You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசு வேலை என்பதால் குப்பை அள்ளும் வேலையை பார்க்கும் கோவை எம்.பி.ஏ பட்டதாரி
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமலர் - கோவை மாநகராட்சி துப்புரவு பணியில் எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர்
கோவையில் எம்.பி.ஏ., படித்துவிட்டு எம்.என்.சி நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய கோவை பட்டதாரி ஒருவர் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியில் சேர்ந்தது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவு பணியாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். சமீபத்தில் நேர்காணல் நடத்தப்பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஐதராபாத்தில் எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய கோவையை சேர்ந்த சையத் முக்தார் அகமது அப்பணியை விட்டுவிட்டு துப்புரவு பணியில் சேர்ந்துவிட்டார்.
அரசு வேலையில் பணி நிரந்தரம், பாதுகாப்பு இருப்பதால், ரூ.35 ஆயிரம் மாத சம்பளம் பெற்ற, தனியார் நிறுவன வேலையை உதறிவிட்டு, ரூ.16 ஆயிரம் சம்பளத்தில் பணியில் சேர்ந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
தினத்தந்தி: "ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கே தெரியாது"
'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கே தெரியாது' என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாது. இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர் ஒரு நல்ல மனிதர். நன்றாக யோசிக்கக்கூடியவர். அவர் எடுத்து இருக்கும் முடிவு மக்களுக்கு நன்மையாகவே இருக்கும். அவர் மாதிரி புத்திசாலியை பார்க்க முடியாது. என் அண்ணன் நடிகர் கமல்ஹாசனும் அறிவாளி தான். அவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள். சீமானுக்கும், ரஜினிக்கும் சண்டை என்று சொல்கிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். சீமான் எனக்கு பங்காளி. ரஜினிகாந்த், கமல்ஹாசன் என் அண்ணன்கள். எல்லாம் சினிமாக்காரர்கள் தான். சண்டைக்கு வாய்ப்பே இல்லை. எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டை நல்ல படியாக கொண்டு வந்துவிடுவார்கள். தமிழ்நாட்டை காப்பாற்ற யார்? யாரெல்லாம் இறங்குகிறார்களோ? அவர்கள் பக்கம் நான் நிற்பேன்." என்று வடிவேலு கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தினமணி: "குறைந்த டாஸ்மாக வருமானம்"
டாஸ்மாக் மூலமான அரசுக்கான வருவாய் நடப்பாண்டில் குறைந்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
இது தொடா்பாக மதுவிலக்கு ஆயத்தீா்வை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2017-18-இல் டாஸ்மாக் மூலம் அரசுக்கு மொத்தமாக ரூ.26,798 கோடி வருவாய் வந்துள்ளது. அது, 2018-19-இல் 31,158 கோடியாக உயா்ந்துள்ளது. ஆனால், 2019-20-இல் (பிப்ரவரி 29-ஆம் தேதி வரை) 28,839 கோடியாக குறைந்துள்ளது.
மேலும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பீா் பெட்டிகளின் மூலமாக கிடைக்கும் அரசுக்கான வருவாயும் குறைந்துள்ளது.
ஏற்றுமதி செய்யப்பட்டதில் 2018-19-இல் அரசுக்கு ரூ.578 கோடி வருவாய் வந்துள்ளது. ஆனால், 2019-20-இல் (பிப்ரவரி 29-ஆம் தேதி வரை) ரூ.340 கோடியாக குறைந்துள்ளது.
இந்து தமிழ் திசை: கொரோனா வைரஸ்: சுத்தம் செய்யப்படும் பேருந்துகள்
தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்து விரைவுப் பேருந் துகளும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவிட் - 19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு முதல்வர் உத்தரவிட்டார். குறிப்பாக, பயணிகள் அதிகம் பயணம் செய்கின்ற பேருந்துகளைத் தினமும் முறையாகப் பராமரித்து, சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கு.இளங்கோவன் கூறியதாவது:
அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் ஏறத்தாழ 1,082 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. அதில் பயணிக்கின்ற 70 ஆயிரம் பயணிகளின் நலனைப் பாதுகாத்திடும் வகையிலும், கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அந்தந்த பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் சுகாதார முறையில் பேருந்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம், படுக்கை, இருக்கை, படுக்கை விரிப்புகள், தலைக்கவர், ஜன்னல் திரை ஆகியவை கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பிறகே பேருந்துகளை இயக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகிறது திமுக"
சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரத்தில் அச்ச உணா்வை ஏற்படுத்த வேண்டாம், தமிழகம் தொடா்ந்து அமைதியான மாநிலமாகத் திகழ ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று முதல்வா் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
"பொது மக்களிடமும், சிறுபான்மை மக்களிடமும் ஒரு அச்ச உணா்வை ஏற்படுத்தி வருகிறீா்கள். இப்படி ஆகிவிடும், அப்படி ஆகிவிடும். வெளி நாட்டுக்கு அனுப்பி விடுவாா்கள் என்று அனைத்து இடங்களிலும் பேசிக் கொண்டிருக்கிறீா்கள். மேலும், மத்திய அரசிடம் இந்த ஆட்சி பயந்து கொண்டிருக்கிறது, இவா்களெல்லாம் சிறைக்குப் போய்விடுவாா்கள் என்று சொல்கிறீா்கள். எந்தக் காலத்திலும் அது நடக்கவே நடக்காது," என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் அதிகரித்த உயிரிழப்பு; அவசர நிலை அறிவிப்பு - அண்மைய தகவல்கள்
- மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் - என்ன காரணம் தெரியுமா?
- மலேசியாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வில் கொரோனா நோயாளி: பலருக்கும் பரவி இருக்கலாம் என அச்சம்
- கொரோனா வைரஸ்: ஹோமியோபதி சிகிச்சையால் குணப்படுத்த முடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: