வயதில் நான் குதிரையிலேறி வலம் வந்ததும், குதிரைகள் கண்காட்சியில் கலந்து கொண்டதும் அப்போது எனக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது'' என்று ரூபா நினைவுகூர்ந்தார்.
''7,8 வயதிலேயே குதிரை கண்காட்சியில் நான் குதிரை மீதேறி வலம் வந்தது பலரையும் வியப்படைய வைத்தது. ஆனால், சில ஆண்டுகள் கழித்து ஒரு ஜாக்கியாக பணிபுரிவதை என் தொழிலாக தேர்ந்தெடுத்த பின்னர் பலர் அதை விமர்சனம் செய்தனர்''
''நண்பர்கள், உறவினர்கள் மட்டுமல்ல, ரேஸ்கோர்ஸில் பணிபுரிபவர்கள் கூட மறைமுகமாகவும், என் தந்தையிடம் கூட ஏன் உங்கள் பெண்ணை இந்த ஆபத்தான பணிக்கு அனுப்பவேண்டும் என்று வினவினர். அக்காலகட்டத்தில் பலரும் என்னை ஊக்குவிப்பதைவிட என் ஊக்கத்தைக் குறைப்பது போல பேசினர்'' என்று அவர் மேலும் விவரித்தார்.
இந்தியாவின் சார்பாக குதிரை ஜாக்கியாகப் பல வெளிநாடுகளுக்குச் சென்று போட்டிகளில் கலந்துகொண்ட அவர் அது குறித்து கூறுகையில், ''இலங்கை, வளைகுடா நாடுகள், போலந்து, ஜெர்மனி எனப் பல நாடுகளுக்கும் சென்றுள்ளேன். ஐரோப்பிய நாடுகளில் குதிரைப் பந்தயம் மற்றும் குதிரையேற்றம் போன்றவற்றின் மீது அதிக ஆர்வம் உள்ளது. அங்கு பெண்களும் இயல்பாக இந்த விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர்'' என்றார்.
தற்போது குதிரைகள் மற்றும் ஜாக்கிகளுக்கு பயிற்சியாளராக உள்ளார் ரூபா சிங்.
''ஜான்சி ராணி லக்ஷ்மிபாய், ராணி மங்கம்மா போன்ற வரலாற்று வீராங்கனைகள் குதிரையில் ஏறி வலம் வந்ததையும், போர் புரிந்ததையும் ரசிக்கும் மக்களில் பெரும்பாலோனோர், சமகாலத்தில் குதிரை ஏற்றத்தை தனது பணியாக ஒரு பெண் தேர்ந்தெடுத்தால் வியப்படைவதும், கேள்விகள் எழுப்புவதும் ஏன் என்று புரியவில்லை'' என்று ரூபா சிங் மேலும் கூறினார்.
''குதிரைப் பந்தயங்களில் சில சமயங்களில் சூதாட்டம் சம்பந்தப்பட்டிருப்பதால், இது பல கேள்விகளை எழுப்புகிறது. மற்றபடி இது ஆக்ரோஷமான மற்றும் ஆரோக்யமான விளையாட்டு என்பதை நான் வெளிப்படுத்துகிறேன்'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
குதிரைப் பந்தயத்தை ஒரு விளையாட்டாக, ஜாக்கியாக, பயிற்சியாளராக பணிபுரியும் பெண்களுக்கு அரசும், மக்களும் அங்கீகாரம் தர வேண்டும் என்பதை தனது விருப்பமாகவும், கோரிக்கையாகவும் ரூபா தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: